Monday, April 27, 2015

ஜன்னலோரம்

               ஜன்னலோரம்.. சிறு வயதிலிருந்தே என் பிரியப்பட்ட இருக்கையாக இருந்தது. பேருந்தில் பயணம் என்றாலே எந்த வேலை இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு பேருந்தில் ஏற தியேட்டரில் முதல் வரிசை டிக்கட் வாங்க அலைமோதும் கூட்டத்தைப் போல் முண்டியடித்துக் கொண்டு நுழைவேன். ஏறியதும் பரபரவென ஓடி பேருந்தின் பின்புற டயர் இருக்கும் இருக்கை சற்று உயரமாக இருக்கும். என் உயரத்துக்கு பொறுத்தமாய் செய்த இருக்கையாகவே அதை எப்போதும் உணர்வேன்.





                  உட்கார்ந்த மறுகணம் ஜன்னல்களை திறந்து அதன் வழி வரும் சுகந்தமான காற்றை சுவாசிப்பேன். சில்லென்ற அந்த தென்றல் முகத்தில் உரசுகையில் விவரிக்க முடியாத ஒரு பேரானந்தம் மனதிற்குள். சில நேரங்களில் பேருந்து வேகமாக செல்லும் பொழுது தென்றல் காற்று சற்று வீச்சு அதிகமாகி முகத்தில் அறையும். அப்போதும் முகத்தை உள்ளிழுக்காமல் காற்றுடன் சண்டை போடுவதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு. காற்று என் தலைமுடி, இமைகள், நாசித் துவாரங்கள், இதழ்கள் என ஒவ்வொரு பாகமாக வருடிச் செல்வதை பயணம் முழுவதுமாய் அனுபவித்துக் கொண்டே செல்வேன். அந்த அனுபவம் எனக்கு சலிப்பு தட்டியதாய் என்றும் உணர்ந்ததில்லை.

                    பெரும்பாலும் அந்த பயணங்கள் நான் வசித்த கிராமத்திலிருந்து நகரம் நோக்கி செல்வதாகவே இருந்தது. வழியில் தென்படும் ஆட்டுக் குட்டிகள், தட்டிக் கேட்க ஆளில்லாமல் தனி இராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த தெரு நாய்கள், பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்கும் மாட்டு வண்டிகள், சைக்கிள் டயரை வாகனமாய் ஒட்டிக் கொண்டு வரும் சிறார்கள், தென்னை, பனை மரங்கள், சுற்றிலும் பசுமையாய் தெரியும் வயல் வெளிகள் என ஒவ்வொன்றும் மனதிற்குள் உவகையை தூண்டும். 


                       என்றாவது பேருந்தில் ஜன்னலோரம் கிடைக்காவிடில் அங்கே அமர்ந்திருப்பவரிடம் எப்படியாவது கெஞ்சி, கூத்தாடி, அப்படியும் வேலைக்கு ஆகவில்லை என்றால் வாந்தி வருவது போல் செய்து காட்டி என அந்த இடத்தை எப்படியும் பிடித்து விடுவேன். இந்த அனுபவம் தினமும் கிடைக்க வேண்டியே தினமும் இரண்டு மணி நேரம் பயணம் செய்து சென்று படிக்கும் வகையில் இருந்த நகரத்து பள்ளியில் சேர்ந்து படிக்க அடம்பிடித்து சேர்ந்தேன். பேருந்து மட்டுமல்லாமல் இரயில் பயணங்களில் கூட நான் ஜன்னலோர இருக்கையை தேடிச் செல்லும் பழக்கம் என்னுடனே வளர்ந்தது.

                        எல்லாம் சுகமாய் சென்றது, திருமணம் ஆகும் வரை. அவள் அன்று பேருந்தில் என்னைப் பார்த்து அந்தக் கேள்வியை கேட்கும் வரை. "வாசு, எனக்கு ஜன்னலோர சீட்தான் எப்பவும் பிடிக்கும். நான் அந்தப்பக்கம் உட்கார்ந்துக்கவா?" என்றாள். அவளுடைய ஒற்றைக் கேள்வியின் உள்ளர்த்தம் என் வேர்வரை அசைத்தது. எப்பவும் பிடிக்கும் என்ற ஒற்றை வார்த்தையின் பொருள்  இனி அந்த ஜன்னலோர இருக்கையை எனக்கு எப்போதும் கொடுத்துவிடு என்பதாய் உணர்ந்தேன். மனைவியின் வேண்டுகோளை மறுக்கவும் மனமில்லாமல் என் பிரியப்பட்ட ஆசனத்தை அவளுக்கு தாரை வார்த்தேன்.

