Tuesday, April 16, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (நட்பும், சங்கீதமும்)-2

முந்தைய பதிவுகளுக்கு...


                             வகுப்பறைக்குள் நுழைந்த எனக்கு பெரிய அதிர்ச்சி.. நான் என் புத்தகப் பையை வைத்து பிடித்திருந்த இடத்தில் வேறு ஒருவன் அமர்ந்திருந்தான்.. உள்ளுக்குள் கோபம் பொங்க, ஏற்கனவே ஏஞ்சல்களை எதிர்பார்த்து கிடைத்த ஏமாற்றமும் சேர்ந்து கொள்ள "ரட்சகன்" நாகர்ஜுன் போல் நரம்புகள் புடைக்க கோபத்துடன் அவன் அருகே சென்று, "ஹலோ, இங்க நான் பேக் வச்சிருந்தேன்.. " என்றேன்.. அவன் அலட்சியமாக என்னை பார்த்துவிட்டு கீழே கிடந்த என் பேக்கையும் ஒரு பார்வை பார்த்தான்.  அவன் செய்கை எனக்கு மேலும் கடுப்பைக் கிளப்ப " நான் நேரத்திலேயே வந்து இடம் போட்டிருந்தேன்" என்றேன்..  அவனோ " இதொண்ணும் பஸ் இல்லே.. துண்டு போட்டு இடம் பிடிக்க.."  என்று தெனாவெட்டாக பதில் சொல்ல, அவன் சொன்ன மாபெரும் ஜோக்குக்கு அருகிலிருந்த இருவர் சிரிக்க எனக்கோ கோபமும் அதே சமயம் அவமானமாகவும் இருந்தது.. ப்ரொபசரும்  அட்டென்டன்ஸ்  எடுக்க ஆரம்பிக்க வேறு வழியின்றி என் பேக்கை எடுத்துக் கொண்டு காலியாக இருந்த கடைசி பெஞ்சில் சென்று அமர்ந்தேன்..

                                 வழக்கமாக நான் படித்த பள்ளிகளில் எல்லாம் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் என் பெயர் முதலாவதாக இருக்கும்.. ஆனால் இங்கே எனக்கு முன்னால் A வில் மூன்று பேர் இருந்தனர். பெயர்களை வாசித்துக் கொண்டே வந்த ப்ரொபசர் "சங்கீதா" என்ற பெயரை சொன்னதும் எல்லாருடைய கவனமும் அந்த பெயரின் மீதே இருந்தது.. பழைய படங்களில் வருவது போல நின்று போன பறக்கும் பறவைகள், பொங்கி வரும் அலை, அசையா மரங்கள் எல்லாம் மீண்டும்  செயல்பாட்டிற்கு வந்தது போல மனதுக்குள் பழைய உற்சாகம் திரும்பியது.. அதன் பின் இன்னும் மூன்று மாணவிகளின் பெயர் கூறியதும் "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டபடியே ஆசிரியர் போர்டில் ஏதோ எழுத தொடங்கியதும் அதை கவனிக்க ஆரம்பித்தேன், கூடவே நோட்சும் எழுத ஆரம்பித்தேன்..  அப்போதுதான் கவனித்தேன் என்னைத் தவிர வேறு யாரும் நோட்ஸ் எடுப்பதாய் தெரியவில்லை..

                              "டேய், கட்டம் போட்ட சட்டை.. உன் பேர் என்ன?" என ஆசிரியர் பின்னால் இருந்த யாரிடமோ கூற, ஓரிரு வினாடிகளுக்கு பின் அவர் என்னைத்தான் கூப்பிடுகிறார் என உணர்ந்து "ஆனந்த் சார்" என்றேன்.. "ஏண்டா, நீ இருக்கிற உயரத்துக்கு கடைசி வரிசையில் உக்காந்தா உனக்கு என்ன மண்டையில ஏறும்.. வந்து முன்னாடி உக்காரு.." எனக் கூற இதற்கும் முன்னாடியிருந்து சிரிப்பொலி கேட்க, ஆசிரியரோ "நெட்டையா இருந்துட்டு ரெண்டாவது பெஞ்சில் உக்கார்ந்திருக்கியே, நீ போய் பின்னாடி உக்கார்" என முன்னாடி அமர்ந்திருந்த ஒரு மாணவனைப் பணிக்க  முதலில் கோபம் வந்தாலும் பின் என்னுடைய செகண்ட் பெஞ்ச் கார்னர் சீட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.. என் பக்கத்தில் இருந்த, எனது இடத்தை ஆக்ரமித்த அந்த லேண்ட் மாபியாவை பார்த்து ஒரு வெற்றிப் புன்னகை பூத்தேன்.  அவனோ அதை சட்டை செய்யவே இல்லை.

                                அந்த வகுப்பு முடிந்ததும் அவன் என்னிடம் " டேய், பக்கத்துல கேண்டீன் இருக்கு. டீ சாப்பிட்டு வரலாமா ?" என்றான்.. பழைய விஷயங்களை மறந்துவிட்டு உடனே நட்பு பாராட்டிய அவனை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவனுடன் கேண்டீனுக்கு செல்லும் வழியில் அவன் பெயர் பாஸ்கர் என்றும், திருவண்ணாமலையிலிருந்து  வந்திருப்பதாகவும் கூறினான்.. மேலும் நான் குடித்த காபிக்கும் சேர்த்து அவனே பில் கட்டியதில் நட்பின் பலம் இன்னும் கூடியது. திரும்பி வர சிறிது தாமதமானதால் ஆசிரியர் வகுப்பை ஆரம்பித்திருந்தார். அவரிடம் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த போது மூன்று  வரிசை கொண்ட அந்த வகுப்பில் மத்திய வரிசையில் இரண்டாவது பெஞ்சில் (என் இருக்கைக்கு மிக அருகில்) ஒரு பெண் அமர்ந்திருக்க ஒரு கணம் "மேலே, மேலே, மேலே போயிபுட்டேன்.."...

