Showing posts with label Fiction. Show all posts
Showing posts with label Fiction. Show all posts

Friday, January 8, 2016

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (6)

 பகுதி 1    பகுதி 2   பகுதி 3  பகுதி 4 பகுதி 5

டோனா பாலாவில் அவள் கூறியதைக் கேட்டவுடன் துரிதமாகச் செயல்பட்டேன். அவளையும் அவள் குடும்பத்தையும் காப்பாற்றுவது என
தீர்மானித்தேன். அவளிடம் சென்னையில் உள்ள அவளது அப்பாவையும் தம்பியையும் இடம் மாறும்படி கூற சொல்லிவிட்டு கொல்கத்தாவில் இருந்த என் நண்பனுக்கு அழைத்தேன். சிறிது நாட்கள் இடம் மாற்றமே இந்தப் பிரச்னைக்கு ஒரு தற்காலிக தீர்வாய்த் தோன்றியது. டோனா பாலாவில் இருந்து அவளுடைய காரில் கொல்கத்தா நோக்கிப் பயணித்தோம். மும்பை வழி செல்ல வேண்டாம் என்று அவள் கூறியதால் அன்றிரவு விசாகப்பட்டினம் சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை கொல்கத்தா செல்ல முடிவெடுத்து பயணத்தை துவக்கினோம். இருவரும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுனர் இருக்கையை பகிர்ந்து கொண்டே விசாகப்பட்டினம் அடைந்தோம். அங்கிருந்த ஒரு ஹோட்டலில் நான் காரை பார்க் செய்து வருவதற்குள் அவள் தங்கும் அறையை புக் செய்திருந்தாள்.

அறை எண் முன்னூற்றி ஒன்று, இந்த எண் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு எண்ணாக மாறிவிட்டதாய் உணர்ந்த நாள் அது. இருவர் தங்கக்கூடிய அந்த அறையில் அவள் உடைமாற்றிக் கொள்ள வசதியாய் அறைக்கு வெளியே நின்றிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் கதவைத் திறக்க உள்ளே சென்று அவள் கேட்ட ரெட் ஒயினையும், எனக்கு வோட்கா வும் இருவருக்கும் உணவும் போனில் ஆர்டர் செய்துவிட்டு அவள் அருகே அமர்ந்தேன். "அம்மா கிட்ட சத்தியம் செய்திருக்கிறேன், குடிக்க மாட்டேன், என்று சொன்னதாய் ஞாபகம்." என்றாள். "ஆமாம், அம்மாவிடம் பீர் எல்லாம் அடிப்பதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். இன்றுவரை பீர் அடித்ததே இல்லை. ஹாட் மட்டும் தான்" "யூ நாட்டி" என்று என் கன்னங்களைக் கிள்ளினாள். சற்று நேரத்தில் நாங்கள் ஆர்டர் செய்த மதுவும், உணவும் வந்து சேர்ந்தது.

இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே மதுவை அருந்தினோம். மணி பன்னிரெண்டைத் தாண்டியும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த அறையின் பால்கனியிலிருந்து தெரிந்த முழு நிலவும் அவள் முகமும் ஒன்று போலத் தோன்றியது எனக்கு. அந்த வெள்ளைப் பனிக்கு நடுவே ஓர் சிவப்பு ரோஜாவாய் அவள் இதழ்கள். வோட்கா தந்த போதையும் அவள் இதழ்கள் தந்த கிறக்கத்திலும் அவள் இதழ்களில் இதழ் பதித்தேன். அவள் சட்டென விலகிச் சென்றாள். "ஐயாம் சாரி, நான்.." சற்று தடுமாற்றத்துடன்  "ஐ திங்க் ஐ லவ் யூ.." என்றேன். நான் செய்த செயலுக்காக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன். நிமிர்ந்த போது அவள் அருகே அமர்ந்திருந்தாள். "மீ டூ கார்த்திக்" என்றவாறு என்னைக் கட்டியணைக்க, வானில் இருந்த வெண்ணிலவு மேகத்தோடு கலந்து காதல் செய்தது. அன்றைய நள்ளிரவு நல்லிரவாய்க் கழிந்தது.


அந்த இரவின் முடிவு எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருந்தது.
எங்கள் உறவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருந்ததாய் உணர்ந்தேன். விசாகப்பட்டினத்திலிருந்து கொல்கத்தா வரையிலான  எங்கள் பயணத்தில் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது. அவளிடம் என் வாழ்க்கைத் திட்டமிடல்களை விவரித்துக் கொண்டே வந்தேன். அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டேன். முடிந்து போன அவள் பிறந்த நாளுக்கு ஒரு நீல நிற சுடிதார் பரிசளித்தேன். "சங்கு, இந்த ப்ளூ சுடிதார் நான் உனக்குக் கொடுக்கும் முதல் காதல் பரிசு. இதை நீ நம்ம காதலின் நினைவுச் சின்னமா  எப்பவும் வச்சிருக்கணும்."  க்ளீஷே வான இந்த டயலாக்கை சொல்லியவுடன் அவள் என்னைப் பார்த்து "டோன்ட் ஒர்ரி,  நான் செத்துப் போனாக் கூட இதே சுடிதாரில் தான் வருவேன், போதுமா?" என்று கண்களை உருட்டி சந்திரமுகி ஜோதிகா போல் பேசிவிட்டு சிரித்தாள். 


அந்த நெடும் பயணம் சுகமான ஒன்றாக அமைந்தது அவளின் ஆங்கிலம் கலந்த பிள்ளைத் தமிழ் வார்த்தைகளாலா, இடையிடையே அவள் சிந்திய புன்னகைத் துளிகளாலா என்று அறியாமல் தவித்திருந்தேன்.  கண்மூடி உறங்கும் நேரம் கற்றை முடிகள் குறுக்கே விழுந்து அவள் முகத்தை மறைத்த போது வண்டியை நிறுத்தி அந்த முடிகளை ஒதுக்கிவிட்டு அவள் முகம் பார்த்தபடியே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன். அவளிடம் காதல் சொன்ன கணம் முதலாய் அவளுடன் வாழத் துவங்கியிருந்தேன். அவள் தான்  என் வாழ்க்கைத் துணை, இனி ஒருநாளும் அவளைப் பிரிவதில்லை என ஓர் உறுதி எடுத்துக் கொண்டேன்.  கொல்கத்தாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். ஆயிரம் காலத்துப் பயிரை எண்ணியபடி மகிழ்வுடன் இருந்த நான் அடுத்த ஆயிரம் நிமிடங்களில் நிகழப் போகும் விபரீதத்தை அப்போது உணர்ந்திருக்கவில்லை.



அந்த நிமிடங்களை இப்போது நினைக்கும் போதும் ஒவ்வொரு செல்லிலும் வலிக்கிறது, உள்ளத்தில் வேதனை அதிகரிக்க, கண்களில் ஏதோ ஒரு இருள் சூழ ஆரம்பிக்கிறது. என் சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்த போது அங்கே நான் வந்த பஸ் என்னை விட்டுவிட்டு புறப்பட்டிருந்தது. நான் பதறியபடி என்ன செய்வதென்று சிந்தித்தபடியே கையில் இருந்த குளம்பியை ஒரே மிடற்றில் குடித்து முடித்தேன். கிளாஸை கடையில் வைக்கச் சென்ற போது தான் கவனித்தேன். அதில் அவள் முகம் தெரிந்தது. அது மட்டுமல்லாமல் அந்த கிளாஸில் குளம்பி முழுவதுமாய் நிரம்பி இருந்தது.

-தொடரும்.






