Friday, November 20, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (3)



வாசலில் அழைப்பு மணி கேட்டு சுதாரித்து, என் நிலை உணர்ந்தவனாய் கதவைத் திறந்தேன். அங்கே வெயிட்டர் கையில் ஒரு கேக்குடன் நின்றிருந்தான். "Happy Birthday Sangamithra" என்று அதன் மீது எழுதியிருந்தது. என் கடிகாரம் பன்னிரெண்டைக் காட்டியது. அவனிடம் உள்ளே வைக்கச் சொல்லிவிட்டு, அவளை எழுப்ப மனமின்றி ஒரு சிறு காகிதத்தில் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்தைச் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினேன். 18, ஜூன் சாலையில் உள்ள நான் தங்கியிருந்த சிறிய ஹோட்டல் அறைக்கு வந்தேன். சற்று முன் இருந்த கிளர்ச்சி போய், அவள் அழகான பெயரை எண்ணியபடி இமைகள் மூடியது.

எதோ அதிர்ந்ததைத் தொடர்ந்து நான் கண்விழித்தேன். பஸ் எதற்காகவோ நின்றிருந்தது. என்னவென்று வெளியே பார்க்க ஒரு நாய் குறுக்கே பஸ்ஸை கடந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த வேகமான ஓட்டத்தின் இடையில் அது தன் தலையைத் திருப்பி என்னைப் பார்த்துக் கொண்டே ஓடுவது போல தோன்றியது. அதன் கண்கள் என்னைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு இருந்தது. சற்று தூரம் சென்ற அது திரும்பி நின்று என்னைப் பார்த்து குலைக்க ஆரம்பித்தது. சந்தேகமேயில்லை அது என்னைத்தான் பார்க்கிறது. அதன் பார்வையிலிருந்து மறைந்து விட எண்ணி சீட்டினின்றும் என்னை சற்று தாழ்த்திக் கொண்டேன். அதற்குள் டிரைவர் நாயை வசை பாடிவிட்டு வண்டியை தொடர்ந்து ஓட்டலானார்.

என் நெற்றியிலிருந்த வியர்வை துளிகளை துடைத்து விட்டுக் கொண்டேன். இருட்டாக இருந்த அந்த பஸ்ஸிற்குள் ஒரு ஸீரோ வாட்ஸ் பல்பு மட்டும் ஒளி கொடுத்துக் கொண்டிருந்தது. எதேச்சையாக அதைப் பார்க்க ஆரம்பித்த நான் அந்த நீல நிறத்தில் ஈர்க்கப்பட்டு பின் அது என்னுடன் உரையாடுவது போன்ற பிரமை தோன்றியது. "இன்னைக்கு என் பிறந்த நாள்னு கூட மறந்துட்ட தானே?" என்று அது கேட்டதும் என் வாட்சை அழுத்தி தேதி பார்த்தேன். சரிதான். இன்று தான் சங்குவின் பிறந்த நாள். விளக்கு என்னை மீண்டும் அழைத்தது. "சரி பார்த்தாச்சா? வர வர உனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு. கொஞ்ச நாள்ல சட்டை போட்டுக்க கூட மறந்திட போற பாரு" என்று கூறிவிட்டு கலகலவென சிரித்தாள்.

அவள் சிரிப்பு என்னை மிகவும் இம்சித்தது. என் காதுகளைப் பொத்திக் கொண்டேன். இப்போது கொஞ்சம் அமைதியாக இருந்தது. எல்லாம் ஒரு இருபது நொடிகள் தான். காதுக்குள் "டுர்ர்ர்ர்" என்று ஒரு சப்தம். அந்த சப்தம் சங்குவின் விளையாட்டுகளில் ஒன்று. குழந்தை போல ஓடிவந்து காதுக்குள் "டுர்ர்ர்" என்று சப்தமிட்டு செல்வாள். "இப்போ கிளியரா கேக்குமே" என்று அவள் சொன்னது மிகத் துல்லியமாகக் கேட்டது. "வாடா, எனக்கு பயங்கரமா போர் அடிக்குது. இங்கே நான் இருக்கும் இடத்தில் மனுஷங்களே இல்லை. வா நீயும் நானும் மட்டும் சந்தோஷமா
இருக்கலாம்" என்று கூறிவிட்டு அவள் இனிமையான குரலில் பாட ஆரம்பித்தாள்.

 "யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறு வீடு கட்டிக் கொள்ள தோன்றும்,
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம்தோறும் செதுக்கிட வேண்டும்"

என்று பாடிவிட்டு ஓரிரு நொடிகள் அமைதியாகி "என் கூட வாழணும்னு
ஆசைப்பட்ட தானே, இப்போ வா சேர்ந்து வாழலாம்." அவள் குரல் இப்போது ஒரு கண்டிப்போடு ஒலித்தது.

