(இதில் வரும் கதாப்பாத்திரங்கள் நிஜம். ஆனால் இது ஒரு கற்பனைக் கதை மட்டுமே.. இது யாரையும் புண்படுத்த அல்ல.. அதையும் மீறி புண்பட்டிருந்தால் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் "கொல்லுகிறோம்"..)
1
பல நாட்களாக எல்லாரும் மறந்து விட்டிருந்த "ஆவி கொலை வழக்கை" துப்பறிய வந்திருந்த டிடெக்டிவ் நஸ்ரியா வழக்கின் கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தார். தன் வசீகரிக்கும் விழியினில் வழக்கின் விவரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் படி ஆவி கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டு இறந்திருக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது. நடு ஹாலில் வைத்து நிகழ்த்தப் பட்ட இந்த கொடூரத்தை யார் செய்திருப்பார்கள் என்று காவலதிகாரிகளின் விசாரணையில் கிடைத்த ஆவணங்களும் அதில் இருந்தன..
இறப்பதற்கு முன்பு கணினியில் யாரோ ஒரு பதிவரை கண்டித்து பதிவு எழுதிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. முழுதாய் எழுதி முடிக்கப்படாத அந்த பதிவில் தனக்கு அந்த பதிவர் கொலை மிரட்டல் கொடுத்ததாய் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.இதைப் பார்த்த நஸ்ரியா ஆவியை கொலை செய்தது ஒரு பதிவராகவோ, முகநூல் நண்பராகவோ இருக்கலாம் என்பதால் ஆவியின் வாசகர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் அவருக்கு ஈ-மெயில் அனுப்பிய பதிவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தார்.
முதல் சந்தேகமாய் ராம்போர்ட் (Ramfort) என்ற முகமூடிக்கு பின் "அறிவுக் குடிசை" எனும் பெயரில் ஆங்கிலத்தில் எழுதும் ராகுல். இவருடைய வலைப்பூவில் புதிய தொழில் நுட்பங்கள் பற்றியும், நமக்கு முற்றிலும் புதியதாய் தோன்றும் தகவல்களையும் பரிமாறியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய "ஈ-பால்" தொழில் நுட்பம் பற்றிய பதிவு நமக்கு வியப்பையும் ஆச்சர்யத்தையும் தரக்கூடியது. ஆவிக்கும் தொழில் நுட்பத்துக்கும் கொஞ்சம் சம்பந்தம் இருப்பதாலும், ஆவி கடைசியாக செல்பேசியில் கல்லூரி மாணவரான இவருடன்தான் பேசியிருக்கிறார் என்பதும் இவரை சந்தேக லிஸ்டில் முதலில் வைக்க வைத்தது.
அடுத்தது CJ என்றழைக்கப்படும் ஜெயராஜ், இவர் தனது வலைப்பூவில் விஸ்வரூபம் திரைப்படம் பற்றி அலசி ஆராய்ந்து ஒரு சிறப்பான பதிவை கொடுத்தார். அதன் பின் தலைமறைவாகி "ஜாவா" தீவில் சுற்றுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. மற்றொருவர் ஆவியைப் போலவே கமலின் தீவிர பக்தர் முனியாண்டி. இவருடைய அடிச்சுவடு எனும் வலைதளத்தில் அறை நண்பன் எனும் கவிதையில் நட்பின் பெருமையை அழகாய் விவரித்திருந்தார். இவரும் பதிவுலகில் இருந்து பிப்ரவரி 2012 க்கு பிறகு தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சந்தேகப் பட்டியலில் இருக்கும் மற்றொரு பதிவர் LK எனும் கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன். இவர் கவிதை, கதைகள், அரசியல் என பல வகை படைப்புகள் கொடுத்தாலும் இவருடைய ஆடுகளம் எனும் வலைப்பூவில் சச்சின் விடைபெற்ற அன்று அவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயங்களை எடுத்துரைக்கிறார். எப்போதும் ஆவியின் முகநூல் வரிகளுக்கு முதல் ஆளாக"லைக்" போடும் இவர் சமீப காலமாய் லைக் எதுவும் போடாதது இவர் மீது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மனதோடு மட்டும் என்ற பெயரில் வலைப்பூ எழுதிவரும் கௌசல்யா மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை பற்றி எழுதியிருந்தார். உருக்கமான அந்தப் பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் MJ வை பிடிக்க ஆரம்பிக்கும். ஆவிக்கும் மிகவும் பிடித்த MJ வை பற்றி எழுதிய இவர் கொலை செய்திருப்பாரோ எனவும் தோன்றுகிறது.
கோப்புகளை படித்துக் கொண்டிருந்த நஸ்ரியாவின் கண்களில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாய் கண்ணீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தது. தனக்காக "ஆவிப்பா" எழுதி உருகி உருகி காதலித்த ஆவியை மிஸ் பண்ணிவிட்டோமே என்ற எண்ணம் மனதில் எழ தானும் ஆவியை விரும்பிய போதும் தான் பார்க்கும் பணியின் காரணம் அதை வெளிப்படுத்த முடியாமல் போனதும், அதை ராஜினாமா செய்துவிட்டு ஆவியிடம் தன் காதல் சொல்ல நினைத்திருந்ததும் அதற்குள் இந்த துர்சம்பவம் நிகழ்ந்ததால் தானே இதை துப்பறிய முடிவெடுத்து வந்ததை யோசித்துக் கொண்டிருக்கையில் நஸ்ரியாவின் வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இரவு பதினொன்றரை மணிக்கு கதவை தட்டுவது யார் என்று சென்று திறக்க, அங்கே..
2
கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு நஸ்ரியா சென்று திறக்க, அங்கே நஸ்ரியாவின் பக்கத்து பிளாட் தோழி மற்றும் ஒன்றாய் பணிபுரியும் ஆண்ட்ரியா நின்றிருந்தார். "என்ன ஆண்ட்ரியா, இந்த நேரத்துல? " என்றபடி கதவைத் திறக்க சற்று பதட்டத்துடன் உள்ளே நுழைந்த ஆண்ட்ரியா "இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி உன் ப்ளாட்டுக்குள்ள யாரோ நுழைய முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க.. நான் வர்ற சத்தம் கேட்டதும் எட்டிக் குதிச்சு ஓடிப் போயிட்டான். ஆனா போகும் போது இந்த பர்ஸ கீழே தவற விட்டுட்டு போயிட்டான்." என்றபடி அந்த பர்சை நஸ்ரியாவிடம் கொடுக்க அதை பிரித்து பார்த்த நஸ்ரியா கொஞ்சம் அதிர்ந்தாள்.
"இவரை எனக்கு நல்லா தெரியும். ஆவி என்கிட்டே இவரை பத்தி சொல்லியிருக்கார். ஆவியின் நண்பர் இவர்." என்று நஸ்ரியா கூறியதை கேட்ட ஆண்ட்ரியா "ஆவியின் நண்பரா? அவர் எதுக்கு இந்த நேரத்துல உன் அறைக்கு வரணும். அதுவும் திருட்டுத்தனமா ஓடிப் போகணும் " என்று கேள்வி மேல் கேள்வி கேட்க "இவர் பேர் ஜீவா.. இவர் கோவை நேரம் ங்கிற வலைப்பூ எழுதிகிட்டு இருக்கார். தமிழ் நாட்டில் இவருக்கு தெரியாத உணவகங்களே இல்லைன்னு சொல்லலாம். அது மட்டுமில்ல இவர் வெளியிட்ட புத்தகத்துல தமிழக கோவில்கள் பற்றிய நல்ல பல தகவல்கள் இருக்கு..இவர் ரொம்ப நல்லவராச்சே.. இவர் எதுக்கு இங்கே?" என்று குழம்பிய நஸ்ரியாவிடம் ஆறுதல் கூறி நன்கு உறங்கும்படி பணித்துவிட்டு வெளியேறினாள் ஆண்ட்ரியா.
மறுநாள் காலை நேரத்திலேயே புறப்பட்டு தன் அடுத்த சந்தேக லிஸ்டில் உள்ளவரை பார்த்துவிட்டு ஜீவாவை சந்தித்து உண்மை அறிய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். தான் சந்தேகப்படும் நபரின் வீட்டுக் கதவை தட்டிய நஸ்ரியா அவரைப் பார்த்து " மிஸ்டர் சீனு?" என்றாள். "சொல்லுங்க" என்றார் சீனு, தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே.
"சென்ற மாதம் நடந்த ஆவி கொலை வழக்கைப் பற்றி தெரியுமா?" " நல்லாத் தெரியும் மேடம்.. அவரு "பதிவர் சீனுவைக் கண்டித்து" ன்னு எழுதிய ஒரு பதிவை ஆதாரமா வச்சுட்டு உங்களோட சேர்த்து நாப்பது பேர் வந்துட்டாங்க..விசாரணை ங்கிற பேருல " எனவும், அதற்கு நஸ்ரியா "என்னிடம் ஆவியின் டைரி ஒன்று இருக்கிறது.. அதில், நீங்க சொல்ல விரும்பாத ரகசியம் ஏதோ ஒன்று இருக்கிறதாகவும், அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் எழுதியிருந்தது." மெல்லியதாய் ஒரு புன்னகை செய்த சீனு, "அது நான் எழுதின தொடர். இன்னும் எழுதி முடிக்காததால அந்த தொடரின் முடிவை தெரிந்து கொள்ள ஆர்வம் ன்னு எழுதியிருக்கிறார்" என்றதும் "சாரி மிஸ்டர் சீனு, தொல்லைக்கு மன்னிக்கவும், இது எங்க தொழிலின் ஒரு பகுதி" என்று கூறிவிட்டு அடுத்த நபரை நோக்கி பஸ்ஸ்டாண்டிற்கு சென்றாள்.
கிழக்கு தாம்பரம் பஸ் ஸ்டாப்பில் T151 பஸ் எடுத்து நகர ஆரம்பித்த போது ஓடிவந்து ஏறிய ரூபக் ராம், வழக்கம்போல் பஸ்சின் உள்ளே கண்களால் அலச, "உள்ளே ஏறி வாங்க ரூபக்" என்று அழைத்து தன்னருகில் இருந்த இருக்கையில் அமர்த்தி ஆவியை பற்றிய கேள்விகளை கேட்டாள். அதற்கு அவரோ "நான் இன்னொசன்ட் ங்க.. என்னைப் பார்த்தா கொலை செய்யுற மாதிரியா தெரியுது?" எனவும் "ஆமாமா, உங்க குள்ளன் சிறுகதை படிச்சப்பவே தெரிஞ்சுது நீங்க ஒரு அப்பாவின்னு..ஆனாலும் நீங்க செஞ்சிருக்கமாட்டீங்கன்னு என் உள்மனசு சொல்லுது. அதிருக்கட்டும் இன்னைக்கு அந்தப் பொண்ணு T151 ல வரலையா.." என்று நஸ்ரியா கேட்டதும் எஸ்கேப் ஆனார் ரூபக்.
பஸ்ஸில் இருந்து இறங்கியவளின் செல்பேசி அலறியது. அதை உயிர்ப்பித்ததும் "துப்பறியும் நிபுணர் நஸ்ரியாவா?" "ஆமா சார், நீங்க?"
"என் பேர் கவியாழி, நான் பல கவிதைகளை என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன். தமிழ் மணம் ரேங்கிங்கில் முதல் ஐந்தில் இருக்கிறேன். ஆவி கொலை வழக்கில் என்னையெல்லாம் சந்தேகப் படமாட்டீங்களா?" திடீரென்று அவர் இப்படி கேட்டதும் அதிர்ச்சியடைந்த நஸ்ரியா "என்ன சார் சொல்றீங்க" என்றதும் அவர் சிரித்துவிட்டு "ஹ்யூமர்..ஹ்யூமர்.. சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்.. ஆவி என் நண்பர் தான். அவர் வழக்கை சீக்கிரம் துப்பறிஞ்சு கொலைகாரனை கண்டுபிடிங்க.." ஒரு பெருமூச்சு விட்டபடி செல்பேசியை கட் செய்துவிட்டு சில எண்களை அதில் ஒற்றி எடுத்தாள்.
