Thursday, September 4, 2014

சலவைக்காரரின் மனைவி..!


                       வழக்கமா நான் துணிகளை மொத்தமாக இஸ்திரி போடுபவர்களிடம் கொடுப்பது வழக்கம். சென்னையில் தங்கி பணிபுரிந்த போது தொடங்கிய பழக்கம் அது. ஆனால் அமெரிக்கா சென்ற பொழுது 'தன் கையே தனக்கு உதவி' என்ற நிலைக்கு தள்ளப்பட்டு என் உடைகளை நானே இஸ்திரி போட பழகிக் கொண்டேன். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய அன்றைய தினம் ஏர்போர்ட்டில் ஒரு டீ குடித்துவிட்டு அந்த யூஸ் அண்ட் த்ரோ க்ளாஸை தூக்கி எறிய ஒரு குப்பை தொட்டியை தேடிக் கொண்டிருந்தேன். நான் அங்குமிங்கும் அலைவதை பார்த்த என் நண்பன் வேகமாக வந்து என்னவென்று  வினவ நானும் குப்பைத் தொட்டியை வலை வீசாமல் தேடிய கதையை சொல்ல வேகமாக என் கையிலிருந்து பறித்து  அருகிலிருந்த ஒரு சுவற்றுக்கு அருகே வீசினான். மேலும் என்னைப் பார்த்து "இது அமெரிக்கா இல்ல தம்பி, இந்தியா" என்ற உபதேசம் வேறு.
                 வேறு சில அனுபவங்களும் கிட்டியபின் இந்தியாவில் 'வாழும்' முறையை கடைபிடிக்க தொடங்கினேன். இயன்றவரை எல்லாவற்றையும் சுயமாக செய்துகொள்ளும் பாடத்தினை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தேன். அப்படித்தான்  வெளியில்  இஸ்திரி போடக் கொடுக்கும் வழக்கம் மீண்டும் ஆரம்பித்தது. சுமார் ஒரு வருடங்களுக்கு மேல் எங்கள் வீட்டின் அருகே சலவைக்காரர் ஒருவர் வருவார். துணிகளை மட்டும் வாங்கிக் கொண்டு வேறு எதோ ஒரு தெருவில் நிறுத்தி வைத்திருக்கும் அவர் வண்டியில் இஸ்திரி போட்டுக் கொண்டு வருவார். பெரும்பாலும் ஞாயிற்றுகிழமை காலை வந்து துணிகளை வாங்கி செல்வார்.. ஞாயிறு மாலை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்து விட்டு பணத்தை பெற்று செல்வார்.
  
               ஆறேழு மாதங்களுக்கு முன்னர் எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை போடுகிறேன் பேர்வழி என்று மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பாதையை தோண்டிப் போட்டுவிட்டு மோடியா, ராகுலா என்ற சர்ச்சையில் எங்கள் தெருவை முற்றிலும் மறந்து விட, சாலையின் நடுவே தோண்டிய பகுதி போக ஓரத்தில் ஒரு டூவீலர் மட்டும் செல்லக் கூடிய அளவிற்கு பாதையை போனால் போகட்டும் என்று விட்டுப் போயிருந்தார்கள். அவ்வழியே டூ-வீலரில் வரும் போது எக்காரணம் கொண்டும் காலை ஊன்றி விடக் கூடாது.. மீறி ஊன்றினால் கார்பொரேஷன் தோண்டிய குழியின் ஆழத்தை அளந்துவிட்டு வரலாம். ஆறு மாதம் கழித்து தெருவோரம் இருந்த செடியில் இரு இலைகள் துளிர்த்து, இந்தியா ஒளிரத் தொடங்கிய போது மீண்டும் அந்த குழிகளை அடைக்க வந்தனர். அதற்குள்ளாக எங்கள் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் "ஜெமினி சர்க்கஸில்' சேரும் அளவிற்கு அபரிமிதமான தேர்ச்சி பெற்றிருந்தனர்.

                இந்த ஆறு மாதத்தில் தன் தள்ளுவண்டியை தெருக்களுக்குள் கொண்டு வர முடியாத காரணத்தால் தன் இஸ்திரி தொழிலை எங்கள் வீட்டிலிருந்து சுமார் அரைக் கிலோமீட்டர் தொலைவில் ஓரிடத்தில் வைத்து தேய்த்துக் கொண்டிருந்தார். நானும் கொஞ்சம் கொஞ்சமாக காந்திய வழிக்கு திரும்பிக் கொண்டிருந்த்தேன். சென்ற ஞாயிறன்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது எதேச்சையாக அந்த இஸ்திரி கடை கண்ணில் பட்டது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவரிடம் சென்று "எங்கண்ணே, முன்ன மாதிரி வீட்டுப் பக்கம் வர்றதில்ல?" என்றேன். அவர் என்னைக் கண்டதும் முகம் மலர்ந்து "எங்க தம்பி, குழிய வெட்டிப் போட்டுட்டு எங்கயும் போக முடியல" என்றார். நானோ "சரி, அயர்ன் பண்ண துணியிருக்கு, வாங்க" என்று சொல்லிட்டு வந்தேன். "சரிங்க, தம்பி" என்று அவர் கூறியபோது நான் காரை கிளப்பியிருந்தேன்.


