Friday, March 22, 2013

What's Your தாய்மொழி, Dude?

                       

                            பல ஆண்டுகளாக என் மனதை அரித்து வரும் ஒரு கேள்வி இது. தாய்மொழி என்பது என்ன?  தாயின் குடும்பத்தார் வழிவழியாக பேசி வரும் மொழியா? இல்லை தாய் பேசும் மொழியா? ஒருவேளை தாய் பல மொழிகள் பேசுபவராயின் அந்த பிள்ளையின் தாய் மொழி என்ன? எதை வைத்து ஒரு குழந்தையின்/ ஒருவரின் தாய்மொழி அறியப்படுகிறது.

                             நம்மில் எவ்வளவு பேருக்கு, அவரவர் தாய்மொழியில் (அவ்வாறு சொல்லப்பட்ட மொழியில்) பேசுவதற்கும், எழுதுவதற்கும் தெரியும்? என்னைப் பொறுத்த வரை தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சிறு வயதில் இருந்து கற்று தேர்ந்து, நன்றாக எழுதவும், படிக்கவும், மற்றவர்க்கு அந்த மொழியில் உள்ள சுவையினை பகிர்ந்து கொடுக்கவும் இயல வேண்டும்  ஒரு பத்து நிமிடமாவது கொடுக்கப்பட்ட ஒரு தலைப்பில் தடுமாற்றமில்லாமல் பேசத் தெரிந்திருக்க வேண்டும். எந்த மொழியில் அவர்களால் அதை சிறப்பாக செய்ய முடிகிறதோ அதுவே அவர்களின் தாய் மொழி..

                              எத்தனை பேரால் இந்த கருத்தினை ஒத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சிறிய உதாரணம் கூற விரும்புகிறேன். என் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் குடிபுகுந்து சுமார் பதினைந்து வருடங்கள் ஆகின்றது. அவருடைய மகள் அங்கேயே பிறந்து, படித்து வளர்ந்தவள். என்னதான் நண்பரும் அவர் மனைவியும் அந்தப் பெண்ணுக்கு வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுத்தாலும், அந்தப் பெண்ணுக்கோ உரையாடல்களில் ஆங்கிலம் கைகொடுக்கும் அளவுக்கு தமிழ் வருவதில்லை.

                                எனக்கு தெரிந்த எத்தனையோ நண்பர்கள், அவர்களுடைய "தாய்மொழி" என்று கூறிக் கொள்ளும் மொழியில் நன்றாக பேசத் தெரிந்தாலும், அந்த மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் ஒரு நல்ல இசை கேட்க, ரசிக்க அவர்கள் வேறு மொழியை தேர்ந்தெடுப்பதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். எதற்காக, யாருக்காக இந்த வெளிவேஷம்..

                                  மற்றவர்களின் சங்கதி எதற்கு,  எனக்கு தாய்மொழி என்று சொல்லப்பட்ட மொழியை என்னால் புரிந்து கொள்ளவும் பேசவும் முடியும் என்றாலும், எனக்கு தமிழ் மொழி பிடித்த அளவுக்கு, புரிந்த அளவுக்கு, மற்ற மொழிகள் பிடிபட்டதில்லை. இப்பொழுதும் என் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்த எனக்கு தமிழ் போல் ஒரு சிறந்த மொழி இருப்பதாய் தோன்றவில்லை. ஆதலால் எனை வளர்த்த தமிழையே  என் தாய்மொழி என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.. நீங்க எப்படி?




7 comments:

  1. தமிழ் - தாய்மொழி என்பது பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்-உண்மை தான்...

    எந்த தாய்மொழியையும் முழுதாக புரிந்து கற்றுக் கொள்ளா விட்டால், மற்ற எந்த மொழியையும் முழுதாக கற்றுக் கொள்ள முடியாது...

    ReplyDelete
  2. அட விடுங்க பாஸ்... வேலை தொழில் காரணமாக புலம்பெயர்வதில் உள்ள பிரச்சனை இது... எல்லா மொழியினருக்ம் பொதுவானதே...

    ReplyDelete
  3. உங்க கருத்து உண்மைதாங்கோ! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  4. I'm awestruck after reading this post as i'm not proficient in a single language.;-)Malayalam,Tamil,English neither of those has been my cup of tea.. :-( So which language do i needa take as the mother tongue.?? Help me out aavee bro..!

    ReplyDelete
  5. நமக்கு தமிழ் பிடிச்சிருக்கு. அதான் காரணம்.. :)

    ReplyDelete
  6. ஒருவர் பல மொழிகளையும் கற்று கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு பல மொழிகளிலும் பேசவும் எழுதவும் தெரிகிறது. ஆனால் அவரின் தாய் மொழி எது என்று கேட்டால் தன் பெற்றோர் தமக்கு முதல் முதல் கற்று தந்த மொழி எதுவோ அவர்கள் பேசி எழுதும் மொழி எதுவோ அதுவே தன்னுடைய தாய் மொழியாக ஏற்றுக்கொள்வார்.
    ஆனால் தந்தை தாய் மொழியை கற்று தேர்வதற்கு முன்னால் புலம் பெயர்ந்துவிட்டால் அந்த இடத்தினுடைய மொழியையே தன் தாய் மொழி என சொல்வான்.
    தந்தை ஒரு மொழியை உங்களுக்கு கற்றுத்தருகிறார் தாய் ஒரு மொழியை கற்றுத்தருகிறார் (கவனிக்க எழுதப்படிக்க) அந்த சூழ்நிலையில் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் ?
    இன்னொன்று உங்களுக்கு ஒரு மொழி பேச மட்டுமே தெரிந்திருந்தால் அது தாய் அறிமுகப்படுத்திய மொழியே தவிர அது தாய் மொழி ஆகாது. ஏனென்றால் அந்த மொழியை உங்களால் படிக்கவும் எழுதவும் தெரியாது அதை உங்கள் தாய் மொழி என்று சொல்லிக்கொள்வது அம் மொழியை கேவலப்படுத்துவதாகும்.
    பள்ளியில் சேரும் போது (கவனிக்க சேரும் போது) தாய் மொழி என்ற கேள்விக்கு எழுதப்படிக்க விரும்பும் மொழி என்றே அர்த்தம் காணப்படுகிறது.

    ReplyDelete
  7. வணக்கம் !
    தங்களை வலைச்சரத்தின் ஊடாக அறிமுகம் செய்துள்ளனர்
    வாழ்த்துக்கள் .மனதில் எழுந்த ஓர் ஆதங்கத்தினால் இக் கேள்வி எழுந்திருக்கலாம் என்றே கருதுகின்றேன் .இருப்பினும்
    எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழியான எம் மொழியே
    தாய் மொழி என்று கூட நாம் பெருமைப் பட்டுக் கொள்ள கூடிய
    மொழி எம் தமிழ் மொழி தான் .வாழ்த்துக்கள் மென் மேலும் உங்கள்
    ஆக்கங்கள் சிறப்புற .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...