எனக்கும், மொபைல் போன்களுக்கும் இடையேயான காதல் பற்றி எனக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள்.
சோனி எரிக்ஸன் W810i மியுசிக் பிளேயர் மொபைல் ஒன்றை வாங்கி இரண்டு மாதங்கள் விடாது ஹெட்போனும் காதுமாக அலைந்து கொண்டிருந்த காலம் அது. ஸ்டீவின் அரிய கண்டுபிடிப்பான ஆப்பிளை ருசிக்க சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தேன்.அமெரிக்காவை பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறை செல்போன் கம்பெனியின் போஸ்ட் பெய்டு காண்ட்ராக்டை நீட்டிக்கும் சமயம் புதிய மொபைல்களை இலவசமாக அல்லது மலிவு விலைக்கு பெறலாம். இன்னும் இரண்டு மாதத்தில் பழைய காண்ட்ராக்ட் காலாவதி ஆவதை உணர்ந்த போதும் கைக்கு அடக்கமான இந்த சோனி மிகவும் பிடித்துப் போனதால் ஆப்பிள் போனை வாங்கும் முடிவை தள்ளிப் போட்டிருந்தேன்.
ஒரு வியாழக் கிழமை மாலை வழக்கம் போல் அந்த வாரம் வெளியாகியிருந்த
"பீமா" படத்தின் ப்ரிவ்யு ஷோ பார்க்க கிளம்பினேன். வழக்கமாக நாங்கள் பார்க்கும் பிக் சினிமாஸ் திரையரங்கு அல்லாமல் சிகாகோவில் உள்ள வேறொரு புதிய அரங்கில் திரையிட்டிருந்தார்கள். அதன் அட்ரஸை மட்டும் குறித்துக் கொண்டு என்னுடைய கார்மின் நேவிகேட்டரில் (வழிகாட்டி) உள்ளீடு செய்யுமாறு நண்பனிடம் கொடுத்துவிட்டு டிக்கட்டின் பிரிண்ட் அவுட்டையும் வீட்டு சாவியையும் எடுத்துக் கொண்டு கதவை இழுத்து சாத்தினேன்.. ஒருமுறை சரியாக பூட்டியிருக்கிறதா என பரிசோதித்துவிட்டு காருக்கு வந்தோம். எப்போதும் காரில் ஏறுவதற்கு முன்பு ஒரு முறை எல்லாம் பர்ஸ், போன் மற்றும் கார் சாவி இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டு ஏறுவது வழக்கம்.அன்றும் தொட்டுப் பார்த்து விட்டு கார் சாவியை மட்டும் கையில் எடுத்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்..
ஷோ ஆரம்பிக்க குறைவான நேரமே இருந்ததால் கொஞ்சம் வண்டியை அடித்து ஓட்டினேன். பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட் என்பதாலும், என்னுடைய அப்போதைய பேவரைட் த்ரிஷா நடித்திருந்த காரணத்தாலும் முதல் காட்சியிலிருந்து பார்க்க வேண்டும் என்கிற பரபரப்பு வேறு. ஜனவரி மாத பனிப் படலத்தில் சறுக்கியபடியே தியேட்டரை வந்தடைந்தோம்.. படம் துவங்க ஐந்து நிமிடமே இருந்த காரணத்தால் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தோம்.. டிக்கட்டின் பிரிண்ட் அவுட்டை பர்ஸ் வைத்திருந்த பாக்கெட்டில் வைத்திருந்த காரணத்தால் பர்ஸை முதலில் எடுத்து கவுண்ட்டரின் மேல் வைத்துவிட்டு பின் பிரிண்ட் அவுட்டை எடுத்து கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தோம்.. நல்லவேளை அப்போதுதான் படத்தின் சர்டிபிகேட் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

படம் துவங்கி "ரகசிய கனவுகள் ஜல் ஜல்" என்றதும் மெய்மறந்து அவ்வளவு நேரம் இருந்த பரபரப்பும் அடங்கி அமைதியாக பார்த்தேன். இடைவேளையின் போது வெளியே வந்து இருவருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்துவிட்டு படத்தை பற்றி நண்பர்களுக்கு சொல்லலாம் என்று போனை தேடிய போது கிடைக்கவில்லை. சட்டை பேன்ட் பாக்கெட்டுகளில் தேடிப் பார்த்து கிடைக்கததால் குளிர்பானத்தை வாங்கிக் கொண்டு உள்ளே வந்து நாங்கள் அமர்ந்திருந்த சீட்டின் பின்புறம், இடுக்குகளில் தேடிப்பார்த்து கிடைக்காமல் போகவே, "காரில் விட்டிருப்பேனா" என்று நண்பனிடம் கேட்க, "இல்லடா, நீ டிக்கட் வாங்கும் போது பர்ஸ், போன் எடுத்து எப்பவும் போல கவுண்ட்டர் மேல வச்சியே ஞாபகம் இருக்கா? போனை எடுக்க மறந்திருப்பே!" என்றான்.. அவன் சொன்னதும் தான் எனக்கு நினைவுக்கு வந்தது.. உடனே ஓடிப்போய் கவுண்ட்டரில் பார்த்தேன்.. அதே ஆள் நின்று குளிர்பானம் விநியோகம் செய்து கொண்டிருந்தான்.