                மறுநாள் காலை அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறக்க அங்கே ஒரு பெண்மணி நின்றிருந்தார். சுமார் முப்பத்தியைந்து நாற்பது வயதிருக்கலாம். எங்கேயோ பார்த்த ஒரு உணர்வு. "சொல்லுங்க' என்று சொல்ல வாயெடுத்து பின் அவர் அந்த சலவைக்காரரின் உடன் நின்றிருந்த பெண்மணி என தெரிந்து கொண்டேன். "துணி வாங்கிட்டு போக வந்தீங்களா?" என்றேன். ஆமாம் என்பது போல் அவர் தலையாட்ட, 'இருங்க' என்று சொல்லிவிட்டு உள்ளுக்குள் சென்று கைக்கெட்டிய நான்கைந்து துணிகளை எடுத்து அவரிடம் கொடுத்தேன். வழக்கமாக அவர் தான் வருவார். இந்தப் பெண்மணி இதற்கு முன் வந்து பார்த்ததேயில்லை. துணிகளை வாங்கிக் கொண்டு சாலையின் வளைவில் திரும்பினார். மீண்டும் உள்ளே வந்த நான் சில சட்டைகள் அடுத்து வரும் பயணத்துக்கு தேவையென்பதால் அதையும் அயர்ன் செய்யக் கொடுத்திருக்கலாமே என்று என்னை நானே திட்டிக் கொண்டு அந்த உடுப்புகளை எடுத்து அடுத்த முறை கொடுக்க வேண்டி எடுத்து வைத்தேன். அவற்றில் சில ஓரிரு முறை மட்டுமே பயன்படுத்திய புதிய உடுப்புகள்.

                 சரியாக அரை மணி நேரத்தில் திரும்பி வந்த அந்தப் பெண் துணியை கொடுத்துவிட்டு 'முப்பத்தியைந்து' என்றாள். 'கொஞ்சம் இருங்க', என்று கூறிவிட்டு எடுத்து வைத்திருந்த உடைகளை அவரிடம் கொடுத்து விட்டு கையில் சில்லறை இல்லாததால் ஐம்பது ரூபாயை கொடுத்தனுப்பினேன். அந்த புத்தம்புதிய நோட்டில் இருந்த காந்தி அந்தப் பெண்மணியின் இரவிக்கைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டார். அன்று மாலைக்குள் கொண்டு வந்தால் பேக்கிங் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று தயார் நிலையில் இருந்தென். மாலையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்த என்னை ஏக்கத்துடன் பார்த்த சூரியன், நான் தேநீர் தராததால் கோபித்துக் கொண்டு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்.  மீண்டும் காலையிலாவது ஏதாவது கொடுப்பேன் என்று நம்பிக்கையோடு என் ஜன்னல் வழி வர எத்தனித்த சூரியனை ஸ்க்ரீனை இழுத்து மறைத்து உதாசீனப் படுத்தி அனுப்பிவிட்டேன். 
.
               இரண்டு நாட்கள் போனது. இஸ்திரிக்கு கொடுத்த துணி இன்னும் வரவில்லை. நான் என் டூ-வீலரை  எடுத்துக் கொண்டு அவர் அயர்ன் செய்யும் எல்லா வீதிகளிலும் (தள்ளு வண்டியில் அவர்களை நான் பார்த்த எல்லா வீதிகளையும்) தேடினேன். எங்கேயும் தட்டுப்படவில்லை. என்னோடு ஏற்கனவே பகை கொண்டிருந்த சூரியன் தலைக்கு மேல் நின்று டார்ச்சர் கொடுக்க சோர்வோடு வீடு திரும்பினேன். உடம்பில் உஷ்ணக் காற்று வீச, மனசோர்வுடன் உடைகள் திரும்ப கிடைக்குமா, கிடைக்காதா என்று என் சோகத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு, உறங்கிப் போனேன். 


                 இன்று அதிகாலை மீண்டும் ஒருமுறை அவர் இஸ்திரி போடும் இடத்திற்கு சென்று பார்க்க அங்கே அவருடைய காலி வண்டி மட்டுமே நின்றிருந்தது. என்னுடைய விதியை நினைத்து நொந்து கொண்டே அந்த சலவைக்காரரின் மனைவியை முதல் முறையாய் சபிக்கத் துவங்கினேன். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இப்படி போனதே என்று வருத்தப் பட்டேன். மதியம் உணவருந்திக் கொண்டிருந்த போது அழைப்பு மணி அடித்தது. ஓடிச்சென்று பார்க்க அங்கே அந்தப் பெண்மணி என் துணிகளோடு நின்றிருந்தார். 'எங்கே ரெண்டு நாளா காணோம்?' என்றதற்கு 'அவருக்கு சொகமில்லீங்க' என்று கூறியபடி துணிகளை கொடுக்க நான் மீதி பணத்தை கொடுத்தேன். அவர் எனக்கு பத்து ருபாய் திரும்ப தர வேண்டும். 'வேணாம் வச்சுக்குங்க' என்றேன். 'உழைச்ச காசு தாங்க ஒடம்புல ஓட்டும்' என்று கூறியபடி பத்து ரூபாயை என்னிடம் கொடுக்க அதிலிருந்த காந்தி என்னை கைநீட்டி அறைந்தது போல் உணர்ந்தேன்.


                                             *************oo**********oo*************

               

27 comments:

 1. உங்க மனதை சலவை செய்து விட்டாரோ அந்த பெண்மணி ?
  த ம +2

  ReplyDelete
 2. ஏழ்மையில் நேர்மை...நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் சூழ்நிலையில் நாம் உடனே தவறாகத் தான் நினைத்து விட்டு பின் வருத்தப்படுகிறோம்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஒரு சின்ன திருத்தங்க.. உடனே தப்பா நினைக்கல.. ரெண்டு நாள் கழிச்சு தான்.. ஆனா நான் தப்பா நெனச்ச உடனே அவங்க முன்னாடி வந்து நின்னுட்டாங்க.. :) :)

   Delete
 3. Replies
  1. வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி..

   Delete
 4. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///நல்ல அனுபவப் பகிர்வு!

  ReplyDelete
 5. அனுபவம் அருமை !! ஆனால் , உண்மையென்னவெனில் , யாராயிருந்தாலும் நேரத்தின்முன் மாட்டிக்கொண்டால் , கண்களுக்கு தவறாகத்தான் தெரிவார்கள் . இதில் உங்கள் தவறும் இல்லை , அவர்கள் தவறும் இல்லை .

  ரொம்ப குழப்பரனோ ? dawn of the planet of the apes படம் மாதிரி தானுங்ணோய்!!

  ReplyDelete
  Replies
  1. இல்ல.. எல்லாம் 'தெளிவா' புரிஞ்சிடிச்சு..!

   Delete
 6. நல்ல அனுபவம். இதை முகநூலில் நீ சுருக்கமாகப் பகிர்ந்த போதே அவர் உடல்நலக் குறைவுற்றிருக்கலாம்னு சரியாச் சொன்ன எனக்கு என்ன பரிசு தரப்போறே ஆனந்து...?

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியருக்கு மாணவன் பரிசளிப்பதா? அது தப்பு வாத்தியாரே..! ;)

   Delete
 7. எங்கள் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் "ஜெமினி சர்க்கஸில்' சேரும் அளவிற்கு அபரிமிதமான தேர்ச்சி பெற்றிருந்தனர்./////

  மாலையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்த என்னை ஏக்கத்துடன் பார்த்த சூரியன், நான் தேநீர் தராததால் கோபித்துக் கொண்டு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான். மீண்டும் காலையிலாவது ஏதாவது கொடுப்பேன் என்று நம்பிக்கையோடு என் ஜன்னல் வழி வர எத்தனித்த சூரியனை ஸ்க்ரீனை இழுத்து மறைத்து உதாசீனப் படுத்தி அனுப்பிவிட்டேன்.////

  இதுபோன்ற ரசனை மிகுந்த வரிகள் ஆவி உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளராகி விட்டார் என்பதை நிரூபிக்கின்றன. நல்வாழ்த்துகள் ஆவி ஸார்...

  ReplyDelete
 8. சிறு சம்பவமும் பதிவு போட உதவும்!

  ReplyDelete
 9. ////அவர் எனக்கு பத்து ருபாய் திரும்ப தர வேண்டும். 'வேணாம் வச்சுக்குங்க' என்றேன். 'உழைச்ச காசு தாங்க ஒடம்புல ஓட்டும்' என்று கூறியபடி பத்து ரூபாயை என்னிடம் கொடுக்க அதிலிருந்த காந்தி என்னை கைநீட்டி அறைந்தது போல் உணர்ந்தேன்////

  அவர் ஒரு நல்ல குடும்ப (இ)ஸ்திரி என்று தெளிவாக தெரியிதுங்கோ....

  ReplyDelete
  Replies
  1. // நல்ல குடும்ப (இ)ஸ்திரி/// ஹஹஹா செம்ம டைமிங்

   Delete
 10. நேர்மை இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது நண்பரே
  தம 8

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதனுடன் ஒட்டாமல் நாமும்..! ;)

   Delete
 11. வாழ்வியல் பாடங்களைப் பல வழிகளில் கற்க வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கை நமக்கு ப்ரீயா கத்துக் குடுக்கும் பாடங்கள்! :)

   Delete
 12. ஜெமினி சர்க்கஸில் சேரும் அளவிற்கு தயாராகிவிட்டார்கள் என்ற வாக்கியம் மிகவும் சுவார்ஸ்யம்! ஏழைகள் என்பதில்லை பலர் நம் கணிப்பை பொய்யாக்கிவிடுவர்! அவர்களில் இவரும் ஒருவர்! நன்றி!

  ReplyDelete
 13. வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்தபடியே இருக்கிறது..... கற்க நமக்குத் தான் மனமில்லை - பல சமயங்களில்.

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails