Wednesday, December 11, 2013

வெயிட் லாஸும் வேதனைகளும்..!

                  ஒன்றரை மணி நேர பயிற்சிக்கு பின் அப்போது தான் ஜிம்மிலிருந்து வெளிவந்தேன். பனி பரவலாக பெய்து கொண்டிருந்தது. பேனை (Fan) முழு ஸ்பீடில் வைத்து தலையணையை கீறி உள்ளிருந்த பஞ்சை பறக்கவிட்டால் எப்படி அறை முழுவதும் நிறையுமோ அதே போல மேகம் ஸ்னோபிளேக் (Snowflake) என்று சொல்லப்படும் இந்த பனித்துகள்களை தூவிக் கொண்டிருந்தது. தலைக்கு குல்லாய், உடம்புக்கு ஸ்வெட்டர், அதற்கு மேல் ஒரு ஜாக்கெட் அணிந்திருந்த போதும் காரை உயிர்பிக்க வேண்டி க்ளவ்வை கழற்றி கைகளை பாக்கெட்டில் நுழைத்து சாவியை எடுத்தேன். அந்த நொடிப் பொழுதில் கைகளில் படர்ந்த பனித்துகளை பார்த்த போது ஆர்வமாக இருந்தது. நுரை போன்று மெல்லியதாக இருந்த அது விழுந்த ஓரிரு நொடிகளில் நீர்த்திவளையாய் மாறியது.



                  நிமிர்ந்து பார்த்த போது அங்கே என்னுடைய கார் பனியால் மூடப்பட்டு இருந்தது. சுமார் அரை மணி நேரம் செலவு செய்து சுத்தம் செய்தேன். பின் புறப்பட்டு என் அப்பார்ட்மெண்டை அடைந்ததும் என் ரூம்-மேட் என்னிடம் "என்னடா, சீக்கிரம் வந்துட்டே. ஜிம்முக்கு போனா ஒரு நாலஞ்சு மணி நேரமாவது இருக்கணும். போன உடனே வரப்படாது. அப்புறம் எப்படி தொப்பை கொறயும்?" என்றான். அவனை ஒரு நோட்டம் விட்டேன். ஐந்து மணிக்கு ஆபிசில் இருந்து வந்ததில் இருந்து ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு சோபாவில் அமர்ந்து வீட்டுக்குள் ஹீட்டரை போட்டுக் கொண்டு ஒரு கூடை நிறைய பாப் கார்னை கொறித்துக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்த அவன் என்னிடம் அட்வைஸ் செய்த போது எனக்கு பதிலேதும் சொல்லத் தோன்றவில்லை.. ஒரே விஷயம் அவன் ஒல்லியாக மெலிந்து இருப்பதுதான்.

                   வழக்கம் போல் இரவில் எனது உணவான பாலும் அவளும் அவலும் சாப்பிட்டுவிட்டு படுத்தேன். அவனுடைய சிக்கன் ஓவனில் வெந்து கொண்டிருந்தது இச்சையை தூண்டினாலும் மனதிற்கோர் கச்சையை கட்டி தூங்க வைத்தேன். மறுநாள் காலை எழுந்ததும் பிரஷ் செய்துவிட்டு எப்போதும் போல அப்பார்ட்மெண்டை மூன்று முறை வலம் வந்தேன். அதற்குள் நண்பர் டென்னிஸ் ரேக்கட்டுடன் வர அவருடன் இரண்டு கேம்கள் விளையாடிவிட்டு அறைக்குத் திரும்பினேன். மணி ஏழரையை தாண்டிய போதும் போர்வைக்குள்ளிருந்து வெளிவராமல் படுத்துக் கொண்டிருந்தான் அவன்.

                    அமெரிக்காவில் கார்பூலிங் என்று ஒரு நடைமுறை இருக்கிறது. ஒரே அலுவலகத்திற்கு செல்லும் இரண்டு அல்லது நான்கு பேர் ஒன்றாக சேர்ந்து ஒரே காரில் அலுவலகத்திற்கு பயணிப்பது தான் அது. சுழற்சி முறையில் ஒவ்வொருவருடைய காரில் ஒவ்வொரு நாள் செல்வதால் அமெரிக்காவின் எண்ணெய் வளம் சேகரிக்கப்பட்டு பொருளாதாரம் உயர்வதாக சொல்கிறார்கள். அப்படி அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும் நபர்களுக்கு அலுவலகத்தில் தனி சலுகை. கொஞ்சம் லேட்டாக வந்தாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை. (அதையும் நம்ம ஆட்கள் தனியாக லேட்டாக வந்துவிட்டு கார்பூலிங் என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்) இவர்களுக்கென சாலையில் தனி வரிசை கூட உண்டு.

                   பொதுவாக என் வேலை நேரம் மற்றவர்களுடன் ஒத்துப் போகாது என்பதால் பெரும்பாலும் தனியாக செல்வேன் என்றாலும் ஆந்திராவை சேர்ந்த ஒரு சக பணியாளன் என்னுடன் அவ்வப்போது பயணிப்பது வழக்கம். நான்கைந்து மாதங்களுக்கு முன் அவன் என் அலுவலகத்தில் சேர்ந்த போது பூசின உடம்பும், சப்பி சீக்ஸ் (Chubby cheeks)  என்று நாம் சிறுவயதில் படித்தது போல் செழிப்பான கன்னங்களும், களையான முகமும், எப்போதும் தவழ்கின்ற ஒரு புன்னகையும்  கொண்டிருப்பான்.  எப்போது பார்த்தாலும் கேலரிஸ், வெயிட் லாஸ், டயட் என உடல் குறைப்பை பற்றியே பேசிக் கொண்டிருப்பான். எனக்கு அதில் அவ்வளவு ஆர்வம் இல்லையென்றாலும் அவன் சொல்வதை தவறாமல் கேட்பேன்.

                     அவன் இப்போது அந்த டயட் கண்ட்ரோல் செயல்பாடுகளின் பயனாய் பதினைந்து பவுண்டுகள் (கிட்டத்தட்ட எட்டு கிலோ) குறைந்திருப்பதாய் சொன்னான். அவன் உருவத்திலும் பல மாற்றங்கள். ஐயாவில் அம்சமாக இருந்த நயன்தாரா சத்யம் படத்தில் எலும்பும் தோலுமாக வருவாரே, அதுபோல் காட்சியளித்தான்.  நான் ஏதாவது சொல்வது அவனுடைய முயற்சிக்கு பங்கம் விளைவிக்கும் என்று கருதி நான் பேசாமல் இருந்துவிட்டேன். ஓரிரு மாதங்களுக்கு பிறகு அவன் சில நாட்கள் தொடர்ச்சியாய் அலுவலகம் வராத காரணத்தால் அவன் அபார்ட்மெண்டுக்கு சென்று விசாரித்தேன். தொடர்ந்து செய்த எக்சர்சைஸ், அதீத வேகத்தில் உடல் குறைப்பு போன்றவற்றால் அவன் மேட்டபாலிக் பங்க்ஷனாலிட்டியில் எதோ குழப்பம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி கிடந்தான். உதடுகள் வெடித்து, உடல் மெலிந்து அவனை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

                  ஒருவர் குண்டாக இருப்பதற்கு அவர் உண்ணும் உணவு மட்டும் காரணமல்ல என்பதை இந்த உலகம் ஒத்துக்கொள்வது என்பது குதிரைக் கொம்பு. ஒருவருடைய தாய்-தந்தை மரபு வழி, அவர் எடுத்துக் கொள்ளும் ஸ்டீராய்ட்ஸ் எனப்படும் மருந்து வகைகள், தட்ப வெப்ப நிலை இப்படி எல்லாமும் காரணி தான். ஒரே அளவு உணவை உண்ணும் இருவர் ஒரே மாதிரி இருப்பதில்லை. தவிர உடல் பருமன் என்பது அழகை ஆராதிப்பவர்களுக்கு மட்டுமே அசிங்கமாக தெரியும். உள்ளத்தின் மூலம் ஒருவரை நேசிப்பவருக்கு அது ஒரு விஷயமே அல்ல. என்ன நான் சொல்வது!

40 comments:

  1. உடல் பருமன் சாப்டுற சாப்பாட்டுனால இல்லன்னு சொன்னா ஒருத்தரும் புரிஞ்சுக்க மாட்டாங்க... நம்மோட உடம்ப நேசிச்சாலே போதும், அதுக்கு என்ன வகையான சாப்பாடு வேணும்னு நமக்கே தெரிஞ்சுடும்

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஜீ.டி.. உண்மைதான்.. சரியான உணவை சாப்பிட்டால் போதும்.. எதுவும் தவிர்த்தல் உடல் நலத்துக்கு கேடு தான்! (ஆமா, காலேஜ் போகலையா இன்னைக்கு?)

      Delete
  2. குதிரைக் கொம்பு தான் ஆவி... அதெல்லாம் ஒரு பொருட்டாகவே கொள்ளக் nகூடாது....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டுக் கொண்டிருந்தால் நமக்கு அதுக்கு மட்டும் தான் நேரம் இருக்கும்! நன்றி DD

      Delete
  3. உங்கள் கடைசி பாரா கருத்துடன் நான் நூறு சதவிகிதம் ஒத்துப்போகிறேன். இவனுங்களுக்கெல்லாம் வயத்துல பல்லு. அதான் நம்மைப் பார்த்து பொறாமை படறாங்க...விடுங்க ஆவி!

    சிலபேரு எல்லாத்தையும் overdo பண்ணுவாங்க உங்கள் ஆந்திரா நண்பர் போல.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. நானும் அப்படித்தான் சொல்லிக்குவேன்.. நன்றி அம்மா!

      Delete
  4. இதை முயற்சி செய்யுங்கள், ஆவி
    http://amudhavan.blogspot.in/2012/12/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. படித்துப் பார்த்தேன் அம்மா.. இன்றிலிருந்தே முயற்சித்தும் பார்க்கிறேன்.. நன்றி அம்மா!

      Delete
  5. என்ன சொன்னாலும் நான் இளைக்காம விடமாட்டேன்!!

    ReplyDelete
    Replies
    1. அக்கா.. இளைக்கறது நல்ல விஷயம் தான். ஆனா அதுக்காக அதிக கவனம் எடுத்து, சாப்பாட்டை தவிர்த்து செய்யும் முறைகளை தான் வேண்டாம் என்கிறேன்.. முறையான உடற்பயிற்சிகளை சரியான கால அளவில் செய்தால் நலமே! :)

      Delete
  6. எல்லாத்துக்கும் ஒரு காலம் இருக்குல்லெ? ஒல்லிப்பிச்சியா இருந்த காலம் போய் இப்போ சின்னப் பூசணிக்காய் காலம்.

    கைகால் நல்லா இருந்தால் போதும். இளைச்சு இப்போ என்ன ஆகப்போகுதுன்னு மனசை தேத்திக்கிட்டேன்.:-)))

    சனிக்கிழமை சாகறதைப்போல் இருக்கும் லுக் நல்லாவா இருக்கு?

    ReplyDelete
  7. //சனிக்கிழமை சாகறதைப்போல் இருக்கும் லுக் நல்லாவா இருக்கு?//

    ஹஹஹா.. உங்க உவமை நல்லா இருக்கு.. வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  8. என்ன ஆவி பாஸ் "நீங்க குண்டா இருக்கீங்கன்னு நேத்து யாரும் அட்வைஸ் பண்ணினாங்களா என்ன...? ஒரே அட்வைஸ் மழையா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. இல்லப்பா.. முன்னமே எழுத நினைச்சது தான். கொஞ்சம் லேட்டா வெளிவந்திருக்கிற பதிவு! என்னப் பார்த்து யாராவது குண்டா இருக்கேன்னு சொல்லிட முடியுமா? சொல்லிட்டு போய்ட தான் முடியுமா.. என் தம்பி சீனு அவங்கள சும்மா விட்டுடுவாப்புலையா?

      Delete
  9. நல்ல பகிர்வு!பரம்பரையும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்!உடற்பயிற்சி நன்மை தரும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாங்க.. நன்றி பாஸ் ..

      Delete
  10. தவிர உடல் பருமன் என்பது அழகை ஆராதிப்பவர்களுக்கு மட்டுமே அசிங்கமாக தெரியும். உள்ளத்தின் மூலம் ஒருவரை நேசிப்பவருக்கு அது ஒரு விஷயமே அல்ல

    தீவிரமாக உடலைக்குறைக்க - மேட்டபாலிக் பங்க்ஷனாலிட்டியில் எதோ குழப்பம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி கிடந்தான். உதடுகள் வெடித்து, உடல் மெலிந்து அவனை பார்க்கவே பரிதாபமாக இருந்தது...பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா, அவ்வளவு வருத்திக் கொள்ளத் தேவையில்லை..

      Delete
  11. அண்ணேன் ஆவியண்ணேன் நீங்கல்லாம் ஒரு குண்டா ...? குண்டு பதிவுக்கு சப்போர்ட் பண்ண ஒரு "பெரிய" குரூப்பே இருக்கு போல ....?

    நாங்கல்லாம் நாகேஷ் குரூப்பு ...

    ReplyDelete
    Replies
    1. வா தம்பி, எங்க பக்கத்துல நிக்கும் போது தான் உங்களுக்கே மதிப்பு!! தவிர தெரியாம கூட செவுத்துல சாஞ்சு நின்னுடாதீங்க.. அப்புறம் ஒட்டடை குச்சிக்கும் உங்களுக்கும் வித்தியாசம் தெரியாம போயிடும்.. (ச்சும்மா விளையாட்டுக்கு.. எப்பவும் போல காமெடியா எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறீர்கள்!!)

      Delete
    2. எங்க "ஆத்மி" தான்யா மெஜாரிட்டி..ஹிஹிஹி..

      Delete
  12. #பின்னூட்டம் மட்டும் தான் எங்களுக்கு ஊக்கம் தருமே!!

    ஏற்கனவே நீங்க ஊக்கமாத்தானே இருக்கீங்க ... :)

    ReplyDelete
    Replies
    1. கலாய்ச்சுட்டாராம்.. (அத நான் போட்டு ஆறேழு மாசம் ஆகுது. இப்போ அது சம்பந்தமான பதிவுக்கு கரெக்டா எடுத்து போட்ட உம்ம அறிவ கண்டு வியக்கேன்..)

      Delete
  13. “உடல் பருமன் என்பது அழகை ஆராதிப்பவர்களுக்கு மட்டுமே அசிங்கமாக தெரியும். உள்ளத்தின் மூலம் ஒருவரை நேசிப்பவருக்கு அது ஒரு விஷயமே அல்ல. என்ன நான் சொல்வது“

    நல்லா சொன்னீங்க.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க!

      Delete
  14. குண்டாக இருப்பது ஒன்றும் பெரிய குற்றமில்லை .ஆனாலும்
    எங்கள் கால்கள் தான் பாவம் சகோதரா .ஒரு கால கட்டத்தில்
    முழங்கால் சில்லுகள் தேய்ந்து படுக்கையில் விழுத்தாமல்
    இருப்பதற்காக உடலின் எடையைக் குறைப்பதே சாலச் சிறந்தது .
    அதுக்காக உணவைக் குறைத்து வயிற்றைப் பட்டினி போடுற
    வேலைகள் சரி வராது என்பதே எனது கருத்தும் .இரவில் மட்டும்
    தானிய வகைகளை உண்ணலாம் .பகலில் வேண்டுமான அளவு
    உண்ணலாம் .ஆனால் முற்றிலும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவர்ப்பதன் மூலமே உடல் எடையைக் குறைக்க முடியும் .(அது சரி ஊருக்கு உபதேசம் செய்யுற நீங்க எவ்வளவு எடையைக் குறைத்துள்ளீர்கள் என்று கேட்கக் கூடாது ஒ.... அழுதிருவன் :)))))))))))))) ) அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. சரிதான் சகோ, ஒன்றும் கேட்கவில்லை.. போதுமா !!

      Delete
  15. நமக்கெல்லாம் உடம்பு
    வஞ்சமில்லாமல் வளர்ந்துகொண்டே போகிறது.
    என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் குறைவென என
    அடம்பிடிக்கிறது. நானும் இப்படித்தான் இதற்கு
    பலகாரணிகள் இருக்கும் என்று மனதைத் தேற்றிக்கொள்வதுன்ன்டு......

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, அதுதான் உண்மையும் கூட..

      Delete
  16. அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    //தொடர்ந்து செய்த எக்சர்சைஸ், அதீத வேகத்தில் உடல் குறைப்பு போன்றவற்றால் அவன் மேட்டபாலிக் பங்க்ஷனாலிட்டியில் எதோ குழப்பம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி கிடந்தான். உதடுகள் வெடித்து, உடல் மெலிந்து அவனை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.//

    நல்லாக் கெளப்புறாய்ங்கடா பீதிய...

    ReplyDelete
    Replies
    1. அலர்ட்டா இருக்க வேண்டி தான் இங்க போட்டிருக்கேன் நைனா..

      Delete
  17. ஹாஹா ச்சீயர்ஸ்

    ReplyDelete
  18. //உள்ளத்தின் மூலம் ஒருவரை நேசிப்பவருக்கு அது ஒரு விஷயமே அல்ல. என்ன நான் சொல்வது!// ரைட்டு ரைட்டு (ஓட்டல் இல்ல உண்மைதான்...)

    ReplyDelete
  19. நல்ல கருத்து.

    உடல் வாகு என தமிழில் சொல்வார்கள் - சிலருக்கு என்ன தான் சாப்பிட்டாலும் உடம்பு சதை ஏறவே ஏறாது....

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...