சிறுவயதில் கோவையிலிருந்து பாலக்காடு அல்லது குருவாயூர் செல்கையில் அரசு போக்குவரத்தில் ஏறினால் உள்ளே கும்மிருட்டாய் இருக்கும். வெளியே பெய்யும் மழையின் அறிகுறி உள்ளே துளியும் இராது. மக்கள் ஒவ்வொருவரும் கைகளில் குடையுடன் ஏறி ரை ரை சொன்னவுடன் ஹவுஸ் புல்லாக ஓடும் பேருந்து. ஆனால் இப்போது அங்கேயும் நிலைமை வேறு. சரி, அதைப்பற்றி நமக்கெதுக்கு?
அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் மேல்தட்டு மக்கள் தமக்கான பயணத்தை கார்களிலும் டாக்சிகளிலும் மாற்றிவிட்ட நிலையில் ஏழை மக்களும், மிடில் கிளாஸ் மக்களும் இன்றளவும் பயன்படுத்தும் போக்குவரத்து அரசு பஸ்கள் மற்றும் இரயில்களைத் தான். ஆனால் அவற்றின் நிலைமை எப்படி இருக்கிறது? தமிழ் நாட்டில் எப்பவாவது மழை பெய்கிறது என்பதாலோ என்னவோ நம் தமிழ்நாட்டில் பேருந்துகளிலோ, இரயில்களிலோ மழைக்கான எந்த முன்னேற்பாடுகளும் இன்றி சிறப்பான நிலையில் உள்ளது.
வெளிநாடுகளில் பொது இடங்களில் பவுண்டன் என்று சொல்லப்படும் நீரூற்றுகள் ஆங்காங்கே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவற்றை மக்கள் காண வேண்டுமென்றால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். ஆனால் நம் ஊரில் மக்களுக்கு அந்த சங்கடங்கள் கொடுக்காமல் அவர்கள் பயணம் செய்யும் பேருந்திலேயே அண்ணாந்து பார்த்தால் பவுண்டன்கள் மக்கள் காணக் கிடைக்கும் வகையில் கூரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
தவிர, கீழ்த்தட்டு மக்கள் எப்போதாவது தான் அருவிகள், செயற்கை அருவிகளை எல்லாம் கண்டு ரசிக்க முடியும். ஆனால் தமிழ்நாட்டின் பேருந்துகளில் மழை நாளில் சன்னலோரம் அமர்ந்துவிட்டால் அடிக்கும் சாரலை அனுபவித்து நீங்களும் ஒரு வைரமுத்து ஆகலாம் இல்லை தெறிக்க விடும் மழை பார்த்து 'தல' ரசிகராகலாம். இவை எதுவும் இல்லாமல் சன்னலோரத்தை புறக்கணித்து எழுந்து நின்றால் நிச்சயம் உங்களுக்கு கலையை, இயற்கையை ரசிப்பதில் குறைபாடுகள் இருக்கிறது.
அதுமட்டுமா, எல்லோருக்கும் சன்னலோரம் கிட்டிவிடாது. அப்படி வருத்தப்படும் மற்ற பயணிக்களுக்காய் பேருந்தின் உள்ளேயே டிரைவர் எஞ்சினுக்கும், கண்டக்டர் சீட்டிற்கும் நடுவே ஒரு அகலமான நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வசதி சொகுசு பேருந்து மட்டுமல்லாமல் ஒயிட் போர்டுகளிலும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாநில மக்களுக்கு இந்த வசதிகள் கிடைக்குமா என்பது சந்தேகமே!
பேருந்தில் மட்டும் இந்த வசதிகள் செய்து கொடுத்து மற்ற போக்குவரத்து சாதனங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவில்லை. இரயில்களிலும் ஓரளவு சின்ன நீச்சல் குளங்களும், சன்னலோர அருவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. தவிர இரயில்களில் கூடுதலாக தாமதமாக வரும் பயணிகளுக்காக எல்லா இரயில்களும் குறைந்தது இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படுகின்றன. இவையெல்லாம் இரயில் பஸ்களோடு நின்று விடாமல் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்க கூரைகளை மாலைகளாய் அணிவித்து வரவேற்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சேவைகளை அனுபவித்தபடியே சந்தோஷமாக தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!!
என்னத்த சொல்ல....நேற்று ஒரு பேருந்தில் வந்தேன்...அப்படி ஒரு மழை பேருந்து முழுவதும்....எல்லாரும் நின்றுகொண்டே.....ஓட்டுனர் பாவம்....குளித்துக்கொண்டே ஓட்டினார்...எனக்கு பயம்...ஒருவேளை அவரும் எழுந்து நின்றுவிட்டால்...ம்ம்ம்ம்
ReplyDeleteம்ம்ம்.. நியாயமான பயம் தான்..
Deleteஇவ்வளவு வசதிகள் செய்தும் மக்கள் திருப்தி அடையமாட்டேன் என்கிறார்களே? அதை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteஅதானே!
Deleteஅப்போ இனி மழைக்காலங்களில் வீட்டுல குளிக்க வேண்டாம். சோப், ஷாம்பு செலவும் மிச்சமாகும் போல!!
ReplyDeleteஆவி! என்னப்பா எல்லாருக்கும் நீச்சல் குளம் பைசா கொடுத்து போக முடியுமா? வீட்டு வாசலிலேயே வந்தால் கேட்கணுமா? படகு சவாரியும் நடக்கின்றது...என்று கேள்விப்பட்டேன். அடையாரில் முட்டி அளவு தண்ணீர் கணபதி ராம் த்யேட்டரின் பின்பக்கம் இருக்கும் தெருவில். வேளச்சேரியில் குளம் என்று கேள்விப்பட்டேன். எங்கள் வீட்டருகில் மினி ஸ்விம்மிங்க் பூல். இப்படி பல இடங்களில்...கோயம்பேட்டில் பேருந்து நிலையத்தில் ஏரி. போட் சர்வீஸ் இருக்கானு தெரில..
ReplyDeleteஎல்லோரும் ஏரி, குளங்கள், மினி ஸ்விம்மிங்க் பூல்களில் தீபாவளியை கன ஜோராக 1000/10000 வாலா நிறைய வெடித்துக் கொண்டாடுகின்றார்கள். ஒருவேளை எல்லா பட்டாசுக்கும் ரெயின் கோட் போட்டுருக்காங்க போல..நல்லாவே வெடிக்குது.
கீதா
அட ஏரி குளம் ஸ்விம்மிங்பூல் குடுத்துவச்சவக....ரெயின்கோட் போட்ட பட்டாசு வெடிக்க இடம் இருக்காம்மா..
Deleteஆஹா இப்படியொரு பயணம் மறக்கமுடியாததுதான்..என் தங்கை திருமணத்திற்காக முன்பு பேரூந்தில் சென்றபோது...நடந்து போயிருந்தாக்கூட அப்படி நனைஞ்சிருக்க மாட்டேன்...குளிக்க வச்சு அனுப்புனாக..
ReplyDeleteகுறைந்த செலவில் நிறைந்த வசதிகளை செய்து கொடுக்கிறது! மற்றும் பலருக்கு வருமானத்தையும் ஏற்படுத்தி தருகிறது! அதை பாராட்டாமல்.....?!
ReplyDeleteவேதனைப்பட வேண்டிய உண்மை...
ReplyDeleteஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteகிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னரே இப்படி ஒரு பேருந்தில் பயணித்திருக்கிறேன் - விருத்தாசலம் நகரிலிருந்து நெய்வேலி செல்லும் ஒரு டவுன் பஸ்ஸில்! வெளியே பெய்ததை விட உள்ளே அதிக மழை. என்ன ஒரு வசதி......
ReplyDeleteஉங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
எதையோ இலவசமாக தந்தோம் சந்தோஷமாக வாங்கிட்டிங்க தானே?
ReplyDeleteஇப்போது ஒரு காசு செலவில்லாமல் அனைத்தையும் இலவசமாக அனுபவிங்க என அனுமதித்திருப்பார்களோ என்னமோ?
ஆனால் நம் ஊரில் மக்களுக்கு அந்த சங்கடங்கள் கொடுக்காமல் அவர்கள் பயணம் செய்யும் பேருந்திலேயே அண்ணாந்து பார்த்தால் பவுண்டன்கள் மக்கள் காணக் கிடைக்கும் வகையில் கூரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
ReplyDeleteஹ ஹ ஹ உண்மைதான்
Joshva