Tuesday, January 29, 2013

யார் பேசியது?

                            பள்ளி  நாட்களில் என் தந்தையார் பணிபுரிந்த  அதே பள்ளியில்  படித்த காரணத்தால் அதிகப்படியான  குறும்புகள் ஏதும் செய்ததில்லை. அப்படியே செய்தாலும் முடிந்தவரை அவை வெளியே வராமல் பார்த்துக்கொள்வேன். நான்  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இது.

                      
                               பள்ளியில் படிக்கையில் எப்பொழுதும் முதல் அல்லது இரண்டாம் பெஞ்சுகளில் அமர்வது என் வழக்கம். ஆனால் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றைத் தன் பெயராகக் கொண்ட ஒரு ஆசிரியை தமிழ்ப் பாடம் எடுக்கும் போது மட்டும் பின் வரிசையில் சென்று அமர்ந்து கொள்வேன். அந்தப் பாட வேளையின்  போது வகுப்பே கண்ணுறங்கும்.
தமிழை இன்னும் உயிரூட்டத்துடன் எடுக்கலாம் என்பது என் தாழ்மையான அதே சமயம் வெளியே சொல்லப்படாத கருத்தாக இருந்தது.


                               அப்படி ஒரு முறை நான் பின்வரிசையில் என் பள்ளித் தோழன் ( என் மாமாவின் புதல்வன்) கார்த்தியுடன் அமர்ந்திருந்தேன்.  கடைசி பெஞ்ச் மாணவர்களைப் பார்க்கும் போது நான் மிகவும் உயரம் குறைவாக இருப்பேன். அதனால் ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து விட்டால் என்னைப் பார்ப்பது மிகவும் கடினம். பொதுவாக பின்வரிசை மாணவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்கு அதிகம் பதிலளிக்க மாட்டார்கள் என்பதால் ஆசிரியர்களும் அவர்களிடம் கேள்விகளைக் கேட்பது குறைவாகவே இருக்கும்..


                              அன்று அந்த ஆசிரியை சிலப்பதிகாரத்தை பற்றி நடத்தி முடித்திருந்தார். பின்னால் அமர்ந்திருந்த எங்களுக்கோ புதிதாய் வெளியாகியிருந்த திரைப்படக் காட்சி ஒன்றைப்  பற்றிய சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. ஒன்றிரண்டு முறை ஆசிரியை மேசையை பிரம்பால் தட்டிய போது சற்று அமைதியானோம். பாடத்தை முடித்துவிட்ட அவர் "யார் கூறியது" என்ற பகுதியை மாணவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ( செய்யுளில் வரும் ஒரு வரியை ஆசிரியர் கூறும் போது அந்த உரையாடலை இலக்கியத்தில் யார் பேசியது என்று கூற வேண்டும்)


                             இச்சமயம் நாங்கள் மீண்டும் சர்ச்சைக்குள் இறங்கிவிட , அப்போது ஆசிரியர் திடீரென்று "யார் பேசியது" என்று எங்களை நோக்கி கேட்க,  ஆசிரியை தன்னிடம் கேள்வியை கேட்கிறார் என நினைத்த கார்த்தி எழுந்து "கண்ணகி டீச்சர்" என்றவுடன் வகுப்பில் சிரிப்பும் ஆரவாரமும் அடங்க சிறிது நேரமானது. ஆசிரியையும் கோபத்தை மறந்து சிரித்தபடியே " உட்காரு கழுதே" என்றார்.

                                   

10 comments:

  1. சூப்பர்... நானும் இதே போன்ற பல தமிழ்த்தாலாட்டில் உறங்கியிருக்கிறேன்....

    ReplyDelete
  2. மலரும் நினைவுகள் மலர வைக்கிறது

    ReplyDelete
  3. ஏதோ அவராவது பாடத்தை கவனித்தாரே...

    ReplyDelete
  4. தாலாட்டும் ஐம்பெருங்காப்பியத்
    தமிழ் ...

    ReplyDelete
  5. கண்ணகி கதை சிலப்பதிகாரத்துலயா வருது?!

    ReplyDelete
  6. ஸ்கூல் பையன்-- ஆமாங்க, இதமான தாலாட்டு அது.

    ReplyDelete
  7. சரளா- அப்பாடா, இப்போதான் வந்துருக்கீங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  8. எழில் மேடம், அதை கவனிக்காம இருந்ததனால தான் என்னால இப்போ இந்த வலைப்பதிவு எழுதற அளவுக்காவது தமிழ் தப்பிச்சுது,,!

    ReplyDelete
  9. இராஜராஜேஸ்வரி- நாங்க கிண்டலா அப்போ சொன்னது - "ஒரு ஐம்பெரும் காப்பியமே இன்னொரு ஐம்பெரும் காப்பியத்தை நடத்துகிறதே ன்னு.. :-) உங்கள் கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  10. ராஜி, ஆமாங்க, சிலப்பதிகாரத்துலதான் வருதுங்க.. என்னங்க, சென்னை தமிழ்நாட்டுலயா இருக்குங்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்டுடீங்க..

    வருகைக்கு நன்றி..!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails