Friday, September 9, 2016

இது கவிதை அல்ல!


இது கவிதை அல்ல!



        இதழ்களின் இருபக்கமும் ஏராளமான 
       இடமிருந்தது; நிதானமாய் சிந்தித்தேன்.
   இரண்டாய்க் கூறுபோட்டு அங்கொன்றும்
   இங்கொன்றுமாய் கன்னக்'குழி'களில் புதைத்தேன்.
     இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த விழிகள்
       இதற்காய் கண்ணீர் மழை பொழிந்தது.
         இத்தோடு எல்லாம் முடிந்ததென
           இதயம் அமைதிப் பிரகடனம் செய்து கொண்டது.
             இனி தொல்லையில்லை என மனம் சாந்தி கொண்டது.
             இன்று கண்விழித்துப் பார்க்கும் வரைதான்
             இது எல்லாம்! அவள் நினைவை வெட்டிப் புதைத்த
           இடத்தைச் சுற்றிலும் காடாய்க் கருப்பு மயிர்கள்.
         இளப்பமாய் ஒரு புன்னகையை உதிர்த்து
       இதோ உன் தேவதை நான்
      இங்கிருக்கிறேன் என்பதுபோல் கன்னத்தின்
    இருபுறமும் வெள்ளை முடிகள்.
  இவள் கண்ணுறங்கும் கல்லறைத் தோட்டம்

துவென பொறிக்கப்பட்ட வாசகத்துடன்!!


Thursday, July 21, 2016

மயக்குறு மகள்



புத்தகத் திருவிழா சென்ற போது நண்பர் டின் என்கிற தினேஷ் 'மயக்குறு மகள்என்ற புத்தகத்தை வாங்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றார். நானும் புத்தகத்தை எடுத்து முன்னுரை வாசித்தேன். அங்கே எழுத்தில் சரித்திரம் படைக்கும் நாயகன் ஒருவர் புத்தகத்தை சிலாகித்து எழுதியிருந்தார். அதிலும் அவர் அதை 'பாபநாசம்' படத்தோடு ஒப்பிட்டு ஒரு வரி எழுதியிருந்தார். ஜெமோவின் அந்த வரிகள் ஒவ்வொன்றும் நான் தேடிக் கொண்டிருந்த தேவதைக் கதை இதுதான் என்பதை எனக்கு உணர்த்தியது. மேலும் வாசிக்க..

Wednesday, July 20, 2016

கனவு அரசியல்!

ரசியலில் எல்லாம் எனக்கு ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை என்ற போதும் நேற்றைய கனவு எனக்கே சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதில் நான் வடக்கத்திய அரசியல்வாதிகள் மோடிஜி, தெற்கத்திய 'காதல் மன்னன்' ஷைனிங் ஸ்டார் போன்றோர் அணிந்து பிரபலப்படுத்திய அந்த கொட்டுடன் இணைந்த பைஜாமாவை அணிந்திருக்கிறேன். என்னைச் சுற்றி நாலைந்து அமைச்சர்கள். ஒரு சீரியசான விவாதம் நடந்து கொண்டிருப்பதற்கான அறிகுறி அங்கே தென்பட்டது. ஒரு மந்திரி "நாட்டில் விலைவாசி மிகவும் உயர்ந்துவிட்டது, பெட்ரோல் ஒரு லிட்டர் இருநூறு ரூபாய். இப்படியே சென்றால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் தற்கொலை செய்து கொள்வார்கள்" அதை ஆமோதிப்பது போல் நான்கைந்து வழுக்கை மண்டைகள் தலையை ஆட்டின.

இன்னொரு வெள்ளை வேட்டி பேசத் துவங்கியது, “அமெரிக்காவின் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்த விலைவாசி ஏற்றத்தையோ, மக்கள் பிரச்சனைகளையோ தடுத்து நிறுத்தவே முடியாது.” என்கிறார். “உங்கள் மீது உள்ள நல்ல அபிப்ராயத்தினால்தான் கடந்த இரண்டு தேர்தல்களிலும் நமது கட்சிக்கு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர வைத்தார்கள். இப்போது இந்தப் பிரச்சனையைத் தீர்க்காவிட்டால் அடுத்த தேர்தலில் நாம் ஆட்சிக்கு வருவது சந்தேகம்தான்" என்று தன் பங்குக்கு குரல் கொடுத்தார் ஒரு தாடிவாலா.



அதுவரை அமைதியாக இருந்த நான் அருகே இருந்த பானையிலிருந்து நீர் எடுத்து அருந்துகிறேன். குரலை செருமிக் கொண்டு பேசத் துவங்குகிறேன். இவை எல்லாமே உறக்கத்தில்தான் நிகழ்கிறது என்றபோதும் நான் என்ன பேசப் போகிறேன் என்ற ஆவல் எனக்கே தோன்றி நானே என்னை கவனிக்கத் துவங்குகிறேன்.”நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான். நாட்டின் இப்போதைய தேவை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும் விலைவாசியை கட்டுக்குள் வைப்பதும்தான். நான் அதற்கு ஒரு யோசனை வைத்திருக்கிறேன்.” என்றதும் அனைவரது கண்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. பாதி குடித்து வைக்கப்பட்டிருந்த காபி கோப்பையின் மீது அமர்ந்திருந்த ஈ கூட குடிப்பதை நிறுத்திவிட்டு என்னை உற்று நோக்கியது.


"நான் சொல்லப் போற விஷயம் ஒருவேளை நமது கட்சியில் உள்ளவர்களுக்கும் பாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது. யாரும் இந்த யோசனையை ஏற்றுக் கொள்வார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் நான் நேற்று குடியரசுத் தலைவரிடம் இதைப் பற்றிப் பேசினேன். அவரும் இந்த யோசனை மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் இதற்கென புதிய அவசர சட்டம் போட்டு உடனே அமலுக்கு கொண்டு வரலாம் எனவும் கூறினார்" பாதகமான விஷயமா, அது என்னவாக இருக்கும் என ஒவ்வொருவரும் சிந்திக்கத் துவங்கியிருந்தார்கள். அப்போது அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த ஏ.ஸி யிலிருந்துஅந்த டைல்ஸ் தரையில் விழுந்த நீரின் சப்தம் துல்லியமாகக் கேட்டது.


கையில் வைத்திருந்த குவளைத் தண்ணீரை காலி செய்துவிட்டு "அந்தத் திட்டம் இதுதான்.” என்றதும் என்னோடு சேர்த்து அந்த ஐந்து அமைச்சர்களும், ஈயும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தயாரானோம். எங்களோடு கூட்டணியில் சேர அறைக்கு வெளியே ஒரு பல்லியும் தயாராக இருந்தது. “நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க ஆயிரம் சட்டம் போட்டாலும் செயல்படுத்தினாலும் நம் பிரச்சனைகள் தீரப் போவதில்லை. இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது ஒரு சிலரிடம் ஒளிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வது தான்.” என்றதும் 'ஃப்பூ, இவ்வளவுதானா? இதை அந்தக்காலத்திலேயே சிவாஜி படத்துல ஷங்கர் சொல்லிவிட்டார்' என்பது போல ஒரு ஏளனப் பார்வையை தவழ விட்டார் தாடிவாலா.


நான் தொடர்ந்தேன் "அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை நானும் அறிவேன். ஆனால் என்னுடைய யோசனை மூலம் அதை எளிதாக நடைமுறைக்கு கொண்டு வரலாம். இப்போதிருக்கும் ரூபாய்களை செல்லாத பணமாக அறிவித்துவிட்டு ரூபே என்றொரு புதிய பணத்தை அறிமுகம் செய்யப் போகிறேன். இப்போது கையில் வைத்திருக்கும் பணத்திற்கு மாற்றாக இந்த ரூபேயை வங்கிகளில் வந்து பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் போது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூபாய்கள் வெளியே வந்துதானே ஆக வேண்டும். ஒவ்வொரு பணத்திற்கும் கணக்கும், அதிகப்படியான பணம் வைத்திருப்பவர்கள் வருமான வரி கட்டியிருப்பதற்கான சான்றையும் காண்பித்தல் அவசியம், இன்னும் ஆறே மாதங்களில் பணவீக்கம் என்ன நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.” அந்த ஏ.ஸி யிலும் தாடிவாலாவின் முகத்தில் வியர்வைப் பூக்கள் பூத்திருந்தது. மற்றவர்களுக்கும் உள்ளூர பயம் பரவத் துவங்கியது. “சூப்பரே" என்று கைதட்டி ஆரவாரம் செய்தது கோப்பையின் மேல் நின்றிருந்த ஈ.


