
ரொம்ப நாளா டிரைவிங் லைசென்ஸ்ல அட்ரஸ் மாத்தணும்னு நினைச்சு போன வாரம் வியாழக்கிழமை தான் திடீர்னு ஞானோதயம் வந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் போனேன். நான் எங்க லைசன்ஸ் எடுத்தேனோ அங்க போய் கேட்டதுக்கு அவங்க "இப்போ RTO ஆபிஸ் நாலு zone ஆ பிரிச்சுட்டாங்க.. நீங்க போக வேண்டியது சவுத் சோன்" என்றார்.. அது எங்க மேடம் இருக்குன்னு கேட்கவும், அவங்க கிட்ட நூறு ரூபாய் கடன் கேட்டது போல முகத்தை வச்சுகிட்டு "பீளமேடு" ன்னு சொன்னாங்க.. "அத கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொன்னா என்னா" ன்னு கேட்டுட்டு (மனசுக்குள்ள தான்!) பீளமேடு வந்தேன். அங்க இங்கே கேட்டு ஆபிஸ் கண்டுபுடிச்சு போனா மணி பதினொண்ணு. யார்கிட்ட போய் கேக்கணும்னு தெரியாம முன்னாடி பணம் கட்டற கவுண்டரில் போய் கேட்டேன் "லைசென்சுல அட்ரஸ் மாத்தணும். யாரைப் பார்க்கணும்". உள்ளே இருந்த அம்மா "பி- பிளாக் ல போய் கேளுங்க" என்றார்.. நானும் கட்டிடத்தை இரு முறை சுற்றி வந்தேன். ஒரே ஒரு பிளாக் தான் இருந்தது.. மீண்டும் அதே அம்மாவிடம் சென்று "பி-பிளாக் எங்க இருக்கு" என்றேன்.. அவர் சற்றே கடுப்புடன் "பின்னால இருக்கு பாருங்க சார்" என்று தன் மானிட்டர் திரையை பார்த்துக் கொண்டே கூறினார்.
அவர் அறையை தாண்டி சிறிது தூரம் நடந்ததும் ஒருவர் காத்து உள்ளே வர ஜன்னலைத் திறந்து வைத்து முகத்தில் சிங்காரவேலனில் கருவாடு ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் போல் கர்ச்சீப்பை கட்டியிருந்தார். அவரிடம் சென்று "ஸார்.. இங்க பி பிளாக் எங்க" என்றேன். அவரோ "இதாம்பா பி-பிளாக்" என்றார்.. மொக்கை பிகரை எதிர்பார்த்திருந்த நித்தியானந்தருக்கு ஹன்சிகாவே எதிரில் வந்தது போல் எனக்கு வந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. "சார், என் டிரைவிங் லைசென்சுல அட்ரஸ் சேன்ஜ் பண்ணனும்." என்றேன். அவர் என்னிடம் வேறெதுவும் கேட்காமல் "நீங்க ஒரு NOC வாங்கணும். வாங்கி அதோடு ஐம்பது ரூபாய் பணம் கட்டுங்க" என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.. "ஸார்" இது நான். கேவலமான ஒரு லுக்கை என் மீது சிந்திவிட்டு "என்ன" என்பதுபோல் தன் கண்ணாடியை உயர்த்திக் கேட்டார். "இந்த NOC பாரம் எங்க கிடைக்கும்?" என்றேன்.. " 'முன்னால போய் கேளுப்பா" என்றார்" இன்னொரு கேள்வி கேட்டால் கேளுப்பா, கேளுடா ஆகிவிடும் என்பதை உணர்ந்த நான் முன்னாடி சென்றேன்.
பணம் கட்டற கவுண்டரில் கேட்கலாம் என்று யோசித்து பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் இருந்த ஒரு அறையின் உள் சென்று அங்கு வேலை செய்துகொண்டிருந்த ஒரு முதியவரிடம் போய் NOC பார்ம் எங்கு கிடைக்கும் என்பதை கேட்டேன்.. அவர் உதயம் NH4 படத்தில் கானா பாலா கேட்பது போல் "NOC பார்ம்மா , உன் கதைய மொதல்ல இருந்து சொல்லு" என்றார்.. மீண்டும் ஒரு முறை என் தேவையை சொல்லவும், ஏம்பா ஆலந்துறையும் சவுத்து, சிங்காநல்லூரும் சவுத்து. எதுக்குப்பா NOC வாங்கணும்?' என்று என்னைப்பார்த்து கேட்டார். "தெரியலீங்க அதோ அந்த பி-பிளாக்கில் இருந்தவர் தான் வாங்க சொன்னார்" என்றேன். "ஒண்ணுமே தெரிஞ்சுக்காம வேலை செய்யுறானுக பாரு." என்று அவரைத் திட்டிவிட்டு வெளிய போய் ஒரு ஒயிட் பேப்பர் வாங்கி அதுல விலாசமாற்றம் கோரி ஒரு லெட்டர் எழுதி அம்பது ரூபா பணம் கட்டுப்பா" என்றார்.
'வெளியே' என்று அவர்கள் சொன்னது வெளியே இருந்த ஒரு ஸ்டேஷனரியை என்பது என் மூளை செல்களுக்கு எட்ட சிறிது நேரம் பிடித்தது. அங்கு சென்று ஒரு ஒயிட் ஷீட்டும், எதற்கும் இருக்கட்டும் என ஒரு NOC பார்ம்மும் வாங்கி நூறு ரூபாய் கொடுத்தேன்.. சில்லறை இல்லை என்று சொல்லி சிறிது நேரம் நிற்க வைக்க நான் வண்டியை எடுத்து ரோட்டில் இருந்த ஒரு பழமுதிர் நிலையத்தில் சில்லறை கேட்க, அவரும் கை விரித்தார். அவரிடம் இரண்டு மேங்கோ ஜூஸ் ஆர்டர் செய்து நானும் உடன்வந்திருந்த தம்பியும் குடித்துவிட்டு நூறு ரூபாயை நீட்ட இப்போது சில்லறை கிடைத்தது. திரும்ப வந்து பார்ம்மை வாங்கி அதை நிரப்பி, வெள்ளைத்தாளில் விலாச மாற்றமும் கோரி கொண்டு போய் பணம் கட்டும் கவுண்டரில் நீட்ட அதை வாங்கிய அந்த அம்மா ஐம்பது ருபாய் கேட்க, நான் மீண்டும் ஒரு நூறை நீட்ட அவரோ சில்லறை கொடுங்க ஸார். என்றார். அந்த ஏரியாவில் இருந்த இரண்டு கடையிலும் கேட்டு கிடைக்காமல் பின் அந்த ஸ்டேஷனரியில் ஒரு பேனா வாங்கி சில்லறை உண்டாக்கினோம். ஐம்பதை கொண்டு வந்து அங்கே கட்டி பில் வாங்கியதும் அவர் அந்த பார்ம்மை கொண்டு போய் பி-பிளாக்கில் கொடுக்கச் சொல்ல.. இப்பதான் நமக்கு பி-பிளாக் நல்லா தெரியுமே என்று சந்தோஷத்துடன் ஓடி வந்து நுழையாத ஜன்னல் கம்பிகளூடே என் கரங்களையும் அதோடு வைத்திருந்த பார்ம்மையும் கொடுத்தேன். NOC மற்றும் லெட்டரை பார்த்துவிட்டு "பணம் கட்டுன ரசீது எங்க" என்றார். அதை நான் நீட்ட "இத முன்னால ஒட்டி, மத்த பேப்பர், ஜெராக்ஸ் எல்லாத்தையும் பின் பண்ணி கொண்டு வாங்க" என்றார். அவர் டேபிள் மீதே ஒரு ஸ்டேப்ளர் இருந்தது.
