Saturday, January 30, 2016

இறுதிச்சுற்று Vs தாரை தப்பட்டை.

SPOILER ALERT:                இரண்டு  படங்களும்  வெவ்வேறு கதைக் களங்கள், வெவ்வேறு இயக்குனர்கள், முற்றிலும் வேறுபட்ட படங்களைப் போல தோன்றினாலும் அவற்றுள் இழையோடிய ஒரு மெல்லிய ஒற்றுமையைக் காண முடிந்தது. இரண்டிற்குமான சூழல் ஆங்காங்கே ஒத்திருப்பதாய் தோன்றியது. 'கதை சொல்லும் பாணியிலா' இல்லை 'கதை சொல்லி' யின் எழுத்திலா அந்த சூழலை மக்களுக்கு பிடிக்கும் விதத்தில் சொன்னதில் அறிமுக இயக்குனர் என்ற போதும் ஒருவர் வெற்றி பெறுகிறார், மற்றவர் தேர்ந்த இயக்குனர் என்ற போதும் தோல்வியடைகிறார்.

தைரியமான கதாநாயகி:  இரண்டு படங்களிலுமே நாயகியின் கதாப்பாத்திரங்கள் வலுவானதாகவும், மிகுந்த தைரியசாலியாகவும் படைக்கப் பட்டிருந்தது. தனது தனித்திறமையை வெளிக்கொணர்ந்த குருவின் மேல் காதல் கொள்கிறாள். குருவுக்கு ஒரு அவமானம் எனும் போது அதைத் துடைக்க தன் திறமையை வெளிப்படுத்தி உலகிற்கு தான் யார் என்பதை நிரூபிக்கிறாள். இவள் திறமையின் மீது ஆர்வம் கொண்டு அழைப்பது போல் அழைத்து அடைய நினைக்கும் எதிராளி. இப்படி பலப்பல ஒற்றுமைகள்


திறமையே உருவான நாயகன்: தான் கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தையும் கதாநாயகிக்கு கற்றுக் கொடுத்து அவளை ஊரிலேயே சிறந்த வித்தகியாய் மாற்றுகிறான். நாயகியின் மேல் தனக்கு காதல் இருந்த போதும், தன் மீது காதல் கொண்டு தன் பின்னால் வரும் அவளின் காதலை சூழ்நிலையால் ஏற்க மறுக்கிறான். அவள் மேல் பிரியங்கள் நிறைந்திருந்த போதும்  அதை வெளிக்காட்டாமல் அவள் மீது கடிந்து கொள்கிறான்.

மாறுபட்ட இரண்டாம் பகுதி: நாயகனின் பிரிவின் போது வேறொருவன் ஆசை வார்த்தைகள் கூறி நாயகியின் கற்பை சூறையாடப் பார்க்கிறான். இதுவரை இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட ஒரே பாதையில் பயணிப்பதாய் தோன்றுகிறது. இதன் பின் முதல் பகுதியில் தைரியமான பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட அந்த நாயகியின் கதாப்பாத்திரம் ஒரு சிறு எதிர்ப்பையும் காட்டாமல் பணிந்து போவது போல் தாரை தப்பட்டையில் காட்சியமைப்பு இருக்கும். இறுதிச் சுற்றில் தன்னை அடைய நினைக்கும் கயவனுக்கு தக்க பதிலடி கொடுத்து திரும்புகிறாள்.

சோகமான முடிவுக்காக வைக்கப்பட்ட காட்சியமைப்புகள் என்ற போதும் நாயகியின் பாத்திரப் படைப்பு திசைமாறிப் போன காரணம் கூட படத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கக் கூடும். அந்தக் கதாப்பாத்திரம் தனக்கு முன் வைக்கப்பட்ட சவாலை எங்ஙனம் எதிர்கொண்டு வாழ்வில் வெல்கிறாள் என்று ஒரு ரசிகன் எதிர்பார்க்கும் முடிவைக் கூறியதாலேயே புதிய இயக்குனர் என்ற போதும் இறுதிச் சுற்று இறுதிச் சுற்றில் வெற்றி வாகை சூடுகிறது.

நகைச்சுவைக் காட்சிகள்: மேலும் திணிக்கப்பட்டதாய் இருக்கக் கூடாது என்பதற்காக தவிர்க்கப்பட்டிருக்கும் நகைச்சுவை காட்சிகள். காட்சிகளோடு ஒன்றி வரும் மெல்லிய நகைச்சுவை ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும். வழக்கமாக அதில் வெற்றி பெறும் இயக்குனர் பாலா இதில் கோட்டை விட்டிருக்கிறார். அதே சமயம் காளி வெங்கட்டின் கதாப்பாத்திரம் மற்றும் லிவர் ஃபிரை பற்றி நாசர் பேசும்போதும்  ஒரு சாமான்ய ரசிகன் தன்னையும் மறந்து சிரித்து விடுகிறான்.


இசை : இசையைப் பொறுத்தவரை இசை ஆளுமையின் இத்தனை வருட அனுபவம் நிச்சயம் படத்திற்கு பக்கபலமாய் இருக்கிறது. ஆயினும் சந்தோஷ் நாராயணனின் இளமை துள்ளும் இசை, படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும்படி இருந்தது.


                 மாதவனின் யதார்த்த நடிப்பு, ரித்திகாவின் குறும்பு ப்ளஸ் இளமை ததும்பும் நடிப்பு, தமிழ்நாடு திரையில் வெல்லும் போது ஒவ்வொரு ரசிகனும் தானே வெல்வது போல் உணர்கிறான். வரலட்சுமி மற்றும் சசிகுமார் சிறப்பாக முயன்ற போதும் சரியாக வடிவமைக்கப்படாத திரைக்கதையால் அது விழலுக்கிறைத்த நீராகிறது. தாரை தப்பட்டை சப்தமில்லாமலும், இறுதிச்சுற்றில் வெற்றி மணி ஓங்கியும் ஒலிக்கிறது.
                  

14 comments:

 1. நன்று. தாரை தப்பட்டை படம் பார்க்க நினைத்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. நான் வெங்கட் அண்ணாவிடம் இருந்து மாறுபடுகிறேன். எனக்கு இருதிசுற்று பார்க்க ஆசை வந்துவிட்டது:)

  ReplyDelete
 3. ஒ!! மன்னியுங்க. அது இறுதிச்சுற்று.

  ReplyDelete
 4. மாதவனை சரியா உபயோகப்படுத்திக்கத் தெரியாத தமிழ் சினிமாவுக்கு புத்தி வந்தா சரி. :-)

  ReplyDelete
 5. ஆழமான பார்வை. படம் பார்க்கவில்லை. பார்த்தால் இன்னும் உணர்ந்து படித்திருக்க முடியும்!

  ReplyDelete
 6. நல்ல ஒப்பீடு..
  பார்க்கிறேன் நாளை..
  தம +

  ReplyDelete
 7. தாரைதப்பட்டை பற்றிய நல்ல விமர்சனங்கள் சில ப்ளாகில் வாசிக்க நேர்ந்த போதும் ஏனோ எனக்கு இறுதிச்சுற்றுப் பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. உங்கள் விமர்சனமும் அதையே சொல்லுகின்றது. ஸோ மை சாய்ஸ் இஸ் இறுதிச்சுற்று. தாரை தப்பட்டையில் ஹீரோயின் காரெக்டர் ஏனோ என்னை ஈர்க்கவில்லை. அது கதையினால் கூட இருக்கலாம். மேடி நல்ல கலைஞன். ஆனால் ஏனோ அவர் மிளிராமல் போய்விட்டார்....அமுல்பேபி, சாக்லேட் பாய் லிஸ்டில் போடப்பட்டதாலோ என்னமோ..

  கீதா

  ReplyDelete
 8. தாரை தப்பட்டையின் இருதிசுற்று னு டைட்டில் வச்சிருக்கலாமோ

  ReplyDelete
 9. Just watched iruthi sutru... wonderful movie. Moreover, you're comparison is simply superb!

  ReplyDelete
 10. நான் தாரைதப்பட்டை ராஜாவின் படம் என்றே கூறினேன்...ஏகப்பட்ட முரண்கள்..
  ஆனால் இறுதிச்சுற்று உங்கள் விமர்சனத்தை படித்தபின் பார்க்க ஆவலாய் இருக்கிறது...

  ReplyDelete
 11. இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துக்கொண்டே படித்தேன்...செம அவதானிப்பு.

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails