அது ஒரு அரசு மேல் நிலைப் பள்ளி. பள்ளியின் முன்பக்கச் சுவரில் ஏனோ தானோவென்று சுண்ணாம்பு அடிக்கப் பட்டிருக்க, உட்புற சுவர்கள் என்.சி.சி மாணவர்களால் சுட்டு வீழ்த்தப் பட்டிருக்க, கொடி மரத்தில் தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்க, எறும்புகளின் அணி வரிசை போல் மாணவர்களும் மாணவிகளும் குழுமியிருக்க, சூரியனின் வெளிச்சத்தை ஒட்டுமொத்த மாணவர்களின் மீது பிரதிபலிக்கும் வண்ணம் சிரத்தைக் கொண்ட தலைமையாசிரியர் உரையாற்ற ஆரம்பித்தார் . "ஸ்டுடண்ட்ஸ், இந்த வருஷத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு படிக்குற மாணவர்கள்ல இருந்து சிறந்த மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கம்ப்யூட்டர் கற்றுத் தரப்படும் ". இந்த அறிவிப்பைக் கேட்டதும் மாணவர்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது.
முதல் பாடவேளை ஆசிரியர் வரும்முன் அருகில் அமர்ந்திருந்த முருகேசன் என்னிடம் "கம்ப்யூட்டர்னா என்ன டா " என்றான். "இந்தக் கேள்விய என்னப் பாத்தது ஏண்டா கேட்ட" என்பதுபோல் முதலில் அவனைப் பார்த்தபோதும் நம்மையும் மதித்து ஒருத்தன் கேக்குறானே என்பதால் அவனுக்கு பதில் சொல்ல ஆயத்தமானேன். என் அண்ணன் இன்ஜினியர் என்பதால் கம்ப்யுட்டரைப் பற்றி முன்னரே கொஞ்சம் சொல்லி இருந்தார். "கம்ப்யுட்டர்ங்கறது நாம செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் சுலபமா அதுவே செஞ்சிடுமாம்." என்று நான் சொன்னதும், "அப்ப அது நம்ம ஹோம்வொர்க்கெல்லாம் செஞ்சு கொடுக்குமா?" என்றான். அவன் கேட்ட கேள்விக்கு நான் "ஞே" என்று விழித்தபடி இருக்க ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
"ஸ்டுடண்ட்ஸ், ஹெச்.எம் சொன்ன மாதிரி இந்த வருஷத்துக்கு உங்க கிளாசிலிருந்து முதல் மூணு ரேங்க் வாங்கின மாணவர்கள் மூணு பேர செலக்ட் பண்ணியிருக்கோம்." என்று கூறி என்னையும் இரண்டாம் மூன்றாமிடம் பிடித்த இரு மாணவிகளையும் அழைத்தார். எங்கள் மூவரையும் கம்ப்யுட்டர் ரூம் சென்று மோகன் மாஸ்டரைப் பார்க்கும்படி பணித்தார். அந்த பள்ளியின் வழக்கப்படி நான் முன்னே செல்ல, இரண்டடி தொலைவில் அந்த இரு தாவணித் தேவதைகளும் தொடர, கம்ப்யுட்டர் ரூமை அடைந்தோம். பாதணிகளை வெளியே விடுமாறு போட்டிருந்த வாசகமே அந்நியமாய் தெரிந்தது. வெளியே விட்டுவிட்டு கண்ணாடிக் கதவைத் திறந்தபோது சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. அறையின் கூரை தெர்மாக்கோல் கொண்டு மூடியிருக்க அறையின் ஓரத்தில் மஞ்சள் நிறத்தில் ஒற்றை ரோஜாவாய் வீற்றிருந்தது "கம்ப்யுட்டர்".
"ஐ...கம்ப்யுட்டர்" என்று தன் குலோப் ஜாமூன் விழிகள் பிதுங்க ஆச்சர்யப்பட்ட சுமதி, வசீகரமான முகத்தில் மஞ்சள் பற்களுடன் ஒடிசலாய் நின்ற பிரேமலதா, உள்ளுக்குள் ஆவல் தெறித்த போதும் அமைதியாய் நின்ற நான், மூவரையும் இருக்கையில் அமர சொல்லிவிட்டு, "கம்ப்யுட்டரை தமிழில் எப்படி அழைப்போம். இந்த கேள்விக்கு பதில் சொல்றவங்க தான் அத மொதல்ல யூஸ் பண்ணலாம்" என்றார் மோகன் மாஸ்டர். கேள்வி கேட்ட மறுநிமிடம் முந்திக் கொண்டு பதில் சொல்ல எண்ணி "கன்னி ஸார்" என்றேன்..ஓரிரு நொடிகளுள் நான் சொன்ன தவறான பதிலை எண்ணி நாக்கை கடிக்க, இந்த கேப்பில் உள்ளே புயலாய் புகுந்த சுமதி "கணினி சார்" எனவும் "தமிழாசிரியர் பையனுக்கே தடுமாற்றமா?" என்றபடி என் தலையில் ஒரு குட்டு வைத்தார் மோகன் மாஸ்டர்.
அவசரத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் சுமதி இருக்கையில் அமர்ந்தாள். சி.பி.யு., மானிட்டர், கீ-போர்ட் ஆகியவற்றை அறிமுகப்படுத்திவிட்டு கணினியை ஆன் செய்தார். சிறிய சைஸ் டயனோரா டிவி போலிருந்த மானிட்டரிலிருந்து பச்சை நிறத்தில் எழுத்துகள் தோன்றின. டாஸ் பற்றி சொல்லிக் கொடுத்துவிட்டு எங்களை நோக்கி "'எதாவது டவுட் இருக்கா?" என்றார். பிரேமலதாவும், சுமதியும் இல்லையென்று தலையசைக்க, நான் மட்டும் கையை உயர்த்தினேன். "குட், என்ன டவுட் கேளுப்பா!" என்று மோகன் மாஸ்டர் கூற நான் அவரிடம் கேட்டேன் "இது எங்க ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சு குடுக்குமா சார்?"
***********************
ராஜி அக்கா மற்றும்
எழில் மேடத்தின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து இந்த தொடர்பதிவ எழுத ஆரம்பிச்சேன்.. அது பழைய நினைவுகள் பலதையும் கிண்டி விட்டுடுச்சு.. கொஞ்சம் கை சரியாகட்டும்..சீக்கிரமே இன்னொரு தொடரை எதிர்பார்க்கலாம்.. (இதுக்குத்தான் சொல்றது சும்மா போற கொசுவ பார்த்து கொக்காணி காட்டக் கூடாதுன்னு) சரி என் கடமைய முடிக்க இன்னும் அஞ்சு பேர கோர்த்து விடணுமே.. இதோ.. மொதோ மொதோ கவித எழுதின அனுபவம் பத்தி எழுத அஞ்சு பேர கூப்பிடறேன்.
பிறாண்ட வாங்க பதிவுலக "குட்டிப் புலிகளா".. ஒருத்தரும் நிம்மதியா தூங்கக் கூடாது..