என் கண்கள் அவன் மேசையை துழாவ அங்கே என் சோனியை பார்த்துவிட்டேன். ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு கூட்டம் கலைய காத்திருந்தேன். சற்று நேரத்தில் படம் தொடங்க எல்லோரும் உள்ளே சென்றனர். கடைசி ஆளும் சென்று விட நான் கவுண்டரை நெருங்கி அந்த நபரைப் பார்த்து "அது, சோனி எரிக்ஸன்.." என்று இழுத்தேன். அவன் அந்த மொபைலை எடுத்து "ஆமாங்க, மியுசிக் ப்ளேயரோட வந்திருக்கும் புது மாடல்" என்று கூற, "ஆமாங்க, வாங்கி ரெண்டு மாசம் தான் ஆச்சு, ப்ரீ-ஆர்டர் பண்ணி வாங்கினேன். " என்றதும் அவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு "நானும் ப்ரீ-ஆர்டர் பண்ணிதான் வாங்கினேங்க" என்றான். எனக்கோ பகீரென்றது, "அது உங்க போனா, என் சோனி எரிக்ஸன் போனை இந்த கவுண்டர் மேல வச்சிட்டு போயிட்டேன்" என்றேன். "சாரி, நான் அதை பாக்கலே, என்று அவன் போனை என் கைகளில் தராமல் எனக்கு டிஸ்ப்ளே தெரியுமாறு காண்பித்தான். அதில் அவன் அப்போது நின்று கொண்டிருந்த இடத்தின் பின்புலத்தோடு அவன் புகைப்படம் இருந்தது.
நான் வருத்ததோடு உள்ளே சென்று நண்பனிடம் கூற, உடனே என்னையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். இப்போது கவுண்ட்டரில் அவன் இல்லை. அங்கிருந்த வேறொருவரிடம் "சார் இப்ப இங்க இருந்தவரு எங்கே?" என்றேன். "அவருக்கு உடம்பு சரியில்லைன்னு வீட்டுக்கு கிளம்பிட்டாரு" என்றார். நண்பன் உடனே "மச்சி, அவந்தாண்டா போனை எடுத்திருக்கான்.. நீ போனை வாங்கி கால் பண்ணி பாத்திருக்கணும்." என்றான். நான் என்னை நானே நொந்து கொள்ள "சரி விடுடா, ஏமாத்தணும்னு நினைச்சவன் கண்டிப்பா உன் சிம் கார்டையும் மாத்தி இருப்பான், விடுடா பீல் பண்ணாதே. எனிவே நீ ரெண்டு மாசத்துல ஐ-போன் வாங்கணும்னு சொல்லிட்டு இருந்த தானே.. விடுடா" என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்..
அதற்கு பிறகு படத்தில் மனம் லயிக்கவில்லை. த்ரிஷாவும் வெறுப்பாக தோன்றினாள். அந்த சோனி எரிக்ஸன் மேல் எனக்கு உண்டான காதல் எனை படம் பார்க்க விடாமல் இம்சித்தது. படம் முடிந்ததும் டின்னர் செல்வதாக போட்டிருந்த பிளானை கேன்சல் செய்துவிட்டு நண்பனை அவன் வீட்டில் விட்டுவிட்டு என் வீட்டை அடைந்தேன். வழியெங்கும் சோனி எரிக்ஸன் கண்ணுக்குள் மின்னி மறைந்தது.. இவ்வளவு எளிதாக ஒருவனிடம் ஏமாந்து விட்டோமே என்ற வருத்தம் வேறு. கைக்கு எட்டிய போனை வாங்கிப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கமும் மனதை பிசைய வருத்தத்துடன் கதவைத் திறக்க டேபிளின் மேல் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தது அந்த "மெல்லிசை மன்னன்"!!!
*****************