நான் வாங்கிக் கொண்டு மீண்டும் "முன்னாடி" வந்து காசு கொடுத்து ஸ்டேப்ளர் மற்றும் Gum வாங்கி அவர் கேட்டது போலவே கொடுத்தேன். அதை வாங்கிய அவர் அலட்சியமாய் டேபிளின் ஓரத்தில் வைத்துவிட்டு நாளைக்கு சாயந்திரம் ஒரு நாலு மணிக்கு வாங்க " என்றார். "சார், இன்னைக்கு கிடைக்காதா சார்" என்றேன்.. "அதெல்லாம் சரிபார்க்கணும்.. நாளைக்கு வாங்க" இந்த முறை கடுமையாக கூற வேறு வழியின்றி வீடு வந்தேன். மறுநாள் மாலை அங்கே செல்ல அரை மணி நேரம் அமர சொல்லிவிட்டு அவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் சென்று கேட்க சலித்துக் கொண்டே நேற்று வைத்த இடத்திலிருந்து எடுத்து மற்றொரு அறைக்கு சென்று ஐந்து நிமிடத்தில் வந்தார். நான் கைகளில் அவர் கொடுத்த பேப்பரை வாங்கிக் கொண்டு "சார், இத நேத்தே செய்து கொடுத்திருக்கலாமே, அஞ்சு நிமிஷம் தானே ஆச்சு" என்று பவ்யமாக கேட்டேன்.. அவர் முகத்தில் தெறித்த கோபத்துடன் "உன் ஒருத்தனோட வேலைய பார்த்தா போதுமா, வேற வேலையே இல்லையா" என்று ஆரம்பிக்க இதற்கு மேல் இருந்தால் அவர் ஹல்க் ஆக மாறக் கூடிய வாய்ப்பிருந்ததால் அங்கிருந்து அகன்றேன். அடுத்து எங்கே செல்ல வேண்டும் என்று தெரியாமல் அலுவலகத்தை சுற்றி வந்தேன். ரினிவல், விலாசமாற்றம் என்று கூறி ஒரு அம்புக்குறி போட்ட போர்டை பார்த்ததும் ஆவலோடு அந்த அறையை நோக்கி ஓடினேன். இதை நேற்றே கவனிக்காததை எண்ணி என்னை நானே நொந்து கொண்டு உள்ளே சென்றேன்.
முன்னால் அமர்ந்திருந்த ஒரு அம்மணியிடம் அப்ளிகேஷனை நீட்ட அவரோ தன் வாட்சை பார்த்து விட்டு" மணி அஞ்சாச்சு, திங்கட்கிழமை வாங்க" என்று கூறி அந்த அறையை விட்டு எழுந்து சென்றார். வேறு வழியின்றி மீண்டும் திங்கள் காலை வர அந்த அறையில் வேறொருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் பார்ம்மை கொடுக்க, அவர் பார்த்துவிட்டு இதுக்கு NOC, ரிக்வெஸ்ட் லெட்டர் எதுவும் வேணாம்.. சேஞ் ஆப் அட்ரஸ் பாரமும், எல்காட் பாரமும் முன்னாடி கிடைக்கும் என்று கூறினார். மறுபடியும் மொதல்ல இருந்தா, என்றபடி 'முன்னாடி' சென்று பாரம் வாங்கி நிரப்பி கொண்டு வந்து அவரிடம் கொடுக்க அவர் இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டு வெரிபை செய்த அந்த காகிதத்தை என்னிடமே கொடுத்துவிட்டு இந்த இரண்டு பார்ம்களிலும் சூப்பிரெண்டன்ட் கையெழுத்து வாங்கி வர பணித்தார். அவருக்காய் அரை மணி நேரம் காத்திருந்து சென்ற போது மணி பனிரெண்டு லஞ்ச் டைம் என எழுந்து போக இருந்த மனிதர் திரும்பி வந்து எனக்கு கையொப்பமிட்டுவிட்டு சென்றது வானத்தைப் போல விஜயகாந்தே நேரில் வந்தது போல் உணர்ந்தேன் . ஒரு வழியாக போட்டோ எடுத்து மீண்டும் ஒரு மணி நேர காத்திருத்தலுக்கு பின் கையில் ஓட்டுனர் உரிமை அட்டையை வாங்கியபோது என் நியுஜெர்சி ஓட்டுனர் உரிமத்தை சிகாகோ முகவரிக்கு மாற்றிய போது பத்து நிமிடங்களில் எல்லா வேலையையும் முடித்து வந்தது நினைவுக்கு வந்தது..
பி.கு: அரசு அலுவலகங்களின் பார்ம்களை பொதுமக்கள் ஏன் ஸ்டேஷனரியில் சென்று வாங்க வேண்டும்? ஒவ்வொரு அரசாங்க காரியத்தின் வழிமுறைகளை விளக்கமாக ஒரு போர்டில் எழுதி வைக்கலாமே.. அலுவலர் இருக்கைக்கு அருகே அவர் வகிக்கும் பொறுப்பை எழுதி வைக்கலாமே!!