                          சந்தோஷத்தோடு இடம் மாறி அமர்ந்த அவள் 'தேங்க்ஸ்' என்றாள். நான் செய்த இந்த அளப்பரிய தியாகத்திற்கு அந்த ஒற்றை ஆங்கில வார்த்தை துச்சமாகப் பட்டது. இருந்த போதும் அவள் என்னைப் போலவே என் விருப்பு வெறுப்புகளுக்கு ஒத்தவளாய் இருக்கிறாளே என்ற சந்தோஷம் ஒன்று மட்டுமே என் மனதை அமைதி கொள்ள செய்தது. வேறு வழியின்றி பயணப் பொழுதை கடத்த சுஜாதாவின் புத்தகம் ஒன்றை வாசிக்க ஆரம்பித்தேன். ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும், என் தோள்களில் எதோ பாரம் அழுத்துவதாய் உணர்ந்தேன். புத்தகத்தை மூடிவிட்டு திரும்பிய போது அங்கே நல்ல உறக்கத்தில் அவள் சிரம் என் தோள்களில்..!
                       

20 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இந்த ரயில் மற்றும் பேருந்துகளில் ஜன்னல் அருகே அமர நானும் விரும்பிய நாட்கள் தான் எத்தனை. முதல் முறையாக விமானம் பயணம் செய்யும் போது,இந்த ஆசை நீடிக்க .. ஜன்னல் இருக்கையை கேட்டு வாங்கி அமர்ந்தேன். விமானம் மேலே செல்ல செல்ல .. மிகவும் பயந்து இருக்கையிலே மயங்கினேன். அதோடு சரி.. அதன் பின் எப்போதும்.. விமானமோ .. ரயிலோ .. பேருந்தோ... நடு சென்டரில் தான் அமருவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. செம்ம சார்.!

      Delete
  3. திடீர்னு ஷாக் ஆகிட்டேன் ணா . என்னடா இது ஆவி அண்ணன் எப்போ மேரேஜ் பண்ணாருனு ! அப்றம்தான் புரிஞ்சது . அழகா இருந்துச்சி ப்ரோ .....

    ReplyDelete
  4. வணக்கம் தல ...

    முதலில் வாழ்த்துக்கள், எங்கே நீங்கள் தொடர்ந்து பிளாக் எழுதாமல் விட்டு விடுவீர்களோ அல்லது வம்படியாய் எழுதினாலும் கடமைக்கு என்று எதையாவது எழுதுவீர்களோ என்று பயந்தேன், அப்படில்லாம் நினைக்காதே என்றது இந்த பதிவு....

    அ வில் தொடங்கி "அ " விலே முடித்த உணர்வை மட்டும் தான் எனக்கு தருகிறது. இந்த மாதிரி பேருந்து வகையறா பயணங்களில் அதுவும் சன்னலோர பயணங்களில் வழமையாய் எல்லோரும் சொல்வது போல் பனை, தென்னை, மாட்டுவண்டி என்று சொல்லாமல் நீங்கள் இன்னும் சற்று ஆழமாக சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. கடைசி திருப்பம், ஏகாந்தம். அதை மனதில் தங்கும்படி அழுத்தம் தந்து சொல்லிருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது தல .. கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் ....

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊக்கத்துக்கு நன்றி அரசன்.! உங்க கருத்தை மனசுல வச்சுக்கறேன்.. :)

      Delete
  5. உங்கள் அனுபவமோ என்று நினைத்தேன்! கதையாக சொல்லி கடைசியில் சோகத்தில் முடித்துவிட்டீர்கள்! சோக முடிவுகள் எல்லோருக்கும் பிடிப்பதாலா?

    ReplyDelete
    Replies
    1. அது சோகம் அல்ல சுரேஷ்.. கோபம்/ஆத்திரம்/ஏமாற்றம் சேர்ந்த ஒரு நிலை.. :)

      Delete
  6. அட! ஆவி! நமக்கும் அப்படியே ஜன்னலோரம்தான் ரொம்ப பிடிக்கும்.....ட்ரெயின் ஆனாலும் சரி பஸ் ஆனாலும் சரி....காரானாலும் சரி....ஃப்ளைட் ஆனாலும்....மாட்டுவண்டி?????புக் பண்ணும் போதெ கேட்டுத்தான் புக் பண்ணறதே...அதனாலோ என்னவோ கதை பிடித்தது.....கடைசில சொன்னீங்க பாருங்க அதுதான் நான் கேட்டும் அந்த இடம் தராம நம்ம மேலேயே விழுவாங்க பாருங்க....கோபமா வரும்,,,,,

    கொஞ்சம் ஸ்பைஸ் சேர்த்துருக்கலாமோ....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்த விஷயத்தை எவ்வளவு சிம்பிளா எழுத முடியுமோ அவ்வளவு சிம்பிளா சொல்ல நினைச்சேன்.. ரொம்ப சின்ன விஷயம் தானே, இதில் வேறென்ன சேர்த்திருக்க முடியும்?

      Delete
  7. உங்க அனுபவப்பதிவு என்று நினைத்துப் படித்து வந்தால் ../*எல்லாம் சுகமாய் சென்றது, திருமணம் ஆகும் வரை*/ கொஞ்சம் குழம்பிட்டேன். :-)
    தோளை பாரம் அழுத்துவதாகவா? பிற்காலத்தில் இப்படி மறந்தும் சொல்லிடாதீங்க :-p

    ReplyDelete
    Replies
    1. //பிற்காலத்தில் இப்படி மறந்தும் சொல்லிடாதீங்க ://

      ஹஹஹா, அதெப்படி அது சொந்த செலவில் சூனியம் வைக்கிற மாதிரி இல்லே?

      Delete
    2. அதே :-) உஷாராத்தான் இருக்கீங்க :-)

      Delete
  8. சின்னவங்க ஜன்னலோர சீட்டையும், படிக்கிற பசங்க டாக்டர் / இஞ்சினீரிங்க் சீட்டையும் அரசியல்வியாதிங்க எம்எல்ஏ / எம்பி சீட்டையும் விரும்புவது சகஜம் தானே..? இருந்தாலும் .நீங்கள் அதை கதையாக்கிய விதம் அசத்தல்....

    ReplyDelete
  9. இந்த குறுங்கதையே அழகிய குறும்படம் போலவே இருக்கு ஆனந்த்.

    எனக்கு எனக்கு என்று விரும்பப்படும் ஒன்றை, தான் விரும்பிய ஒருவருக்கு கொடுக்கும்போது அதில் கிடைக்கும் சந்தோஷம் அளவில்லாதது...

    ஜன்னலோர சீட்டை விரும்பாதோர் இல்லையென சொல்லலாம்...

    எல்லோருக்குமே ஜன்னலோர சீட் வேண்டும்...

    காரணத்தையும் கதையில் அழகா சொல்லிட்டே... முகத்தை தழுவும் தூய்மையான காற்று, அது தரும் தாலாட்டு உறக்கம்..

    அழகிய கதை ஆனந்த்...

    அன்பு நிறைந்த வாழ்த்துகள்டா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா.. ரொம்ப நாளாச்சு உங்க கமெண்ட்ஸ் பார்த்து!

      Delete
  10. வணக்கம்
    மனதை நெருடி விட்டது கதை. பகிர்வுக்கு நன்றி
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. ஜன்னலோரம்.... மிகவும் பிடித்த இடம். அது பேருந்தோ, ரயிலோ, விமானமோ! ஆனா எனக்குன்னு பார்த்து யாராவது ஒரு சக பிராயணி வந்து சேருவாங்க!

    “நீங்க தனியா பிரயாணமா? எங்க சீட்டு ஒண்ணு அடுத்த பெட்டியில இருக்கு. நாங்க எல்லோரும் ஒரே இடத்தில் இருந்துடுவோம்.. ப்ளீஸ்!”

    கிர்ர்ர்ர்.....

    ரசித்தேன் ஆவி. தொடரட்டும் படைப்புகள்.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...