டிஸ்கி: இது எனக்குத் தோன்றிய ஒரு கனவு மட்டுமே. இது சாத்தியமா, இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

Friday, July 15, 2016

Blind Date ம் "ஙே" மொமேன்ட்டுகளும்


Blind Date என்பது முன்பின் அறிமுகமில்லாத இருவர் (புகைப்படங்களில் கூட பார்த்திராத) சந்திக்கும் ஒரு நிகழ்வென மேலைநாட்டு கலாச்சாரம் கூறுகிறது.. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று தொழில்நுட்பம் எங்கோ சென்றுவிட்ட காலத்தில் இதெல்லாம் சாத்தியமா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்றும் முன் பின் தெரியாத நபர்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தும் கலாச்சாரம் இந்தியாவில் ஆங்காங்கே இருந்து கொண்டு தானே இருக்கிறது இந்தியாவில். அது எல்லாமே இந்த Blind Date வகையைத் தானே சேரும்?



சரி, அதெல்லாம் இருக்கட்டும், நான் கூறவந்தது நான் சென்ற ஒரு Blind Date பற்றி. இந்த Blind Date க்கும் மேற்சொன்ன Blind Date க்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று உறுதியளித்துக் கொண்டு, புதியதோர் விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ளும் ஒரு குழந்தை மனதுடன் மேலே தொடர்வோம். சத்யம் தியேட்டரில் Blind Date என்ற ஒரு Concept இருக்கிறது. இதில் நாம் டிக்கெட் புக் செய்யும் போது மற்ற படங்களுக்கு புக் செய்வது போல ரிசர்வேஷன் செய்தோ, நேரில் சென்றோ டிக்கெட் வாங்கலாம்.

ஒரே வித்தியாசம், அன்று நாம் பார்க்கப் போகும் திரைப்படம் என்னவென்று நமக்கு சுத்தமாகத் தெரியாது. அது எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கும். பழைய படமாக இருக்கலாம், புத்தம் புதிய படமாக இருக்கலாம், அரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரம் வரை ஓடலாம். அவை கார்ட்டூன் படங்களாக இருக்கலாம், காமரசம் சொட்டும் படமாக இருக்கலாம். அதற்காக முன்கூட்டியே அவர்கள் 18+ டேக் அளித்து பெரியவர்களுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கிறார்கள்.



நீண்ட நாட்களாக இதற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணி, பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதற்கு செல்ல வேண்டும் என்ற ஆவலே, என்னவென்று தெரியாமல் ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் த்ரில் அனுபவத்தை உணர வேண்டித்தான்.இந்த வாரம் வேறு எந்தப் படமும் பார்க்கவில்லை என்பதால் முதலில் Blind Date பார்த்துவிட்டு பின்னர் 'தில்லுக்குத் துட்டு' பார்க்கலாம் என்று முடிவு செய்து, Blind Date புக் செய்துவிட்டு அடுத்த படத்திற்கு டிக்கெட் இருக்கிறதா என்று பார்த்தேன். நிறைய இடங்கள் இருந்த காரணத்தால் நேராக சென்று வாங்கிக் கொள்ளலாம், வீணாக முப்பது ரூபாய் ஆன்லைன் புக்கிங்கிற்கு செலவு செய்வானேன் என்று விட்டுவிட்டேன்.

மாலை அலுவலகம் முடிந்து சத்யம் தியேட்டரில் பார்க்கிங் செய்து விட்டு டிக்கெட் கவுண்டர் சென்றேன். அங்கே கியூவில் நிற்கையில் வேறு படங்கள் என்னென்ன ஓடுகிறது என்று பார்த்தபடி இருந்தேன். அப்போது நள்ளிரவுக் காட்சியிலிருந்து "ICE AGE 5" திரையிடப்படுவதாகக் கூற உடனே மனதை மாற்றிக் கொண்டு தில்லுக்குத் துட்டை புறம் தள்ளிவிட்டு ஐஸ் ஏஜ் புக் செய்துவிட்டு அவசர அவசரமாக தியேட்டருக்குள் நுழைந்தேன்.


அங்கு சென்று அமர்ந்ததும் பல்பு தயாராகக் காத்திருந்தது. அங்கே Blind Date ல்  "ICE AGE 5" திரையிடப்பட்டது. படம் முடியும் வரை என்னை நானே திட்டியபடி அமர்ந்திருந்தேன். படம் முடிந்ததும் டிக்கெட் கவுண்டருக்கு விரைந்து அங்கே "Finding  Dory", "sultan' பார்கக வந்தவர்களிடமெல்லாம் ஐஸ் ஏஜ் நல்ல படம் சார், சூப்பரா இருக்கு சார் என்று விளம்பரம் செய்து அந்த  டிக்கெட்டை ஒரு நல்ல ஆத்மா கையில் ஒப்படைத்துவிட்டு வருவதற்குள் "ஆவி" போனது எனக்கு மட்டும் தான் தெரியும். 

Saturday, July 9, 2016

பொதுவில் சொல்லக் கூடிய வார்த்தையா F**K? 18+

Disclaimer : இந்தக் கட்டுரையில் நிறைய F***K வார்த்தைப் பிரயோகம் உள்ளது.


மேற்கத்திய நாகரீகம் மெல்ல மெல்ல நம்மை ஆக்ரமித்துக் கொள்ள, நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது உடை மற்றும் பழக்க வழக்கங்கள் மட்டுமல்ல. அவர்களுடைய மொழியையும் சேர்த்துதான். ஆனால் இந்த நாகரீக மாற்றத்தை ஏற்றுக் கொள்கையில் நாம் தவற விட்ட விஷயங்கள் சில. சரியான முறையில் புரிந்து கொள்ளப்படாத எந்த ஒரு விஷயமும், தவறான விஷயங்களாகவே புரிந்து கொள்ளப்படும்.


மேலைநாட்டின் தட்பவெப்ப நிலைக்கு தகுந்தாற் போல அங்கு பனிபொழியும் மாதங்களில் கோட் சூட் அணிந்தும், கோடைக் காலங்களில் மெல்லிய ஆடை அணிவதையும் காண முடியும். ஆனால் இந்தியா போன்ற வெப்பநிலை உள்ள தேசத்தில் (மலைவாசஸ்தலங்களைத் தவிர்த்து)  வியர்வை ஒழுக ஒழுக முழுக்கைச் சட்டை அணிவதே சிரமம் என்ற நிலையில் சிலர் கோட் அணிந்து பணிக்குச் செல்வதைப் பார்க்கும் போது அதைப் பார்த்து சிரிப்பதை ஏனோ தவிர்க்க முடிவதில்லை.



அதே போல் தான் "so called" மேல் நாட்டிலிருந்து நாம் அரைகுறையாக கற்று வந்த ஒரு வார்த்தை. FUCK. இந்த வார்த்தையின் நேரடி அர்த்தம் வேண்டுமானால் உடலுறவு கொள்வது, வன்புணர்வு என்ற பொருளில் வரும். ஆனால் இந்த வார்த்தையுடன் வேறு வார்த்தைகளை சேர்த்துப் பயன்படுத்தும்போது அதன் பொருள் முற்றிலும் வேறு. அதனைப் பிரித்துப் பார்த்து பொருள் கொள்ளும் அபத்தங்கள் பலவற்றை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

குறிப்பாக "FUCK-off" என்ற சொல்லின் பொருள், கோபத்தில் இருக்கும் போது "கண்ணு முன்னாடி நிக்காத" "ஓடிடு" "இந்த எடத்த விட்டுப் போ" என்றெல்லாம் கூறுவோமே, அதே பொருளில்தான் வரும். அதே போல "I'm Fucked up"  என்ற வரிக்கு நேரடி பொருள் கொள்வது அபத்தம். நான் ஏமாற்றப்பட்டேன், நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்ற பொருளில் வரும்.

 "Why did you bring me to this fucking movie" என்று யாராவது கேட்டால் எதற்காக என்னை இந்த "பிட்டு" படத்துக்கு  அழைத்து வந்தாய் என்று பொருள் அல்ல. இந்த பாடாவதியான/ திராபையான/ மொக்கை படத்திற்கு எதற்கு என்னை அழைத்து வந்தாய் என்பதே சரியான பொருள். இதே போலத்தான் Fucking Design, Fucking Pen, Fucking Art என மோசமான பொருட்களுக்கு எல்லாம் முன்னால் Fucking என்ற  வார்த்தையை சேர்த்துப் பயன்படுத்துவது மேலை நாகரீகம்*.



இது மட்டும் என்றில்லை, What the Fuck? என்ற சொல் அதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு எமோஷனல் வார்த்தைதான். அதே போல "Shut the Fuck Up"  என்பதும்  கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு சொல்லே தவிர உடலுறவு என்ற வார்த்தைக்கு பத்து வீடு தள்ளி கூட இல்லை என்பதுதான் உண்மை. அதனால், சரியான முறையில் புரிந்து கொள்ளப்படாத எந்த ஒரு விஷயமும், தவறான விஷயங்களாகவே புரிந்து கொள்ளப்படும். இது மோசமான வார்த்தை, இதெல்லாம் பேசக் கூடாது. பேசுபவர்கள் எல்லோரும் "பீப்" சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்என்றெல்லாம் கிடையாது என்ற  புரிதல் வேண்டும்.

மேலை நாகரீகம் என்றதும் அங்குள்ள எல்லோரும் இப்படித்தான் பயன்படுத்துவார்கள் என்று அர்த்தமல்ல. அலுவலகங்களில் இந்த சொற்களின் பயன்பாடு அதிகம் இல்லையென்றாலும் பொது இடங்களில்
குறிப்பாக இளைஞர்களிடையே பரவலாக கேட்கக் கூடிய சொற்கள் தான் இவை. ஆயினும் இவற்றை குழந்தைகள் (பருவ வயதிற்கும் குறைவான ) பயன்படுத்துவதை  பெற்றோர்களோ, பள்ளி நிர்வாகமோ ஊக்குவிப்பதில்லை. (அவை மரியாதைக் குறைவான சொற்கள் என்பதால்)


பின்குறிப்பு: இது Knowledge Sharing என்ற முறையில் பகிர நினைத்த சில விஷயங்களே தவிர இதில் கூறப்பட்ட வார்த்தைகளை நம்ம ஊரில் உபயோகித்து கன்னம் பஞ்சரானால் கம்பெனி பொறுப்பேற்காது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



Monday, April 4, 2016

ஆவி டாக்கீஸ் - கீ & கா (Audio Review)

கீ & கா ஆடியோ விமர்சனம்.


பின்வரும் சுட்டியைக் 'கிளிக்'கவும்.

ki-ka-audio-review


உங்கள் மேலான கருத்துகளைப் பதிவிட்டால், இதில் உள்ள குறைகளைத் திருத்திக் கொள்ள உதவும்.

-புன்னகைகளுடன்,
ஆவி.

Wednesday, March 30, 2016

அமெரிக்கக் காபி.


நண்பனின் அமெரிக்கக் காபி பதிவைப் பார்த்ததும் என் நாவின் நரம்புகள் நினைவெனும் வீணையின் கம்பிகளாய் மாறி, நாதம் எழுப்பத் துவங்கி விட்டது. அந்த இனிய இசையை உங்களுடன் பகிர்வதில் தானே இன்பம். அமெரிக்கா சென்ற புதிது. எங்காவது வெளியே சுற்றிவிட்டு வரலாம் என்று எண்ணி வெளியே புறப்பட்டோம். அது ஒரு ஜூன் மாதம், ஆதலால் ஏழரை மணிக்குக் கூட அஸ்தமிக்காத சூரியன், வலப்பக்கமாகவே செல்லும் கார்கள், மஞ்சள் விளக்கு விழுந்தவுடன் நிற்க ஆயத்தமாகும் வாகன ஓட்டிகள், பேருந்தில் ஏறுவதற்கு நிற்கும் மக்கள் வரிசை என திரும்பிய திசையெல்லாம் எனக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது.

சிறிது நேர பயணத்திற்குப் பிறகு ஒரு பிரம்மாண்டமான பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் அந்தக் கடைக்குள் நுழைந்தேன். 'ஆனந்த், ஒரு காபி குடிச்சுட்டு போகலாம்' என்று அமெரிக்காவில் நான்கைந்து வருடங்கள் குப்பை கொட்டிய சாரி, ஒரு சீனியர் நண்பர் கூற நானும் 'ஒகே' என்றேன். வரிசையில் கடைசியில் நின்றது தான் தவறாகப் போய்விட்டது. எனக்கு முன் நின்றவர்கள் எல்லோரும் ஆர்டர் செய்துவிட்டு சென்று விட என்னுடைய முறை வந்தது.



பில் கவுண்டரில் நின்றிருந்த வெள்ளை அமெரிக்கன் என்னிடம் "நீ என்ன சாப்பிட விரும்புகிறாய்' என்று பச்சை ஆங்கிலத்தில் கேட்க, அதை அப்படியே தவறில்லாமல் புரிந்து கொண்ட நான் 'ஒரு காபி' என்றேன். சுற்றியிருந்த அனைவரும் என்னை நோக்கி சிரிக்க ஆரம்பித்து விட்டனர். எனக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது. சரியாகத் தானே புரிந்து கொண்டோம் என்று என் உள் மனது கூறியது. மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக "ஆம், நான் காபி தான் சாப்பிட விரும்புகிறேன்" என்று கூறினேன். அந்த இளைஞன் இப்போது வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான். அந்நிய தேசத்தில் என் கோப ஸ்வரூபத்தை வெளிக்காட்ட வேண்டாம் என்று எண்ணி பொங்கி வந்த கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டு முகத்தை இறுக வைத்துக் கொண்டு "ஏன் சிரிக்கிறாய்?" என்றேன். அவன் என்னுள் ஊற்றெடுத்த கோபத்தை என் கண்களில் பார்த்திருக்க வேண்டும். அதனால் தான் உடனே சிரிப்பை நிறுத்திவிட்டு "மன்னிக்க வேண்டும் ஐயா, இந்தக் கடையில் காபி மட்டும் தான் கிடைக்கும். இந்த மெனுவில் உங்களுக்குப் பிடித்த காபியை கூறினால் தருகிறேன்." என்று என்னிடம் ஒரு மெனு கார்டை நீட்டினான்.