Thursday, December 24, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (5)

 பகுதி 1    பகுதி 2   பகுதி 3  பகுதி 4


                  தன்னை கொலை செய்யத் தான் அந்த கார் வந்தது என்று அவள் உறுதியாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அவளை ஆதரவாகப் பற்றி அவள் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றேன். அறையின் உள்ளே நுழைந்ததும் சற்றே அதிர்ந்து நின்றேன். அறை முழுவதும் கலைந்த நிலையில் இருந்தது. அவள் ஆடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. மேசைகள், நாற்காலிகள் கவிழ்ந்திருந்தன. மெத்தை முழுவதுமாக கிழிக்கப்பட்டு உள்ளிருந்த பஞ்சு அறையெங்கும் பரவியிருந்தது. சிதறல்களை ஒவ்வொன்றாய் அப்புறப்படுத்த எண்ணிய நான் அப்போது தான் அவளைக் கவனித்தேன். அங்கே நடந்த எதுவும் அவளை பாதித்ததாய்த் தெரியவில்லை. சிறிதும் கவலைப்படாமல் டைனிங் டேபிளுக்கு அருகே வந்தவள் அதன் மீது ஏறினாள். பின் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த அலங்கார விளக்கு ஒன்றினை கழற்ற முயற்சித்தாள். அதன் மேல் பாகம் தனியாக கழன்று வந்ததும் உள்ளே கைவிட்டு எதையோ எடுக்க முயற்சித்தாள். ஓரிரு நொடிகளில் ஏதோ நெக்லஸ் போன்ற சாதனம் அவள் கைகளில் இருந்தது.


                  மேசையின் மீதிருந்து இறங்கிய அவள், நான் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்து "நல்லவேளை, இந்த டயமன்ட் பென்டன்ட் என் அம்மா எனக்காக கொடுத்தது. ஸேஃப்டிக்காக இங்கே வச்சிருந்ததால தே குட் நாட் ஃபைன்ட் இட்"  என்றாள். "ஹூ ஆர் 'தே' ?" என்று நான் கேட்ட கேள்வியை காதில் வாங்கியதாயத் தெரியவில்லை. கீழே விழுந்திருந்த  ஆடைகளில் சிலவற்றை ஒரு பேக் பேக்கில் (Backpack) திணித்துக் கொண்டே "வீ ஹாவ் டூ லீவ் டூ சம் அதர் பிளேஸ்" என்றவள் ஒரு இடைவெளி விட்டு "மே பி யுவர் பிளேஸ்?" என்று என்னைப் பார்த்தாள். என் அறை அவள் சொகுசுக்கு சிறிதும் ஏற்றதாய் இருக்காதே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே என் மனதைப் படித்தவளாய் "டோன்ட் ஒர்ரி, ஐ வில் அட்ஜஸ்ட்" என்றபடி "லெட்ஸ் கோ" என்று என் கைகளை பற்றியபடி வெளியேறினாள். காரில் ஏறி அமர்ந்தவளிடம் என் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டே " ஹோட்டல் வெக்கேட் பண்ண வேண்டாமா?" என்ற என்னைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தபடி காரின் ஆக்சிலேட்டரை தன் கால்களால் முத்தமிட்டாள்.


                   ஆனால் அவள் நேராக என் அறைக்குச் செல்லவில்லை. அங்கிருந்து புறப்பட்ட அவள் என் ஹோட்டல் இருந்த திசைக்கு எதிர்திசையில் செல்ல ஆரம்பித்தாள். மிராமர் கடற்கரையும் தாண்டி சென்று கொண்டிருந்தாள். "ம்ம்ம்.. நாம இப்ப எங்க போறோம்?" "டோனா பாலா. ஹேவ் யூ பீன் தேர் பிபோர்?"  "நோ.. இதுவரைக்கும் மூணு வருஷம் வந்திருக்கேன். பட் ஐ ஜஸ்ட் வாட்ச் மூவிஸ் ஆல் தி டே." என்றேன். "வாட், தி  ஹோல்  டே?" என்று என்னை ஒரு வினோத பிராணியைப் பார்ப்பது போல் பார்த்தாள். "யா, ஐ லைக் டு வாட்ச் மூவீஸ், சில நாள் ஏழு படங்கள் வரைக்கும் தொடர்ந்து பாத்த்திருக்கேன்." "ஆர் யூ கிரேசி ஆர் வாட்?  எனக்கும் சினிமா பார்க்கப் பிடிக்கும், ஆனா ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூணு படம் பார்க்கலாம். ஹவ் கேன் யூ டூ தட்? என்றபடி எழில்மிகு  கோவாவின் சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தாள். சாலையின் இருபுறமும் தமிழ்நாட்டின் சிறிய உணவகங்கள் போன்ற அமைப்பில் இருந்த ரெஸ்டாரென்டுகள். எல்லா ரெஸ்டாரென்ட்டின் முன்புறமும் ஒரு மதுக்கடை இருந்தது. சாலைகள் சொல்லிக் கொள்ளும்படி சிறப்பான சாலைகள் இல்லையென்றாலும் பயணம் சிரமமில்லாமல் கடந்தது. 






                          டோனா பாலா ஒரு கடற்கரை இல்லை என்ற போதும்,  வெளிநாடுகளில்  இயற்கைக் காட்சிகள் காண்பதற்கென வ்யூ பாயிண்டுகள் (View Points) அமைத்திருப்பார்கள். இதுவும் அதுபோன்ற ஒரு அமைப்பு தான், இங்கிருந்து கோவாவின் கடலையும் கடலலைகளையும் ரசிக்கலாம். மேலும் போட் ஜெட்டி (Boat Jetty) இங்கிருந்ததால் படகுகளை வாடகைக்கு அமர்த்தியோ, நாமே செலுத்தியோ வரலாம். அங்கிருந்த ஒரு குன்று போன்ற அமைப்பில் பொதுமக்கள் அமர ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் இருவரும் அதில் போடப்பட்டிருந்த ஒரு சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தோம். சில நிமிட அமைதிக்குப் பின் எனக்குள் அரித்துக் கொண்டிருந்த கேள்விகளை கேட்டேன். " யார் உன்னைக் கொல்ல வந்தது? ஹோட்டல் அறையில்  வந்து ஏதோ தேடியிருக்கிறார்களே, அவர்களும் இவர்களும் ஒன்றா? அவர்கள் ஏன் உன்னை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும்? " அவள் சிமென்ட் பெஞ்சினின்றும் எழுந்து முன்னே இருந்த ஒரு தடுப்பு சுவரில் சாய்ந்தபடி கடல் அலைகளைப் பார்த்தபடி நின்றாள். நான் எழுந்து வந்து அவள் அருகே நின்று,  "டெல் மீ சங்கு, வாட்ஸ் ஹாப்பனிங்?" 


                                சங்கு என்று நான் உரிமையுடன் அழைத்ததும் அவள் கண்களில் நீர்த்துளிகள். என்னருகே வந்து என் மார்பில் 
சாய்ந்தபடி, "என் அம்மாவுக்குப் பிறகு என்னை சங்குன்னு கூப்பிட்டது நீங்க தான். யூ ரிமைண்டட் மீ மை மதர். " என்று அழ ஆரம்பித்தாள். "ஹே கமான் ரிலாக்ஸ்" அவளை அணைத்தவாறு அவள் முதுகில் ஆதரவாய் தட்டிக் கொடுத்தேன். "கார்த்திக், ஐ ட்ரஸ்ட் யூ லாட். அதனால் தான் இதை உங்கிட்ட சொல்றேன். ப்ளீஸ் சேவ் மீ ப்ரம் திஸ் ஹெல். " "என்ன நடந்ததுன்னு விவரமா சொல்லு" அவள் தன் அணைப்பின் இறுக்கத்தை அதிகப் படுத்திக் கொண்டாள். "லாஸ்ட் வீக் நான் கோவாவுக்கு ஃப்ளை பண்ணி வந்தேன். அப்போ என் பக்கத்துல உட்கார்ந்தவர் கிட்ட நான் வழக்கமா பேசுற மாதிரி பேசிகிட்டே வந்தேன். ஹிஸ் நேம் இஸ் விஷால் ரெட்டி, எ பிசினஸ் மேக்னட் ஃப்ரம் மும்பை. எதோ கான்பிரன்ஸ்காக சென்னை வந்துட்டு இன்னொரு மீட்டிங்கிற்காக அந்த ஃபிளைட்ல வந்தார். வீ பிக்கேம் பிரண்ட்ஸ். 