என் கைகளை எதுவோ பற்றி இழுப்பது போல் தோன்றியது. கைகளை உதறியபடி "லீவ் மீ அலோன். ஐ டோன்ட் லவ் யு எனிமோர்.. கெட் லாஸ்ட்" என்று கத்தினேன். பிறகு என் சுற்றம் உணர்ந்தவனாய் திரும்பிப் பார்த்தேன். அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். என் சப்தம் அவர்களை எழுப்பியிருக்கவில்லை. என்னை நானே ஆசுவாசப் படுத்திக் கொண்டு எதிரே பாட்டிலில் இருந்த தண்ணீரை பல மிடறுகள் குடித்தேன். குடித்துவிட்டு பாட்டிலை வைத்த போது அதில் தண்ணீர் மீண்டும் நிறைந்திருந்தது. திடுக்கிட்ட என் இடக்கையை யாரோ ஆதரவாய் பற்றுவது போல தோன்றியது. அந்த கூல் வாட்டர் பெர்ஃப்யும் வாசனை வந்தது. என் தோள்களை எதுவோ அழுத்தியது. கணப்பொழுது தோன்றிய பயத்தை மறைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தேன். அங்கே நான் அவள் பிறந்த நாளுக்கு வாங்கித் தந்த ஒரு நீல நிற சுடிதாரில் சங்கமித்ரா   எப்போதும் போல என் தோள்களில் சாய்ந்திருந்தாள். 


-தொடரும்..!

16 comments:

  1. எந்த ஊர பஸ்லய்யா ப்ளூ கலர்ல அழகா நைட் லாம்ப்லாம் போறாங்க...? நல்ல த்ரில்லா தொடரும் போட்ருக்க. குட் த்ரில்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தலைவரே, அது ட்ராவல்ஸ் .. சில பஸ்களில் பார்த்திருக்கிறேன்.. :)

      Delete
  2. இப்பத்தான் ரெண்டாவது பாகம் படிச்சிட்டு வாறேன்...
    கலக்கல்...
    ஆஹா... விறுவிறுப்பாக் போகுது...
    ரொம்பத் திரில்லா இருக்கு.... தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார்.. உற்சாகமா இருக்கு..

      Delete
  3. சங்கமித்ரா.. என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நீங்கள் களவாடி விட்டீர்களே! தொலையட்டும், அவளை ரொம்பவும் சிரமத்திற்கு ஆளாக்கி விடாதீர்கள் ..எனக்கு வலிக்கும்! - இராய செல்லப்பா

    ReplyDelete
    Replies
    1. அபப்டியா உங்களுக்கும் பிடித்த பெயரா அது? பார்ப்போம் என்ன ஆகுதுன்னு!

      Delete
  4. வலுக்கட்டாயமாக இழுப்பது போல் தெரிகிறது ... தொடர்கதைக்கு லாயக்கற்றவன் ஆகையால் முழுதும் முடியுங்கள் படித்துக் கொள்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. அச்சோ தோழர், தொடர்கதைகள் சில சமயம் அந்த உணர்வைத் தரும்.. கொஞ்சம் பொறுமை வேண்டும்.. இல்லீன்னா என்ட் கார்ட் போட்டப்புறம் எல்லா பகுதிகளையும் ஒரே மூச்சில் படிச்சிடுங்க

      Delete
  5. கலக்கலாகத் தொடர்கின்றதே! இப்படி ஸஸ்பென்சில் முடித்துவிட்டீர்களே ஆவி! சரி போகட்டும்...அட்லீஸ்ட் அடுத்தது எப்போது என்று தொடரும் என்பதற்கு அடுத்து போட்டுவிடுங்களேன்......சங்கு ரொம்பவே ஈர்க்கின்றாள்...காத்திருத்தல் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கின்றது.....

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா, சென்ற வாரம் தீபாவளி கொண்டாட்டத்திலேயே போயிடுச்சி.. இந்த வாரம் கோவாவை காரணம் காட்டி விட்டுட கூடாதுன்னு தான் சிறிய பகுதியா இருந்தாலும் போட்டுட்டேன்.. மூன்று நாட்களுக்கு ஒருமுறை போட முயற்சிக்கிறேன்..

      Delete
  6. =====================================================================

    தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    ===========================================================================


    ஐயோ... கலங்க வைக்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மண ஒட்டுப்பட்டை காணாமல் போயிருந்தது.. தேங்க்ஸ்.. இப்ப சேர்த்துட்டேன்..

      Delete
  7. அச்சோ! விடமாட்டா போலிருக்கே...

    ReplyDelete
  8. பேருலேயே ஆவி இருக்கறதாலே பேய்க்கதையிலே இப்படி அசத்தறீங்க போலிருக்கு! அட்டகாசம்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா சுரேஷ்.. அசத்தலா இருக்கா? அவ்வ்வ்வவ் நன்றி

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...