ஜன்னலோரம்.. சிறு வயதிலிருந்தே என் பிரியப்பட்ட இருக்கையாக இருந்தது. பேருந்தில் பயணம் என்றாலே எந்த வேலை இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு பேருந்தில் ஏற தியேட்டரில் முதல் வரிசை டிக்கட் வாங்க அலைமோதும் கூட்டத்தைப் போல் முண்டியடித்துக் கொண்டு நுழைவேன். ஏறியதும் பரபரவென ஓடி பேருந்தின் பின்புற டயர் இருக்கும் இருக்கை சற்று உயரமாக இருக்கும். என் உயரத்துக்கு பொறுத்தமாய் செய்த இருக்கையாகவே அதை எப்போதும் உணர்வேன்.
உட்கார்ந்த மறுகணம் ஜன்னல்களை திறந்து அதன் வழி வரும் சுகந்தமான காற்றை சுவாசிப்பேன். சில்லென்ற அந்த தென்றல் முகத்தில் உரசுகையில் விவரிக்க முடியாத ஒரு பேரானந்தம் மனதிற்குள். சில நேரங்களில் பேருந்து வேகமாக செல்லும் பொழுது தென்றல் காற்று சற்று வீச்சு அதிகமாகி முகத்தில் அறையும். அப்போதும் முகத்தை உள்ளிழுக்காமல் காற்றுடன் சண்டை போடுவதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு. காற்று என் தலைமுடி, இமைகள், நாசித் துவாரங்கள், இதழ்கள் என ஒவ்வொரு பாகமாக வருடிச் செல்வதை பயணம் முழுவதுமாய் அனுபவித்துக் கொண்டே செல்வேன். அந்த அனுபவம் எனக்கு சலிப்பு தட்டியதாய் என்றும் உணர்ந்ததில்லை.
பெரும்பாலும் அந்த பயணங்கள் நான் வசித்த கிராமத்திலிருந்து நகரம் நோக்கி செல்வதாகவே இருந்தது. வழியில் தென்படும் ஆட்டுக் குட்டிகள், தட்டிக் கேட்க ஆளில்லாமல் தனி இராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த தெரு நாய்கள், பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்கும் மாட்டு வண்டிகள், சைக்கிள் டயரை வாகனமாய் ஒட்டிக் கொண்டு வரும் சிறார்கள், தென்னை, பனை மரங்கள், சுற்றிலும் பசுமையாய் தெரியும் வயல் வெளிகள் என ஒவ்வொன்றும் மனதிற்குள் உவகையை தூண்டும்.
என்றாவது பேருந்தில் ஜன்னலோரம் கிடைக்காவிடில் அங்கே அமர்ந்திருப்பவரிடம் எப்படியாவது கெஞ்சி, கூத்தாடி, அப்படியும் வேலைக்கு ஆகவில்லை என்றால் வாந்தி வருவது போல் செய்து காட்டி என அந்த இடத்தை எப்படியும் பிடித்து விடுவேன். இந்த அனுபவம் தினமும் கிடைக்க வேண்டியே தினமும் இரண்டு மணி நேரம் பயணம் செய்து சென்று படிக்கும் வகையில் இருந்த நகரத்து பள்ளியில் சேர்ந்து படிக்க அடம்பிடித்து சேர்ந்தேன். பேருந்து மட்டுமல்லாமல் இரயில் பயணங்களில் கூட நான் ஜன்னலோர இருக்கையை தேடிச் செல்லும் பழக்கம் என்னுடனே வளர்ந்தது.
எல்லாம் சுகமாய் சென்றது, திருமணம் ஆகும் வரை. அவள் அன்று பேருந்தில் என்னைப் பார்த்து அந்தக் கேள்வியை கேட்கும் வரை. "வாசு, எனக்கு ஜன்னலோர சீட்தான் எப்பவும் பிடிக்கும். நான் அந்தப்பக்கம் உட்கார்ந்துக்கவா?" என்றாள். அவளுடைய ஒற்றைக் கேள்வியின் உள்ளர்த்தம் என் வேர்வரை அசைத்தது. எப்பவும் பிடிக்கும் என்ற ஒற்றை வார்த்தையின் பொருள் இனி அந்த ஜன்னலோர இருக்கையை எனக்கு எப்போதும் கொடுத்துவிடு என்பதாய் உணர்ந்தேன். மனைவியின் வேண்டுகோளை மறுக்கவும் மனமில்லாமல் என் பிரியப்பட்ட ஆசனத்தை அவளுக்கு தாரை வார்த்தேன்.
சந்தோஷத்தோடு இடம் மாறி அமர்ந்த அவள் 'தேங்க்ஸ்' என்றாள். நான் செய்த இந்த அளப்பரிய தியாகத்திற்கு அந்த ஒற்றை ஆங்கில வார்த்தை துச்சமாகப் பட்டது. இருந்த போதும் அவள் என்னைப் போலவே என் விருப்பு வெறுப்புகளுக்கு ஒத்தவளாய் இருக்கிறாளே என்ற சந்தோஷம் ஒன்று மட்டுமே என் மனதை அமைதி கொள்ள செய்தது. வேறு வழியின்றி பயணப் பொழுதை கடத்த சுஜாதாவின் புத்தகம் ஒன்றை வாசிக்க ஆரம்பித்தேன். ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும், என் தோள்களில் எதோ பாரம் அழுத்துவதாய் உணர்ந்தேன். புத்தகத்தை மூடிவிட்டு திரும்பிய போது அங்கே நல்ல உறக்கத்தில் அவள் சிரம் என் தோள்களில்..!