                                   ஏர்போர்ட்டில் இறங்கியதும், ஹீ கால்ட் மீ ஃபார் எ காபி. நானும் போனேன். பட் அங்க  காபி குடிச்சது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு. அதுக்கப்புறம் அந்த Marriot ஹோட்டல்ல இருந்தேன். ஹீ டுக் அட்வான்டேஜ் ஆன் மீ. நான் மறுத்து வெளியேற முயற்சித்தப்போ அவன் ஆசைக்கு இணங்காம அவன்கிட்ட இருந்து தப்பிக்க நினைச்சா என்னையும் சென்னையில இருக்கிற என் ஃபேமிலியையும் கொன்னுடுவேன்னு மிரட்டினான்.. போன வாரம் வரை எனக்கு அவன்கிட்ட இருந்து தப்பிக்க தைரியம் இல்லை. ஆனா உன்னை பார்த்ததுக்கப்புறம் தான் எனக்கு ஒரு வெளிச்சம் தெரிஞ்சது கார்த்திக். நேத்து உன்னோட என்னை சேர்த்து வைத்து பார்த்ததால் அவனுக்கு கோபம் வந்திருக்கணும். அதான் என்னைக் கொல்ல ஆள் அனுப்பியிருக்கான். ப்ளீஸ் சேவ் மீ ஃப்ரம் ஹிம்." என்று என் மார்பில் தலை வைத்து அழுதாள். அவளை சமாதானம் செய்யும் பொருட்டு என் இரு கைகளாலும் அவளைக் கட்டியணைத்தேன். 


                                         பஸ் மீண்டும் நின்றதில் என் நினைவோட்டம் தடைபட்டது. இம்முறை தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்பட்டது. பெயர்ப்பலகைகள் மதுரைக்கு அருகே இருக்கிறோம் என்றது. நானும் தேநீர் குடிக்க இறங்கிய போது டிரைவர் வேண்டுமென்றே இடித்துவிட்டு என்னை முறைப்பது போல் பார்த்துச் சென்றார். என் மாமாவிடம் சென்று ஏதோ கூற அவரோ "உனக்கு வேற வேலையில்ல" என்று உரக்கக் கூறிச் சிரித்தார். ஆனாலும் அந்த டிரைவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். தேநீரைக் கைகளில் வாங்கினேன்.  சூடாக புகை வந்தபோதும் அதை வாயில் வைத்த போது சில்லென்ற உணர்வே வந்தது. சென்ற முறை குளம்பி அருந்திய போதும் இதே உணர்வு தான்  இருந்தது. இரண்டாவது முறை தேநீரை உறிஞ்சிய போது சங்குவுடன் விசாகப் பட்டினத்தில் காபி டேவில் கோல்ட்  காபி அருந்தியது நினைவுக்கு வந்தது..!



-தொடரும்..

Tuesday, November 24, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (4)

 பகுதி 1    பகுதி 2   பகுதி 3

                   நான் கண்விழித்த போது எனக்கு மேலே மின்விசிறி சுற்றிக் கொண்டிருந்தது. அந்தக் கட்டிலில் இருந்து எழுந்து சோம்பல் முறித்து, அவசர அவசரமாய் குளித்து திரைப்பட விழாவிற்குச் செல்ல ஆயத்தமானேன். மணி எட்டை தாண்டிவிட்டபடியால் காலை உணவைப் புறக்கணித்துவிட்டு நேராக திரைப்படங்கள் திரையிடும் ஐநாக்ஸ் திரையரங்கிற்கு ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தேன். நான் பார்க்க வேண்டிய திரைப்படத்தின் அரங்கை சரிபார்த்துக் கொண்டு அந்த வரிசையில் வந்து நின்றேன். படம் துவங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்ததால் கையில் வைத்திருந்த ரவி சுப்ரமணியத்தின் "Bankerupt" புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். "ஹெல்லோ " என்ற ஒரு பெண் குரல் கேட்டு புத்தகத்தை கீழ் இறக்கினேன்.

                       என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அங்கே சங்கமித்ரா நின்று கொண்டிருந்தாள். என்னை நோக்கி கூட்டத்தை விலக்கிக் கொண்டே உள்ளே வந்தாள். இந்த மக்கள் இருக்கிறார்களே, ஒரு பெண் வரிசையில் இல்லாமல் திடீரென்று உள்ளே நுழைந்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அதே ஒரு ஆண் செய்துவிட்டால் கொலைக் குற்றத்திற்கு ஈடாக சண்டைக்கு வருவார்கள். என்னருகே வந்தவள் என் கண்களை உற்று நோக்கியபடி "குட் மார்னிங்" என்றாள். நான் அவளிடமிருந்து "தேங்க்ஸ்" என்ற சொல்லைத் தான்  எதிர்பார்த்திருந்தேன். "டூ யூ ரியலி வான்ட் டூ வாட்ச் திஸ் ஒன்?" என்றாள். திரைப்படத்தை விடுவதற்கு மனமில்லை என்ற போதும் ஒரு அழகான பெண் இப்படி ஒரு கேள்வி கேட்கும் போது "இல்லை" என்று சொல்வதே ஆணுக்கு அழகு.. நானும் ஆண் வர்க்கத்தின் பெயரைக் காப்பாற்ற வரிசையிலிருந்து விலகி அவளுடன் நடக்க ஆரம்பித்தேன்.

                         அவள் நின்றது ஒரு பீர் ஸ்டாலின் முன்பு. "விச் ஒன் டூ யூ லைக் டு ஹாவ்?  ஸ்ட்ராங் ஆர் லைட்? " என்றவளிடம் வேகமாக தலையசைத்து "சாரி, ஐ டோன்ட் டிரிங்க் பியர்." என்றேன். அவளோ ஒரு கேவலமான பார்வையை வீசி சப்தம் வராமல் "வாட்" என்றாள் தோள்களை குலுக்கி. "ம்ம்ம்.. சின்ன வயசுலயே அம்மா சொல்லியிருக்காங்க, பியர் எல்லாம் குடிக்கக் கூடாதுன்னு, நானும் சத்தியம் செய்திருக்கிறேன்" என்றேன். "வாவ்" என்றபடி அவளுக்கான கிங் பிஷரை தேர்ந்தெடுத்து வாங்கி வந்தாள். பேசிக்கொண்டே அந்த வளாகத்தில் கார் பார்க்கிங்கிற்கு அருகே இருந்த ஒரு அகன்ற மரத்தின் நிழலில் அமர்ந்தோம். இப்போதாவது நேற்று அவளை கொண்டு சேர்த்ததற்கு நன்றி உரைப்பாள் என்று எதிர்பார்த்தேன். "ம்ம்ம் வாட்ஸ் யுவர் நேம்" என்றாள். "ஐயம் கார்த்திக். அண்ட் ஐ நோ யுவர் நேம்"  "ம்ம்ம், உங்க விஷஸ் பார்த்தேன்"
என்ற சொல்லோடு நிறுத்திக் கொண்டாள், ஒருவேளை இவளுடைய ஆங்கில வாத்தியார் இவளுக்கு தேங்க்ஸ் என்ற வார்த்தையை சொல்லித் தர மறந்திருப்பாரோ?

                             "நீங்க மீடியால ஒர்க் பண்றீங்களா?" "வாவ்,  ஹவ் டூ யூ நோ தட்" என்று ஆச்சர்யத்தில் என் விழிகள் விரிந்தது. "ஐ நோ பேஸ் ரீடிங்"   என்று கூறிவிட்டு கலகலவென சிரித்தாள். பின் அந்த ரகசியத்தை அவளே உடைத்தாள் "மீடியா பீப்பிள் க்கு தான் எல்லோ டேக். என்னை மாதிரி ஆட்களுக்கு ப்ளூ, சிம்பிள் "  என்று என் சட்டைக்குள் ஒளிந்திருந்த டேக்கை தொட்டு காண்பித்தாள். பிறகு சில நிமிட மௌனம். ஏதாவது பேச எண்ணி "நேத்து நைட் யூ வேர் அவுட் ஆப் கண்ட்ரோல், நான் தான் ஹோட்டலில் டிராப் பண்ணினேன்" "ஐ நோ" என்று சாதாரணமாக கூறி முடித்துக் கொண்டாள். "ஹேவ் யூ சீன் கோடார்ட் மூவிஸ்" அந்த இயக்குனரின்  பெயரையே அப்போதுதான் கேள்விப் படுகிறேன். இல்லை என்று சொல்ல கூச்சப்பட்டு தலையை இப்படியும் அப்படியும் அசைக்க அவள் புரிந்து கொண்டு "மேன் சச் எ பிரில்லியன்ட் டைரக்டர். ஸ்க்ரீன்ப்ளே இப்படித்தான் இருக்கணும்கிற ரூல்ஸ் எல்லாத்தையும் ஒடச்சவர். டுடே ஆப்டர்நூன் அவரோட ஒரு 3D மூவி கலா அகடமில போடறாங்க. ஆர் யூ கமிங். அனிச்சையாய் ஆமாம் என்று என் தலை பதிலுரைத்தது.