                           அந்த வகுப்பு முடியும் வரை பெரும்பாலானோரின் கண்கள் அவளின் மீதே இருந்தது. வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியே சென்றவுடன் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் (நானும் தான்)  அவள் என்னிடம் திரும்பி "ஐயாம்  சங்கீதா..லேட்டா வந்தனால முதல் ரெண்டு பீரியட் மிஸ் பண்ணிட்டேன். அந்த நோட்ஸ் கொஞ்சம் கொடுக்கறீங்களா?" எனவும் அருகிலிருந்த சக மாணவர்களுக்கும் காதில் புகை..  "இந்தாங்க" என்றபடி உடனே என்னுடைய நோட்டை நீட்ட, " ஒரு பொண்ணு  கேட்டா உடனே தூக்கி கொடுத்துருவியே.."  என்ற பாஸ்கரின் வார்த்தையை கண்டுகொள்ளாமல்.

                             காய்கறிகள் இல்லாத போது கறிவேப்பில்லை கூட சுவையாக தெரியும் என்பது போல ஒற்றை மாணவியாய் அவள் தான் எல்லோருக்கும் ஒரே டைம் பாஸ். இப்படியே ஒரு வாரம் ஓடியது. சீனியர்களின் ரேகிங் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. காலை மற்றும் மதிய உணவு இடைவேளை, பஸ்ஸில் போகும்போது இப்படி எல்லா நேரமும் விடாது டார்ச்சர் கொடுத்த அவர்களை எதிர்க்க மனதில் துணிவு இல்லை.. எனை போலவே பாஸ்கரும் பாதிக்கப்பட்டதால் இதை எப்படி தவிர்ப்பது என்று ஆலோசனை செய்தோம். எங்களுக்கு உதவி செய்ய கடவுளே அனுப்பி வைத்தது போல் வந்தார் இளங்கோ எனும் ஆசிரியர் வடிவில் இருந்த தேவதூதன்.. அவர் அன்று கூறிய செய்தி எங்கள் இருவரின் கண்களிலும் பிரகாசத்தை உண்டு பண்ணியது..

(தொடரும்)




19 comments:

  1. கீதம் மனதில் பாடியதும், நட்பின் பலம் கூடிய விதமும் கலக்கல்... பிரகாசத்தை காண ஆவலுடன்...

    ReplyDelete
  2. சுருட்டை பாஸ்கரா...அப்போ செலவு பண்ண ஆரம்பிச்சவன் இன்னும் பண்ணிட்டுதான் இருக்கானா.?

    ReplyDelete
    Replies
    1. ஆமா மச்சி.. கர்லிங் பாஸ்கர் தான்..

      Delete
  3. சுவாராஸ்யமா போகுது.

    ReplyDelete
  4. ஓ..கமலா வந்தாச்சா...? ஆட்டோகிராப் "ஞாபகம் வருதே" !

    ReplyDelete
    Replies
    1. ஹாஹஹா.. ஒவ்வொருவருக்குள்ளேயும் ஒரு ஆட்டோகிராப் கண்டிப்பா இருக்குமே.. ஆனா அது கமலாவா இல்லையான்னு பொறுத்திருந்து பாருங்க..

      Delete
  5. சுவையாக இருக்கிறது கல்லூரி நினைவுகள்! தொடர்ந்து பயணிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  6. ரசிக்கும் படியான கல்லூரிக்கால "பயணங்கள்"....

    ReplyDelete
  7. நட்பு பலப்பட்ட விதத்தை பகிர்ந்தது நன்று! சங்கீதா நிச்சயமா கமலாவாகியிருக்க வாய்ப்பில்லன்னு எனக்குத் ‌தோணுது. சரளமான எழுத்து நடை கைவரப் பெற்றிருக்கிறது உங்களுக்கு. தொடரும் பகுதிகளுக்கு அவலோட... ஸாரி, ஆவலோட வெயிட்டிங்!

    ReplyDelete
    Replies
    1. சார், நீங்க எங்கயோ போயிட்டீங்க.. எழுத்து "நடை" நல்லா இருக்குன்னு சொல்லி புளங்காகிதப் படுத்தீட்டீங்க.. இன்னும் நல்லா எழுதணும்னு ஒரு பொறுப்பு கூடின மாதிரி உணர்றேன்..

      Delete
    2. ம்ம்.. நன்றி சார்..

      Delete
  8. // காய்கறிகள் இல்லாத போது கறிவேப்பில்லை கூட சுவையாக தெரியும் என்பது போல ஒற்றை மாணவியாய் அவள் தான் எல்லோருக்கும் ஒரே டைம் பாஸ்.//

    ரசித்த உவமை :)

    ReplyDelete
  9. ம் அந்த ஒத்த புள்ள என்ன பாடு பட்டுச்சோ ?

    ReplyDelete
    Replies
    1. அதால நாங்க என்ன பாடுபட்டோம்னு கேளுங்க.. அதுதான் சரியா இருக்கும்..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...