அதை நாலைந்து முறை திரும்பிப் பார்த்தேன். சுமார் நூற்றியைம்பது காபி வகையறாக்கள் இருந்தன. எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் மேலிட, நண்பர்களைப் பார்த்தேன். அவர்கள் தூரத்தில் பேசிக் கொண்டும் சிரித்தபடியும் அமர்ந்திருந்தார்கள். எது நன்றாக இருக்கும் என்று அங்கே கேட்கச் சென்றால் இந்த வெள்ளையனின் முன் மீண்டும் அவமானப்பட வேண்டிவரும். அதனால் நானே ஒரு காபியைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்தேன். மீண்டும் ஒரு முறை மெனு கார்டை வாசித்தேன். கொஞ்சம் சொல்ல எளிமையான ஒரு காபியை தேர்வு செய்து அவனிடம் 'எஸ்பிரஸ்ஸோ" என்றேன்.  

அப்பாடா என்றிருந்தது எனக்கு. ஏதோ பெரிய சாதனையை நிகழ்த்திவிட்ட உணர்வு எனக்கு. ஆனால் அவன் ஒரு விடாக்கொண்டன், மீண்டும் என்னை நோக்கி. 'எஸ்பிரஸ்ஸோ ஆர் டபுள் எஸ்பிரஸ்ஸோ?" என்றான். சரி எவ்வளவு விலையானாலும் சரி வாங்கி நம் இந்தியாவின் மானத்தை ஒருமுறை சவுத் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி காப்பாற்றியது போல இங்கே அமெரிக்காவில் நான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்து "டபுள் எஸ்பிரஸ்ஸோ" என்றேன். ஒகே என்று வார்த்தையை அவனிடமிருந்து கேட்ட பின்பு தான் கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

சற்று நேரம் காத்திருந்த எனக்கு அவன் ஒரு சிறிய கிளாசைக் கொடுத்தான். 'சிறிய' என்ற வார்த்தை மிகவும் பெரியது. ஆம் சிறுகுழந்தைகள் விளையாட்டு சாமான்களில் ஒரு கிளாஸ் இருக்குமே, அந்த அளவு தான் இருந்தது. நண்பர்களை திரும்பிப் பார்த்தேன், அனைவரிடமும் பெரிய கிளாஸ் இருந்தது. கிளாஸின் உள்ளே எட்டி நோக்கினேன். ஆழத்தில் துளியூண்டு காபி (அதை காபி என்பதை விட கபி என்றே சொல்லலாம், அவ்வளவு கொஞ்சமாக) இருந்தது. எனக்கு கோபம் ப்ளஸ் ஏமாற்றம், அவனிடம் சென்று ஏன் சிறிய கிளாஸ் என்று கேட்டேன். "டபுள் எஸ்பிரஸ்ஸோ" அப்படித்தான் வரும் என்று கூறினான். சோகத்தோடு வந்து அமர்ந்து ஒரு வாய் குடித்தேன். என்னைப் பார்த்த நண்பன் கேட்டான் "ஏண்டா உன் கீழுதடு ஸ்ரீலங்காவுக்கு போகுது" என்று. என் காபியை தாராள மனதுடன் அவனிடம் நீட்டினேன். அவன் குடித்துப் பார்த்துவிட்டு ரெஸ்ட் ரூமிற்கு ஓடினான். திரும்பி வந்த அவன் 'அடேய், என்னடா வாங்கினே, வாயிலையே வைக்க முடியல" என்றான். நானோ இப்போது பெருமையுடன் "டபுள் எஸ்பிரஸ்ஸோ" என்றவாறு மீதமுள்ளதை குடித்(தூ) முடித்தேன்.


                           ***************************

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...