                         "கம் லெட்ஸ் ஹேவ் சம்திங். காலையில ஒண்ணுமே சாப்பிடல" என்றவாறு அருகே இருந்த ஒரு உயர்ரக ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துச் சென்றாள். கீ தோசா ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தோம். அப்போதுதான் அவளை நன்றாக கவனித்தேன். நேற்றைய அணிகலன்கள் முற்றிலுமாய் மாறியிருந்தது. இன்றைய குர்தா டைப் டாப்சுக்கு ஏற்றவாறு கம்மலும் கைகளில் பாசியால் செய்யப்பட்ட பிரெஸ்லெட்டும் அணிந்திருந்தாள். அவளாகவே  பல விஷயங்களை கேட்டாள், கூறினாள். நான் பேசியதை விட அதிகமாக அவள் தான் பேசினாள். உணவை உண்டு முடிப்பதற்குள் பல நாள் பழகிய நட்பு போல் பேச ஆரம்பித்திருந்தாள். எனக்கு மரியாதை தராமல் பேசியது கொஞ்சம் உறுத்தலாய் தோன்றிய போதும் அவள் குரலின் வசீகரம் அதை ஏற்றுக் கொள்ள வைத்தது,

                       அந்த கோடார்ட் மூவி உண்மையிலேயே சிறப்பான 3D படம். 3D  தொழில்நுட்பத்தை இப்படிக் கூட உபயோகப்படுத்த முடியுமா என்று யோசிக்கும் அளவுக்கு சிறப்பாக இருந்தது. அந்தப் படம் என் வாழ்வில் மறக்க முடியாத படமாக மாறிவிட்டிருந்தது. அது நல்ல படம் என்பதால் மட்டுமல்ல அந்த படத்தின் போது அவள் கைகள் என் கைகளோடு எதோ பேசிக் கொண்டே இருந்தது. அவள் தோள்கள் என் தோள்களோடு இணைந்திருந்தன. இவையெல்லாம் வெறும் இணக்கவர்ச்சியாய் தோன்றிய போதும் மனதில் ஒரு இனம் தெரியாத உற்சாகம், ஆனந்தம். படம் முடிந்து வெளியே வருகையில் தான் அது நடந்தது. சாலையை கடக்க முயல்கையில் ஒரு கார் வேகமாக வந்தது. அவளை உரசுவது போல் அருகே வந்தது, நான் வேகமாக செயல்பட்டு அவளை பின்னுக்கு இழுத்துவிட்டேன். என் கைகளில் அந்த கார் லேசாக உரசிச் சென்றதில் நான் தடுமாறி ரோட்டில் விழுந்தேன். சிராய்ப்புகள் ஏற்பட்ட கரத்தை தடவிக் கொண்டே அவளிடம் "ஆர் யூ ஒகே " என்றேன். 'எஸ்.. யூ சேவ்ட் மை லைஃப்" என்றாள். "ஏதோ தெரியாம நடந்த ஆக்சிடென்ட்" என்றேன். "நோ, தட் வாஸ் நாட் ஏன் ஆக்சிடென்ட். அவங்க என்னை கொலை செய்ய தான் வந்தாங்க"






-தொடரும்..









Friday, November 20, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (3)



வாசலில் அழைப்பு மணி கேட்டு சுதாரித்து, என் நிலை உணர்ந்தவனாய் கதவைத் திறந்தேன். அங்கே வெயிட்டர் கையில் ஒரு கேக்குடன் நின்றிருந்தான். "Happy Birthday Sangamithra" என்று அதன் மீது எழுதியிருந்தது. என் கடிகாரம் பன்னிரெண்டைக் காட்டியது. அவனிடம் உள்ளே வைக்கச் சொல்லிவிட்டு, அவளை எழுப்ப மனமின்றி ஒரு சிறு காகிதத்தில் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்தைச் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினேன். 18, ஜூன் சாலையில் உள்ள நான் தங்கியிருந்த சிறிய ஹோட்டல் அறைக்கு வந்தேன். சற்று முன் இருந்த கிளர்ச்சி போய், அவள் அழகான பெயரை எண்ணியபடி இமைகள் மூடியது.

எதோ அதிர்ந்ததைத் தொடர்ந்து நான் கண்விழித்தேன். பஸ் எதற்காகவோ நின்றிருந்தது. என்னவென்று வெளியே பார்க்க ஒரு நாய் குறுக்கே பஸ்ஸை கடந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த வேகமான ஓட்டத்தின் இடையில் அது தன் தலையைத் திருப்பி என்னைப் பார்த்துக் கொண்டே ஓடுவது போல தோன்றியது. அதன் கண்கள் என்னைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு இருந்தது. சற்று தூரம் சென்ற அது திரும்பி நின்று என்னைப் பார்த்து குலைக்க ஆரம்பித்தது. சந்தேகமேயில்லை அது என்னைத்தான் பார்க்கிறது. அதன் பார்வையிலிருந்து மறைந்து விட எண்ணி சீட்டினின்றும் என்னை சற்று தாழ்த்திக் கொண்டேன். அதற்குள் டிரைவர் நாயை வசை பாடிவிட்டு வண்டியை தொடர்ந்து ஓட்டலானார்.

என் நெற்றியிலிருந்த வியர்வை துளிகளை துடைத்து விட்டுக் கொண்டேன். இருட்டாக இருந்த அந்த பஸ்ஸிற்குள் ஒரு ஸீரோ வாட்ஸ் பல்பு மட்டும் ஒளி கொடுத்துக் கொண்டிருந்தது. எதேச்சையாக அதைப் பார்க்க ஆரம்பித்த நான் அந்த நீல நிறத்தில் ஈர்க்கப்பட்டு பின் அது என்னுடன் உரையாடுவது போன்ற பிரமை தோன்றியது. "இன்னைக்கு என் பிறந்த நாள்னு கூட மறந்துட்ட தானே?" என்று அது கேட்டதும் என் வாட்சை அழுத்தி தேதி பார்த்தேன். சரிதான். இன்று தான் சங்குவின் பிறந்த நாள். விளக்கு என்னை மீண்டும் அழைத்தது. "சரி பார்த்தாச்சா? வர வர உனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு. கொஞ்ச நாள்ல சட்டை போட்டுக்க கூட மறந்திட போற பாரு" என்று கூறிவிட்டு கலகலவென சிரித்தாள்.

அவள் சிரிப்பு என்னை மிகவும் இம்சித்தது. என் காதுகளைப் பொத்திக் கொண்டேன். இப்போது கொஞ்சம் அமைதியாக இருந்தது. எல்லாம் ஒரு இருபது நொடிகள் தான். காதுக்குள் "டுர்ர்ர்ர்" என்று ஒரு சப்தம். அந்த சப்தம் சங்குவின் விளையாட்டுகளில் ஒன்று. குழந்தை போல ஓடிவந்து காதுக்குள் "டுர்ர்ர்" என்று சப்தமிட்டு செல்வாள். "இப்போ கிளியரா கேக்குமே" என்று அவள் சொன்னது மிகத் துல்லியமாகக் கேட்டது. "வாடா, எனக்கு பயங்கரமா போர் அடிக்குது. இங்கே நான் இருக்கும் இடத்தில் மனுஷங்களே இல்லை. வா நீயும் நானும் மட்டும் சந்தோஷமா
இருக்கலாம்" என்று கூறிவிட்டு அவள் இனிமையான குரலில் பாட ஆரம்பித்தாள்.

 "யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறு வீடு கட்டிக் கொள்ள தோன்றும்,
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம்தோறும் செதுக்கிட வேண்டும்"

என்று பாடிவிட்டு ஓரிரு நொடிகள் அமைதியாகி "என் கூட வாழணும்னு
ஆசைப்பட்ட தானே, இப்போ வா சேர்ந்து வாழலாம்." அவள் குரல் இப்போது ஒரு கண்டிப்போடு ஒலித்தது.

என் கைகளை எதுவோ பற்றி இழுப்பது போல் தோன்றியது. கைகளை உதறியபடி "லீவ் மீ அலோன். ஐ டோன்ட் லவ் யு எனிமோர்.. கெட் லாஸ்ட்" என்று கத்தினேன். பிறகு என் சுற்றம் உணர்ந்தவனாய் திரும்பிப் பார்த்தேன். அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். என் சப்தம் அவர்களை எழுப்பியிருக்கவில்லை. என்னை நானே ஆசுவாசப் படுத்திக் கொண்டு எதிரே பாட்டிலில் இருந்த தண்ணீரை பல மிடறுகள் குடித்தேன். குடித்துவிட்டு பாட்டிலை வைத்த போது அதில் தண்ணீர் மீண்டும் நிறைந்திருந்தது. திடுக்கிட்ட என் இடக்கையை யாரோ ஆதரவாய் பற்றுவது போல தோன்றியது. அந்த கூல் வாட்டர் பெர்ஃப்யும் வாசனை வந்தது. என் தோள்களை எதுவோ அழுத்தியது. கணப்பொழுது தோன்றிய பயத்தை மறைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தேன். அங்கே நான் அவள் பிறந்த நாளுக்கு வாங்கித் தந்த ஒரு நீல நிற சுடிதாரில் சங்கமித்ரா   எப்போதும் போல என் தோள்களில் சாய்ந்திருந்தாள். 


-தொடரும்..!

Sunday, November 8, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (2)

பகுதி 1

                      டிரைவர் சடன் பிரேக் அடித்ததில் என் கைகளில் இருந்த ஐ-போன் முன்னே சென்று விழுந்தது. ஓரிரு நிமிடங்களில் பஸ்ஸில் இருந்த அனைவரும் வெளியே இறங்கி நின்றனர். பெரிய ஆபத்து இல்லை என்றாலும் பஸ்ஸின் முகப்புக் கண்ணாடி சுக்கு-ஆயிரமாய் உடைந்திருந்தது. டிரைவர் வண்டியின் முன்புறம் சென்று கண்ணாடிச் சில்லுகளை அகற்றிக் கொண்டிருந்தான்.  அவனிடம் ஒவ்வொருவராகச் சென்று நடந்தது என்னவென்று வினவிக் கொண்டிருந்தனர். நானும் கீழிறங்கி அவன் அருகே சென்றேன். அவன் சிறிது கலக்கத்துடன் காணப்பட்டான். வண்டியின் ஓனருக்கு பதில் சொல்லியாக வேண்டுமே. "யாரோ ரெண்டு பேர், பைக்கிலே கிராஸ் பண்ணி போனானுவ. அதுல பின்னாடி உட்கார்ந்திருந்தவன் நம்ம நம்பர் பிளேட்டையே பார்த்துட்டு போனான். அவனுக தான் பண்ணியிருக்கணும், பயபுள்ளைக. " என்ற டிரைவரின் ஆதங்கத்திற்கு ஆதரவாய் சில குரல்கள் "ஆமா இவனுகள நமக்கு தண்ணி குடுக்கச் சொல்லி கவர்மென்ட் போட்ட ஆர்டர்னால தமிழர்கள் யார் வந்தாலும் அடிக்கிறானுவ"

                         இந்த சலசலப்புக்கிடையே டிரைவர் தன் முதலாளியை  செல்பேசி மூலம் துயில் எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான். நான் மெதுவாக பஸ்ஸின் பின்புறம் வந்தேன். கேரள நாட்டின் ரம்மியமான காற்று இதமாக வீசியது. அது எந்த இடம் என்று ஊகிக்க முடியவில்லை. அப்போது எங்கிருந்து வந்தென்று தெரியாமல் ஒரு பொம்மரேனியன் நாய்க்குட்டி புசுபுசுவென்ற முடியுடன் வெள்ளை நிறத்தில் என்னையே உற்று நோக்கியபடி நின்றிருந்தது. நானும் நீண்ட நேரம் அதன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். சங்குவிற்கு நாய்கள் என்றால் அவ்வளவு பிரியம். எவ்வளவு என்றால் 'நாம புள்ளைகுட்டி பெத்துக்கலைன்னாலும் பரவாயில்ல, நாலு நாய்க்குட்டி வளர்க்கணும்' என்று சொல்லுமளவிற்கு. அட, இன்று என்ன எதைப் பார்த்தாலும் அவள் நினைவாகவே இருக்கிறது என என்னை நானே கடிந்து கொண்டேன். அந்த நாய்க்குட்டி இப்போது எதிர்திசையில் ஓட ஆரம்பித்தது.

                           அதனை பின்தொடர நினைத்து பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறினேன். முன் சீட்டில் இப்போது வேறு யாரோ அமர்ந்திருந்ததால் நான் உள்ளே காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற ஒரு பெரியவர் அவருடைய திப்புசுல்தான் காலத்து காலணியால் என் கால்களை மிதித்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்றார். நான் உரக்கக் குரலெடுத்து கத்தியது கூட அவருக்கோ அருகிலிருந்த யாருக்குமே கேட்டதாய் தெரியவில்லை.  அசதி அதிகமாக இருந்ததாலும், மதுரை சென்றதும் கண்ணாடியை மாற்றிக் கொள்ளச் சொல்லி ஓனரின் உத்தரவு கிடைத்ததும் பஸ்ஸை டிரைவர் எடுத்ததும் திறந்திருந்த ஒரு சன்னலின் வழி வந்த சுகந்தமான காற்றில் கண்கள் தானாக மூடியது. கண்களை மூடிய மறுவினாடி என் கண்களின் ரெட்டினா முழுவதுமாய் ஆக்கிரமித்தாள் சங்கமித்ரா. அவளை நான் சந்தித்த அந்த தினம் ஃசெபியா டோனில் விழித்திரையில் ஓட ஆரம்பித்தது.

                             பனாஜி நகரமே ஒளிவிளக்கால் அலங்கரிக்கப்பட்டு ஒட்டு மொத்த மக்களும் திருவிழா கொண்டாடுவது போல் சாலையோரம் முழுக்க ஆக்கிரமித்திருந்த கடைகளில் உணவருந்துவதும், வயதிற்கு ஏற்றவாறு கைகளில் ப்ரீஸர்களும், கிங் பிஷர்களோடும் அலைந்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சிகளும், கண்கவர் ஒளி வித்தைகளும் வயது வித்தியாசம் இல்லாமல் அதில் கலந்து கொண்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.  கோவா மக்கள் மட்டுமல்லாமல் திரும்பிய திசையெங்கும் அமெரிக்கர்களும், ஸ்பெயின், ஆப்பிரிக்கா என பல்வேறுபட்ட நாட்டவர்களும் ஜோடியாக உலவிக் கொண்டிருந்தனர். அங்கே ஆண்கள் செய்யும் செலவுகளும், பெண்களின் அணிந்திருந்த உடைகளும் தாராளமயமாக்கல் கொள்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தது.

                          இத்தனை பரபரப்புக்கும் அங்கே நடந்து கொண்டிருந்த திரைப்பட விழா தான் முக்கிய காரணம். இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவாக அங்கீகாரம் பெற்ற அந்த நிகழ்வுக்கு கலையை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒவ்வொருவரும் வருடம் தவறாது வருவது வழக்கம். கலைஞானியைக்  கண்டு வளர்ந்த ஏகலைவனான நானும் வருடத்தில் பத்து நாட்கள் செலவிடுவது பனாஜியில் தான் என்பது அவ்வளவு ஆச்சர்யமான விஷயம் ஒன்றுமில்லை என்றாலும் அன்று அந்த விழாவிற்கு மக்கள் குழந்தை குட்டிகளோடு வந்திருந்தது ஆச்சர்யத்தை அளித்தது. அங்கே குழுமியிருந்த எல்லா மக்களின் முகத்திலும் சந்தோஷம் வழிந்தோடியது. நான் அமர்ந்திருந்த 'கிங் பிஷர் வில்லேஜ்' கூடாரத்தில் எனக்கு இரண்டு மேசை தள்ளி அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைத் தவிர.

                          நீல நிற ஜீன்ஸும், சாம்பல் நிறத்தில் கையில்லாத 'ராம்ராஜ்' முண்டா பனியன் போன்ற எதையோ மேலேயும் அணிந்திருந்தாள். அதில் துள்ளித் தெரிந்த அவள் அழகுகளை மற்றவர்கள் பார்த்து ரசிக்கும் காட்சிப் பொருளாய் விட்டிருந்தாள். சம்பிரதாயத்திற்காக கொண்டு வரப்பட்ட ஒரு மேல் சட்ட அவளுடைய இருக்கையின் மேல் வைக்கப் பட்டிருந்தது. அவளுடைய கைப்பை குஃ ச்சியா?  ஃஜாராவா? என்று தெரியவில்லை. நிச்சயம் வெளிநாட்டு இறக்குமதி போல் தெரிந்தது. அதுவும் அவள் மேலாடையைப் போலவே பாதி மூடியும், மூடாமலும் கிடந்தது. அவள் கைகளில் இருந்த கிளாஸில் கிங் பிஷர் பகுதி நிரம்பியிருந்தது. தடாகத்தில் தலை சாய்ந்திருக்கும் தாமரை போல் மேசை மீது அவள் தலை கவிழ்ந்திருந்தது. அவள் கண்களில் அளவுக்கு அதிகமாக அப்பியிருந்த மஸ்காரா மூக்கின் மீது படர்ந்திருந்தது, நிச்சயம் அழுதிருக்கிறாள். அவள் அணிந்திருந்த ஊதா லிப்ஸ்டிக் எல்லை தாண்டி உதட்டின் மேல் விளிம்பில் வழிந்தோடியது அவள் சற்றும் நிதானத்தில் இல்லை என்பதைக் காட்டியது. கண்கள் அரை மயக்க நிலையில்.. வெயிட் வெயிட் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது,



                            நான் சற்றும் எதிர்பார்க்காத அந்த வினாடியில் அவள் தடுமாறி எழுந்து நேராக என்னை நோக்கி வந்தாள். நான் அவளை கவனிக்காதது போல் முகத்தை வேறு பக்கம் திருப்பினேன். அவள் எனக்கு அருகே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தாள். அவள் கால்கள் கிட்டத்தட்ட என் கால்களுக்கு இடையில் இருந்தது. விலக நினைத்து பின்னால் நகர்ந்த என்னைப் பார்த்து ஏளனமாய் சிரித்தாள். பின் அவளும் நெருங்கி வர முயற்சித்தாள். தடுமாறி கீழே விழப் போனவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன். அவளை இருக்கையில் சரியாக அமர்ந்திவிட்டு நானும் அமர்ந்தேன். அவள் விழும்போது என்னையும் அறியாமல் 'பார்த்து' என்று கூறினேன்.

                            "ஓ.. தமிழா? என்று கூறியவாறு முன்னால் விழுந்திருந்த தலைமுடியை பின்னுக்குத் தள்ளினாள். சோம்பல் முறிப்பது போல் பாவனை செய்தாள். ஏற்கனவே தன் இருப்பை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருந்த அவள் அழகுகள் இன்னமும் கொஞ்சம் வெளிப்பட நான் அவஸ்தையாய் நெளிந்தேன். 'எக்ஸ்க்யுஸ் மீ.. கேன்  யூ ஹெல்ப் மீ? கேன் யூ டிராப் மீ அட் மை ஹோட்டேல்? " என்று குழறியபடி கேட்டாள்.  நான் பதில் கூற எத்தனிக்கையில் அவள் தன் கைப்பையை அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தாள். 'இருங்க' என்றவாறு இரண்டு மேசை தள்ளியிருந்த அவள் கைப்பையையும் அந்த 'உதவாக்கரை' மேல்சட்டையையும் எடுத்து வந்தேன். 'தேங்க்ஸ்' என்றவள், அதனுள்ளே கைவிட்டு இரண்டு சாவிகளை எடுத்து மேசை மீது வைத்தாள். எறிந்தாள் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

                                  ஒன்று ஹோட்டல் ஸ்வைப் கீ போல் இருந்தது. '201' என்று மேலும்  'Marriot' என்று கீழும் எழுதியிருந்தது. அவள் தங்கியிருந்த ஹோட்டலாக இருக்கலாம். மற்றொரு சாவி ஒரு BMW காரின் ரிமோட் கண்ட்ரோல். மீண்டும் அவள் கண்கள் சொருக ஆரம்பிக்க பரந்த மனதுடைய நான் (அவள் அளவிற்கு இல்லாவிட்டாலும்) என் தேசத்திலிருந்து வந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்யத் தீர்மானித்தேன்.  இரண்டு சாவிகளையும் எடுத்துக் கொண்டு அவளை என் கைகளால் தூக்கி என் தோளில் சாய்த்தபடி பார்க்கிங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவள் அங்கங்கள் அங்கங்கே உரசிக் கொண்டிருந்தது ஒரு இனிமையான உணர்வைக் கொடுத்தது, என் வாழ்வில் ஒன்றிரண்டு பெண்களைக் காதலித்திருக்கிறேன் என்ற போதும் அதெல்லாம் ஒரிரு முத்தத்தோடே முடிந்து போயிருக்கின்றன. ஒரு பெண்ணை, அதுவும் இவ்வளவு நெருக்கத்தில், இதுவரை ம்ஹும்..

                                    ரிமோட்டின் அலாரத்தை அழுத்தி அவள் காரின் இருப்பிடத்தைக் கண்டறிந்தேன். அவ்வப்போது அவள் தன்னிலை இழந்து கீழே சரிகையில் அவள் பெண்மையின் மென்மைகள் என்னை இம்சித்துக் கொண்டே வந்தது. காரின் கதவைத் திறந்து முன் சீட்டில் அவளை இருத்தினேன். அவள் கைப்பையையும் மேல்சட்டையையும் பின் இருக்கையில் வைத்துவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். இதற்கு முன் சில முறை BMW ஒட்டியிருக்கிறேன் என்ற போதும் சர்வ ஜாக்கிரதையுடன் ஒட்ட ஆரம்பித்தேன். அதில் அமர்ந்து செல்கையில் சாலை அவள் கன்னங்கள் போல் மிருதுவாகத் தோன்றியது. முன்பொரு முறை மிராமர் பீச்சுக்கு வந்த போது இந்த ஹோட்டலைத் தொலைவில் பார்த்திருக்கிறேன். ஹோட்டலின் உள்ளே வந்ததும் "Valet" பார்க்கிங் செய்ய ஒரு சிப்பந்தி ஓடிவந்து காரின் அருகே நின்று கொண்டான், நான் இறங்கி சாவியை அவனிடம் கொடுத்து விட்டு அவளையும் அவள் கைப்பையையும் இரு கைகளில் சுமந்தபடி உள்ளே நடந்தேன்.

                                       அங்கே இருந்த பல ஜோடிக் கண்களும் எங்களையே கண்டு கொண்டிருந்ததை நான் கண்டு கொள்ளாமல் சென்றேன். லிப்டில் ஏறி இரண்டாம் தளத்தை தேர்வு செய்து பின் அறை எண்  201 ஐ சிரமப்படாமல் கண்டறிந்து அவளோடு உள்ளே நுழைந்தேன். ஒரு பெரிய குடும்பமே தங்கும் அளவிற்கு பெரிய "ஸ்வீட்"(Suite) ரூம் அது. ஏசியின் குளுமை எல்லா அறைகளிலும் எதிரொலித்தது. ஹாலின் நடுவே தொங்கிய பிரம்மாண்ட விளக்கும், மிகுந்த வேலைப்பாடு மிக்க மேசைகளும், டீப்பாய்களும் நிச்சயம் அந்த ஹோட்டலில் தங்கியிருப்பவர்களின் தரத்தை நொடியில் கூறிவிடும். ஹாலின் பால்கனியில் இருந்து பார்த்தால் மிராமர் கடற்கரையும், கடற்கரைக் காதலர்களையும் காணலாம். ஹாலைக் கடந்ததும் இரண்டு சிறிய படுக்கையறைகளும், ஒரு பெரிய மாஸ்டர் பெட்ரூமும் இருந்தன. அந்த பெரிய படுக்கையில் அவளைக் கிடத்திவிட்டு அவள் பொருட்களை அருகிலிருந்த மேசை மீது வைத்தேன்.

                                         பின் அவள் அருகே சென்று அவளை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்படத் தயாரானேன். அப்போது தெளியாத உறக்கத்தினூடே சற்று உணர்ந்த அவள் என் கரங்களைப் பற்றி இழுத்தாள். நான் தடுமாறி அவள் மேலே சரிந்தேன். அவளின் அருகாமை என்னை என்னவோ செய்தது. அந்த மெத்தையின் இதமும், அவள் ஸ்பரிசமும் எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த டெஸ்டெஸ்ட்ரான்களை எழுப்பி விட்டது. தவறெது சரியெது என்று யோசிக்க விடாதபடி  புன்னகையோடு வசீகரித்துக் கொண்டிருந்த அவள் இதழ்கள் என் இளமைக்கு அழைப்பு விடுத்தன. அந்த நேரம் பார்த்து வாசலில் 'காலிங் பெல்' அடிக்கும் ஓசை கேட்டது.


-தொடரும்..


Thursday, November 5, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (1)





                      இரவின் மங்கலான ஒளியில் மழையின் மிச்சத் துளிகள் பேருந்தின் அகலமான கண்ணாடியில் கோலமிட்டபடி வருவதை ரசித்துக் கொண்டே முதல் சீட்டில் அமர்ந்திருந்த நான் வலது காதுக்கு மட்டும் இயர்போனை கொடுத்து, ஐ-போனில் ஒலித்த  ஏ.ஆர் ரகுமானை ரசித்தபடியே, அதே சமயம் பேருந்தினுள் தன் வசீகரக் குரலினால் எல்லோரையும் தூங்கவைத்துக் கொண்டிருந்த இளையராஜாவை இடது காதிலும் சுவாசித்துக் கொண்டிருந்தேன். பேருந்தில் மற்றுள்ள அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். காலை முதல் மாலை வரை தீம் பார்க்கிலும், அருவிகளிலும் ஆடித் தீர்த்த களைப்பு சிறார் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் முகத்திலும் தெரிந்தது. என்னுடைய வரமோ, சாபமோ எனக்குத் தெரியாது, ஆனால் எப்போதுமே கண்களை மூடியவுடன் நித்ரா தேவி ஆரத் தழுவ ஆரம்பித்து விடுவாள். ஆனால் இன்றோ அதற்கு நேர்மாறாக கண்களில் அயர்ச்சியோ, உறக்கமோ சிறிதும் இல்லை.அதற்கு சற்று முன் குடித்த குளம்பி கூட காரணமாக இருக்கலாம்.

                      கண்களை மூடி இரண்டு தலைமுறை இசையையும் ஒரு சேர இரசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று என் வலது காதின் விளிம்பில் அந்த இயர்போனின் இழையினூடே ஒரு இனிமையான பெண் குரல் கேட்டது. நேற்று தான் ஐ-ட்யுன்ஸில் புதிய பாடல்கள் சிலவற்றை பதிவேற்றி என் கைப்பேசிக்கு மாற்றியிருந்தேன். வழக்கமாக நான் இதுபோல் புதிய பாடல்களை கேட்கையில் அவற்றை ஒழுங்கற்ற முறையில் (Random) ஓட விட்டு அவை என்ன படத்தில் இருக்கும், யார் இசையமைத்ததாய் இருக்கும், இது யாருடைய குரலாய் இருக்கும்  என எனக்கு நானே கேள்வி கேட்டு சரியான பதிலுக்கு சபாஷ் சொல்லிக் கொள்வது வழக்கம். அன்றும் அப்படியே அந்தப் பெண் குரலைக் கேட்டவுடன் எனக்குச் சற்று குழப்பமாக இருந்தது. மற்றொரு காதுக்கும் இயர்போனைக் கொடுத்து இன்னும் உன்னிப்பாகக் கேட்க ஆரம்பித்தேன்.

                          இனிதாய் ஆரம்பித்த அந்த இசை கொஞ்சம் கொஞ்சமாக வயலின் உதவியுடன் வயலன்ட்டாக மாற ஆரம்பித்தது. அந்த இனிமையான பெண்ணின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக தன் இனிமையை துறந்து ஹை பிட்சில் ஒலிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஸ்ரேயா கோஷலாக இருக்குமோ என்று எண்ணிய நான் சற்று பின்வாங்கி ஆன்ட்ரியாவாக இருக்குமோ என எண்ணத் துவங்கினேன். அதில் வரும் வரிகளைக் கேட்கும் போது ஏதோ பேய்ப் படங்களில் வரும் பாடல் போல் தோன்றியது. 'மாயா'வாக இருக்குமோ? இல்லையே அதில் ஒரே ஒரு பாடல் அதுவும் சின்மயி பாடியது. ம்ம்.. காஞ்சனா? ம்ஹும் அதில் இசை நம் காதுகளை பதம் பார்த்திருக்குமே. வேறு என்னவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த போது தான் அது நடந்தது.

                            டிரைவர் காலியாக இருந்த சாலையிலும் கோணல் மாணலாக ஒட்டிக் கொண்டிருந்தார். சற்றே கண்ணயர்ந்திருப்பார் என்றே தோன்றியது. நான் அவரைப் பார்ப்பதை அவர் பார்த்திருப்பார் என்று தான் நினைக்கிறேன். உடனே தன அருகே இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து நாலைந்து மிடறுகள் விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார். என் பக்கமாய் சற்று குற்ற உணர்ச்சியோடு திரும்பிப் பார்த்து பின் தன் அருகே இருந்த டர்க்கி டவலால் முகத்தை துடைத்துக் கொண்டார். இப்போது அவர் முகம் சற்று தெளிவாய் இருப்பதாய்த் தோன்றியதால் நான் அதற்கு மேலும் ஏதாவது சொல்லி அவரை சங்கடப் படுத்த விரும்பவில்லை. நான் மீண்டும் பாடலுக்கு வந்தேன்.

                             ஸ்ரேயா கோஷல் அப்படி உச்ச ஸ்தாயியில் பாடி நான் கேட்டதில்லை. புதிய முயற்சியாகக் கூட இருக்கலாம். இல்லை வேறு புதிய பாடகியாய் இருக்கலாம். அப்படி இருந்தால் இந்தப் பாடகிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று எண்ணியபடி என்ன படமாக இருக்கும் என்று யோசிக்கலானேன். அப்போது அந்த பாடலின் சரணம் முடிந்ததும் அதே குரல் ஆனால் இப்போது எஸ்.ஜானகி அவர்கள் குரல் போல் சிறு பிள்ளையாய் ஒலித்தது. "என்ன என்னை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா" என்று கூறி பெருங்குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்தது. சற்றே அதிர்ந்த நான் காதிலிருந்த இயர் போனை எடுத்து விட்டு சாய்ந்திருந்த புஷ்-பேக் சீட்டை சரி செய்து நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் கைப்பேசியை பார்த்தேன், அதன் டிஸ்ப்ளே கருப்பாக இருந்தது. மெதுவாய் அதன் பக்கவாட்டில் இருந்த பொத்தானை அழுத்தியதும் டிஸ்ப்ளே ஒளிர்ந்தது.

                              நான் சற்று முன் கேட்ட பாடல் என்ன என்பதைப் பார்த்தேன். அதில் 'ஒட்டகத்தைக் கட்டிக்கோ' என்று இருந்தது. இயர்போனைக் காதுகளுக்கு மீண்டும் கொடுத்த போது எஸ்.பி.பி "உடைவாளில் உடை தொட்டுக்" கொண்டிருந்தார். நான் சற்று முன் கேட்ட பாடலைக் கேட்க பின்னோக்கி செல்லும் பொத்தானை அழுத்த அது வேறொரு ரஹ்மான் பாடலைக் காட்டியது. அப்போது தான் உணர்ந்தேன். நான் ரேண்டம் மோடில் போட்டிருப்பதால் அதே பாடல் வராது என்று.  அந்த Random ஆப்ஷனை எடுத்துவிட்டு அந்தப் பாடலை தேட ஆரம்பித்தேன். ஆனால் சில நொடிகளிலேயே தெரிந்தது அது வீண்வேலை என்று , கிட்டத்தட்ட 16 ஜீ.பி அளவிற்கு பாடல்களை பதிவேற்றியிருக்கிறேன். இதில் அந்த ஒரு பாடலைக் கண்டுபிடிப்பது சிரமமான காரியம்.

                              மீண்டும் புஷ்-பேக்கை சரிசெய்து கொண்ட போது என் மீது ஒரு மெல்லிய தென்றல் வீசிச் சென்றது அந்த சுகந்தமான காற்றை கண்களை மூடி அனுபவித்து விட்டு மீண்டும் விழித்துப் பார்த்த எனக்கு வியர்த்துக் கொட்டியது. அங்கே எல்லா சன்னல்களும் மழைக்காக  அடைக்கப்பட்டிருந்தது. ட்ரைவரின் சன்னலைப் பார்த்தேன். அதுவும் அடைந்திருந்தது. அந்த தென்றலுக்கு விளக்கம் ஏதும் கிடைக்காமல் நான் சாய்ந்து பாடலை ரசிக்கத் துவங்கிய பத்தாவது நொடி "அந்தப்" பாடல் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. இம்முறை ஸ்ரேயாவின் குரல் ஒலிக்க ஆரம்பித்தவுடன் நான் கைப்பேசியை உயிர்ப்பித்து படத்தின் பெயரைப் பார்த்தேன். "ப்ரியசகி" என்றிருந்தது. பாடகியின் பெயரைப் பார்த்தேன். அதிர்ந்தேன். அதில் 'சங்கமித்ரா' என்றிருந்தது.

                                 'சங்கமித்ரா' அந்தப் பெயரை அவ்வளவு எளிதாய் என்னால் மறந்து விட முடியாது. என் உயிரோடு உயிர் கலந்தவள். அதுமட்டுமா? என் உடலோடு உடல் கலந்தவளும் அவள் தானே! 'அவளின்றி ஓர் அணுவும்' அசையாது என்று நான் எண்ணியிருந்த நாட்களெல்லாம் என் கண் முன்னே தோன்றிப் போனது. அட, இது பதினேழு வருடங்களுக்கு முன் அவளும் நானும் தனிமையில் இருக்கையில் என்னிடம் பாடிக் காண்பித்த பாடலாயிற்றே. ஒவ்வொரு முறை பாடும் போதும் உச்ச ஸ்தாயியில் அவள் மூச்சை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தாளே. அதே பாடல். இப்போது இசைக் கருவிகள் சேர்த்து, அதுவும் என் கைப்பேசியில் எப்படி?

                                  இப்போது மீண்டும் அவள் சிரிப்பு அடங்கி  "என்ன என்னை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா" என்ற குரல் கேட்டு பின் "கண்டு பிடிச்சுட்ட போலிருக்கே?" என்றாள். அது அவளே தான். அவளின் தேன்மதுரக் குரலை நான் எப்படி மறந்தேன். என் ஜீவனாய் இருந்தாளே, கைப்பேசியில் சினிமா இசை தவிர்த்து அவள் சிரிப்பை ரிங்டோனாய் வைத்திருந்தேனே. "என்ன பிளாஷ்பேக்குக்கு போயிட்டியா?" அவள் குரல் என்னை மீண்டும் தன்னிலைக்கு கொண்டு வந்தது. இயர்போனை கழற்றினேன். நிசப்தமாக இருந்தது. என் கைகளில் தவழ்ந்த அந்த இயர்போனை நோக்கினேன். அதில் இருந்த மண்டை ஓடு என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது.  கொஞ்சம் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இயர்போனை பொருத்தினேன்.

                                    இன்னமும் அதே பிரியசகி தான் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் என் காதுகளில் நிசப்தம் நிலவியது. வேறு பாடல் போட முயன்றேன். ஆனால் மீண்டும் மீண்டும் பிரியசகியே வந்து நின்றது. திடுக்கிட்ட நான் ஐ-போனை அணைத்தேன். முற்றிலும் அணையும் ஓசை காதில் கேட்டது கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது. காதுகளுக்கு சற்று நேரம் விடுதலை கொடுக்க எண்ணி கைகளை காதுகளின் அருகே கொண்டு சென்றேன். அப்போது மீண்டும் அவள் குரல் கேட்டது. 'செல்போன ஆப் பண்ணிட்டா ஆச்சா? நான் இருக்கிறது உன் மனசுல. அதப் புரிஞ்சுக்கடா ஸ்டுப்பிட்." "ஸ்டுப்பிட்" - அவள் என்னை ஆசையாய் அழைக்கும் பெயர். கலவியின் களிப்பு முடிந்து அவள் மார்போடு அணைந்து கிடக்கையில் என் தலைமுடியை கலைத்து விட்டு 'ஸ்டுப்பிட், ஸ்டுப்பிட், ஸ்டுப்பிட், நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா" என்று கூறி என் நெற்றியில் அவள் இட்ட எண்ணிலடங்கா முத்தங்களின் ஈரத்தை என்னால் இப்போதும் உணர முடிந்தது. அந்த குளிர்ந்திருந்த மழை இரவிலும் அவள் கதகதப்பை உணர்ந்தேன்.

                                       நடப்பதெல்லாம் நிஜம்தானா என என்னை ஒருமுறை கிள்ளிப் பார்த்தேன். வலித்தது. உள்ளே திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். பஸ்ஸின் ஹெட்லைட் வெளிச்சம் தொலைதூரத்தில் தெரிந்த தென்னை மரத்தில் அடித்து எதிரொளித்தது. மீண்டும் என் ஸ்கல்கேண்டி  இயர்போனில் அவள் குரல் கேட்டது. "டே, ஸ்டுப்பிட். எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. வா அன்பே, இந்த சங்கை மீட்ட வா!' என்றது. 'சங்கமித்ரா' என்ற அவள் பெயரை நான் 'சங்கு' என்று செல்லமாக அழைத்தது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். அதுவும் கலவிக்கான சங்கேத வார்த்தை தான் அந்த 'சங்கை மீட்டுதல்'! அப்போது அந்தக் குரல் அவளுடையது தான். சந்தேகமேயில்லை.

                                    'ஏதாவது ஒரு காரணம் சொல்லி வண்டியை விட்டு இறங்கி வா' என்று என்னை வார்த்தைகளால் அவள் வசீகரித்தாள். இத்தனை வருடங்கள் கழித்து இப்போது ஏன்? ஆச்சர்யமும் பயமும் ஒன்றன் தோள்மீது மற்றொன்று கை போட்டுக் கொண்டு ஆக்ரமித்திருந்தது. அன்பாக பேசிக் கொண்டிருந்த அவள் குரலில் இப்போது சற்று கடுமை சேர்ந்திருந்தது. "இப்போ நீ எறங்கறயா இல்லே வண்டிய நான் நிறுத்தட்டுமா? என்றாள். இறங்க வேண்டாம் என்று என் உள்மனத்தின் கட்டளையை மீறமுடியாமல் நான் அமர்ந்திருக்க, அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு சிறு கல் பஸ்ஸின் அகலமான கண்ணாடியில் மோத ஓரிரு நொடிகளில் சடசடவென உடைந்து இப்போது அங்கே வெற்றிடம் மட்டுமே இருந்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்த டிரைவர் சடன் பிரேக் அடிக்க அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உள்ளே இளையராஜா பாடிக் கொண்டிருந்தார். "வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா, மார்பு துடிக்குதடி"

                                                                                                                     -தொடரும்..!



How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...