லைன் கிடைத்ததும் "ஹலோ மிஸ்டர் ஜீவா?" என்றதும் "ஆமாம், நீங்க?" என்றதும் "நான் டிடக்டிவ் நஸ்ரியா பேசறேன்.. உங்க கூட கொஞ்சம் பேசணும்" என்றதும் "சாரி ராங் நம்பர் " என்று கூறி போன் வைக்கப்பட அவள் மனதில் சந்தேகம் தீவிரமானது. கோவை சென்று ஜீவாவை நேரில் சந்திப்பது என முடிவு செய்தாள். அடுத்து தன் லிஸ்டில் உள்ள பெயரை பார்த்ததும் கொஞ்சம் தயங்கினாள். அவர் ஒரு பிரபலம் என்பதாலும் ஆவி அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்ததும் கொஞ்சம் யோசிக்க வைத்தது. இருந்த போதும் தன் கடமை அது என்று சமாதானப் படுத்திக் கொண்டு மேற்கு மாம்பலத்தில் உள்ள அவர் வீட்டு கதவைத் தட்டினாள் .
கதவை திறந்து வெளியே வந்த பாலகணேஷ் எதிரே நஸ்ரியா நிற்பதை பார்த்ததும் "மின்னல் வரிகளின் இல்லம் தேடி வந்த மின்னலே வா, அழைக்காமல் வந்த அழகே வா" என்று உள்ளே அழைக்க அதற்குள் உள்ளிருந்து "யாருங்க அது?" என்ற குரல் கேட்க, "யாருமில்ல சரிதா, யாரோ சேல்ஸ் கேர்ள் ன்னு நினைக்கிறேன்.. (நஸ்ரியாவிடம் மெதுவாக) யாரும்மா நீ" என்கிறார். நஸ்ரியா சிரித்துவிட்டு "ரெமோ, நானும் உங்க விசிறிதான். நான் இப்போ உள்ளே வந்தா நீங்க இன்னொரு சரிதாவின் சபதம் எழுத வேண்டியிருக்கும். நான் அப்புறமா வர்றேன்" என்று கூறிவிட்டு தனக்கு தானே "இவரைப் போய் சந்தேகப்பட்டோமே, நல்ல மனிதர்" என்று எண்ணிக்கொண்டே நடக்க ஆண்ட்ரியாவிடமிருந்து போன். "நஸ்ரியா, நான் ஆவியோட செல்பேசி கடைசியா பேசிய எண்களை சோதனை செய்த போது அதில் சம்பவ தினத்தன்று பதிமூன்று முறை ஜீவாவுக்கு கால் போயிருக்கு. இன்னொரு அதிர்ச்சியான தகவலும் இருக்கு." என்று அவள் கூறிய தகவல் கேட்டு இடிந்து உட்கார்ந்தாள் நஸ்ரியா..அது..
3
"இன்னொரு அதிர்ச்சியான தகவலும் இருக்கு, ஆவியின் பிரேதத்தை பார்த்து ஏதாவது தடயம் கிடைக்குமான்னு பார்க்கப் போன இடத்துல ஆவியின் உடலைக் காணோம். விசாரித்தா எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு அலட்சியமா பதில் சொல்றாங்க" என்று ஆண்ட்ரியா கூறக் கேட்ட நஸ்ரியா இடிந்து போய் உட்கார்ந்தாள். "இப்படி ப்ளான் பண்ணி ஒவ்வொரு விஷயத்தையும் செய்கிறவர்கள் யாராக இருக்கும்" அவள் மனம் குழம்பியது. தன் கையிலிருந்த ஆவியின் டைரியை புரட்டினாள்.. தனக்காய் ஆவி எழுதிய ஆவிப்பாவைப் படித்தாள்.
பிரிதல் மிகுதியானால்
புரிதல் தோன்றலாம்
புரிதல் மிகுதியானால்
பிரிதலும் தோன்றுமோ?
அவள் கண்களில் நீர் வழிந்தது. தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு கோவை செல்ல ஏர்போர்ட் நோக்கி டாக்சியில் சென்றாள். வழியில் தென்றல் சசிகலா மற்றும் அவர் தோழி அலமு மாமியும் சென்று கொண்டிருப்பதை பார்த்து வண்டியை நிறுத்தி அவர்களிடம் ஆவியைப் பற்றி விசாரிக்க அவர் பதிவர் சந்திப்பின் மகிழ்வான தருணங்களை அலமு மாமியுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டதுடன் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க நஸ்ரியா அவர்களிடம் விடைபெற்று மீண்டும் டாக்சியில் ஏறி அமர்ந்தபடி கண்ணாடியில் பார்க்க அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்து கொள்வதைப் பார்த்தாள். யாரை சந்தேகிப்பது, யாரை நம்புவது என்ற குழப்பத்தோடே டாக்சி நகர யோசித்தபடியே கோவை வந்தடைந்தாள்.
இனி யாரிடமும் தன்னை பற்றியோ ஆவியைப் பற்றியோ சொல்லாமல் விசாரணையை தொடர்வது என முடிவு செய்தாள். முதலில் அவள் சென்று பார்த்தது உலகசினிமா ரசிகனை. "ஸார், நானும் ஒரு பதிவர் தான். நான் உங்களோட பதிவுகளை தவறாமல் படிப்பேன். குறிப்பா ஹேராம் படத்தை அக்கு வேறு ஆணி வேறாக விளக்கி இருந்தீர்களே.. சினிமா ரசிகர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பதிவுகள் அவை. " என்றதும் "உங்களுக்கு சினிமா மேல இருக்கிற ஆர்வம் எனக்கு ஆச்சர்யத்த கொடுக்குது. என் பதிவுகளை ரசித்ததற்கு நன்றி" என்றார். "உங்களை மாதிரியே கமல் மீதும் சினிமா மீதும் ஆர்வம் கொண்ட இன்னொரு பதிவர் ஆவி இருந்தாரே. அவர் ஏன் இப்போ எழுதறதில்லை?" என்று நஸ்ரியா கேட்கவும் அவர் முகம் சற்று மாறியது. "ஆவி இப்போ எழுதறது இல்லை.. போதுமா.. இனி அவரைப் பற்றி எதுவும் கேட்காதீங்க.." என்று கூறியபடி எழுந்து சென்றார்.
அவர் வெளியே செல்லவும் போன் அடிக்கவும் சரியாக இருந்தது. வெளிநாட்டு நம்பராக இருக்கவே கொஞ்சம் யோசனையுடன் அதை எடுக்க, "நான் குவைத்திலிருந்து மஞ்சுபாஷினி பேசறேன்ப்பா.. நஸ்ரியா தானே.. உன்னைப் பற்றி என் தம்பி ஆவி நிறைய சொல்லியிருக்கான். அவன் முதன் முதலா உன் படத்தை காண்பிச்சதும், பொண்ணு ரொம்ப அழகா இருக்காப்பான்னு சொன்னேன்." இடைமறித்த நஸ்ரியா "அக்கா, என்கிட்டயும் உங்கள பத்தி ஆவி சொல்லியிருக்கார்.. உங்க பக்தமீரா தொடருக்கு நான் அடிமை" "ரொம்ப சந்தோஷம்பா. நீ ஆவி பற்றி தகவல் சேகரிக்க கோவை சென்றதாய்க் கேள்விப்பட்டேன். பதிவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கணும்னா இன்னைக்கு ஒரு புத்தக கண்காட்சிக்கு போனா போதும்" என்று சொல்ல மகிழ்ச்சியுடன் போனை வைத்துவிட்டு அங்கே சென்றாள்.
அங்கு சென்றதும் எதேச்சையாய் பார்ப்பது போல் "நீங்க நிகழ்காலம் வலைப்பூ எழுதும் எழில் மேடம் தானே? நான் உங்க ரசிகை. உங்க பெரியாரின் சிந்தனைத் துளிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றாள். அவரோ "நஸ்ரியா, உங்களுக்கு ஆவி பற்றி எங்ககிட்டே கேள்வி கேக்கணும் அப்படித்தானே?" என்று கூறியதும் ஆச்சர்யத்தில் விரிந்த கண்கள் மூடாமல் "நான் நஸ்ரியான்னு எப்படித் தெரியும் உங்களுக்கு? " "வெரி சிம்பிள், ஆவி இருந்தவரை உன் போட்டோவ தினமும் போட்டுட்டே இருப்பார். இப்போ நீங்க வரும்போது மாறுவேஷத்துக்காக மரு கூட ஒட்டிக்கலை" என்று கூற இருவரும் சிரித்தனர்.
அப்போது அங்கே வந்த தோழி சரளா "நான் கோவை சரளா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள "சினிமால நடிக்கிராங்களே, அந்த கோவை சரளாவா?" எனவும் சின்னதாய் கோபம் தெறிக்க, "இல்லங்க.. நான் ஒரு கவிதாயினி. பெண் எனும் புதுமை ங்கிற வலைப்பூவில் எழுதிட்டு இருக்கேன். பெண் விடுதலை, பெண்ணுரிமை பற்றி நிறைய கவிதை எழுதியிருக்கேன்." "பெண் வடிவில் ஒரு பாரதின்னு சொல்லுங்க" என்றபடி நகர அங்கே கண்காட்சிக்கு வந்திருந்த வண்ணத்துப்பூச்சி ஜீவன் சுப்புவைப் பார்த்து "என்ன சுப்பு, கலவரக்காரனாய் மாறி காதல் கடிதம் எழுதியிருந்தீங்க.. பொண்ணு செட் ஆயிடுச்சா" என்று கேட்க "குடும்பத்துல கொழப்பத்த உண்டு பண்ணிராத தாயி" என்று சிரித்துக் கொண்டே கூற அதே சமயம் தன்னை யாரோ பின்னாலிருந்து கவனிப்பது போல் தோன்ற சட்டென திரும்பி பார்த்தாள். அங்கே யாரோ ஒருவர் வேகமாக முகம் காட்டாமல் அங்கிருந்து வெளியேற முயல, அவரைப் பின்தொடர்ந்து சென்ற நஸ்ரியா வெளியே சென்ற அந்த நபர் ஒரு வெள்ளை நிற ஸ்கார்ப்பியோவில் ஏறி வேகமாக வெளியே சென்றது.
4
அவசரத்தில் ஸ்கார்ப்பியோவின் நம்பரை பார்க்க மறந்ததை நினைத்து தனக்குத் தானே திட்டிக் கொண்டாள். செல்போனில் எதோ மெசேஜ் வர அதைப் படித்தாள். அது ஆண்ட்ரியா இன்னும் விசாரிக்க வேண்டிய பதிவர்களின் பெயர்களை அனுப்பியிருந்தாள். ரோஜாக்கள் என்ற பெயரில் காதல், நட்பு, பாசம் என எல்லா வகை கவிதைகளும் எழுதி வரும் பிரஷா, பெண்களை தேவதை என வர்ணிக்கும் சமூகத்தில் "அவன் ஆண் தேவதை" எனும் பெயரில் எழுதி வரும் யாமிதாஷா.. உறவுகள் பற்றிய பல கவிதைகள் இயற்றிய சின்னசின்ன தூறல்கள் அகிலா, பல்வகையான சுவையான தகவல்களையும் தன் "கரந்தை மலரில்" கொடுக்கும் கரந்தை ஜெயக்குமார். தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை இவர் எழுதிய "யானையை விழுங்கும் பாம்பு" கட்டுரை சிறப்பாக விளக்கியுள்ளார்.இந்தக் குறுந்தகவலைப் படித்த போதும் அதற்கு மேலும் வேறு யாரையும் விசாரிப்பது பலனளிப்பதாய் தெரியாததால் தன்னுடைய விசாரணையை தன் பிளாட்டுக்கு வந்து சென்ற ஜீவாவிடமிருந்து ஆரம்பிக்கலாமென்று முடிவு செய்தாள். அதே நேரம் புத்தகக் காட்சியின் இடையே யாரோ பாடுவது போல் சப்தம் கேட்க உள்ளே சென்று பார்த்தாள். அங்கே சுப்புத்தாத்தா தானே மெட்டமைத்த பாடலை மேடையில் பாடிக்கொண்டிருக்க அங்கே கூடியிருந்த மொத்த கூட்டமும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தது. அவர் பாடி முடித்ததும் ஒவ்வொருவராய் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, நஸ்ரியாவும் அவரிடம் சென்று "தாத்தா, ரொம்ப நல்லா பாடினீங்க.. அன்றாட நிகழ்வுகள நகைச்சுவையோட நீங்க எழுதறத படிக்க ரொம்ப நல்லா இருக்கு." என்றாள.
எழில் மேடத்திடம் ஜீவாவின் அலுவலக முகவரி வாங்கிக்கொண்டு காந்திபுரம் சென்றாள். கிராஸ்கட் ரோடில் அம்மணிகளின் அழகை ரசித்தபடியே முகநூல் ஸ்டேட்டஸ் போட்டபடி அமர்ந்திருந்த ஜீவா ஒரு நிமிடம் நஸ்ரியாவை தன் அலுவலகத்தின் முன் பார்த்தபோது சற்று அதிர்ந்து பின் சுதாரித்து "உள்ளே வாங்க" என்றார். "ஜீவா, உங்ககிட்ட பேசறதுக்காக போன் செய்தேன்.. ஆனா ராங் நம்பர்ன்னு கட் பண்ணிட்டீங்க.. எதுக்காக என் வீட்டுக்கு வந்து உளவு பார்த்தீங்க.. சொல்லுங்க" என்றாள்.
"நானா, உங்க வீட்டுக்கா? என்ன சொல்றீங்க. நான் எங்கயும் போகவே இல்லையே. நான் எதுக்காக வரணும்?" என்று கேள்வி கேட்ட ஜீவாவை நோக்கி தன் கையில் வைத்திருந்த பர்சை மேசை மீது போட்டாள் "இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?" என்று கேட்டாள்.
மேசை மீது கிடந்த பர்சை பார்த்ததும் முகம் கருத்த ஜீவா, சேரினின்றும் எழுந்து சிறிது தூரம் நடந்து பின் நஸ்ரியாவை நோக்கி "ஸோ, இந்த பர்சையும், நீங்க கூப்பிட்ட போது ராங் நம்பர்ன்னு சொன்னதாலையும் என்னையே குற்றவாளின்னு நினைச்சுட்டீங்க.. அப்படித்தானே? " "உங்ககிட்ட இதுக்கு வேற ஏதாவது விளக்கம் இருக்கா? அதான் கையும் களவுமா மாட்டிகிட்டீன்களே?" என்றாள் நஸ்ரியா..ஜீவா தன் மேசையை திறந்து ஒரு காகிதத்தை அவளிடம் நீட்டினான். அதைப் படித்த நஸ்ரியாவின் கண்களில் குழப்பம் வியாபித்திருந்தது. தன்னுடைய பர்சும், செல்போனும் திருடு போனதை காவல்துறையில் ரிப்போர்ட் கொடுத்ததற்கான அத்தாட்சி அது.
மீண்டும் தான் துவங்கிய இடத்திற்கே வந்துவிட்டதாய் எண்ணினாள். ஜீவாவை அநாவசியமாக சந்தேகப்பட்டதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டாள். அவளுக்கு குடிக்க குளிர்பானம் வாங்கிக் கொடுத்து சாந்தப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார் ஜீவா. ஆவியின் கொலைக் கேஸில் தன்னால் ஒரு படி கூட தாண்ட முடியவில்லையே என வருத்தத்துடன் மாடிப் படியிறங்கி வந்தாள். கீழே இறங்கியதும் அவள் ஒரு ஆட்டோவை அழைக்க, அப்போதுதான் எதேச்சையாய் அதை கவனித்தாள். அது- ஜீவாவின் அலுவலகத்தின் முன் நின்றிருந்த அந்த வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ..
5
பேசி முடித்ததும் மீண்டும் யாருக்கோ தொடர்பு கொண்டு "மச்சி.. நம்ப ப்ளான்படி நஸ்ரியா என்னை பார்க்க வந்துட்டா. அடுத்து கலாகுமரன் கிட்டவோ இல்ல உன்கிட்டயோ தான் வருவா.." இதை சொல்லும் போது செல்போனின் ஸ்பீக்கர் ஆன் செய்யப்பட்டு ஜீவா தண்ணீர் குடிக்கும் சப்தமும் கேட்டது. எதிர்முனையில் "வரட்டும் மச்சி.. நான் இதழில் எழுதிய கவிதை ஒண்ணு சொல்லி அசத்திடறேன்." எனவும் " சங்கவி மச்சி, நீ அவகிட்ட கொஞ்சம் கம்மியாவே பேசு.. அவ துருவி துருவி கேக்குற கேள்விகள்ல ஒரு நிமிஷம் நானே உண்மைய சொல்லிடுவேனோன்னு பயந்துட்டேன்." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதிரடியாய் உள்ளே நுழைந்தாள் நஸ்ரியா.
எதிர்பாராமல் உள்ளே நுழைந்துவிட்ட நஸ்ரியாவைப் பார்த்ததும் அதிர்வுற்ற ஜீவா தன் மேசை மேலிருந்த மயக்க மருந்து கலந்த பெப்பர் ஸ்ப்ரேவை எடுத்து அவள் முகத்தில் அடிக்க அங்கேயே மூர்ச்சையானாள் நஸ்ரியா. பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தன் போனை எடுத்து "அண்ணே, நான் ஜீவா பேசுறேன்.." என்றதும் "ஜீவா, இன்னைக்கு ஞாயிற்று கிழமைங்கிறதால நான் காலையில பைக் எடுத்துகிட்டு ஏஜிஎஸ் தியேட்டருக்கு போய் பார்கிங்க்ல வண்டிய நிறுத்திட்டு உள்ளே போனா இருக்கைகள் எல்லாம் காலியா இருந்தது" எனவும் "அண்ணே செந்தில் அண்ணே, நான் நீங்க படம் பார்த்த கதைய அப்புறம் கேக்குறேன்.. இப்போ நான் ஒரு பிரச்சனைல இருக்கேன்,. " என்றபடி அவரிடம் எல்லா கதையும் சொல்ல "சரிண்ணே, அப்படியே பண்ணிடறேன்" என்று போனை வைத்துவிட்டு வேறொருவருக்கு போன் செய்தான்.
"மனோ, நான் ஜீவா பேசுறேன். இந்த மாதிரி ஆயிடுச்சு. நம்ம ஆரூர் மூனா இப்படி பண்ண சொல்றாரு." எனச் சொல்ல "ஜீவா கேரளா மன்னர்களுக்காக வைராக்கியமாக நின்ற தமிழ் தூண் போல தைரியமா இரு. எல்லாம் நாம் திட்டமிட்டபடி தான் நடக்குது. குட்." என்று போனை வைத்தார்.
அப்போது அங்கே வந்த சுரேஷ் "ஜீவா நீங்க போன் பண்ணினதும் என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்.. சரி சரி.. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி நிக்காம ஒரு கை பிடிங்க. நம்ம கெஸ்ட் ஹவுஸுக்கு தூக்கிட்டு போயிடுவோம்" என்றவாறு மற்றவர்கள் அறியா வண்ணம் நஸ்ரியாவை தூக்கிச் சென்று ஸ்கார்ப்பியோவில் ஏற்றினர்.
கண்விழித்த நஸ்ரியா தான் ஒரு அறையில் அடைத்துவைக்கப் பட்டிருப்பதை உணர்ந்தாள். கடைசியாக தான் ஜீவாவை சந்தித்ததும் அவன் தன் மீது எதையோ தெளித்தது நினைவுக்கு வந்தது. அந்த பத்துக்கு பதினாறு அறையில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள். ஆவியின் கொலை நடந்த அன்று நிகழ்ந்ததை மனத்திரையில் ஓடவிட்டாள். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நஸ்ரியாவிடம் ஆண்ட்ரியா ஓடி வந்து "நஸ்ரியா, உன்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு ஆவிப்பா எழுதி சுத்திட்டு இருந்தானே ஒருத்தன்" "ஆமா ஆவி, அதுக்கென்ன இப்போ" "இல்ல, அவனை யாரோ கொலை செய்துட்டாங்களாம். இதோ இந்த டிவி ந்யூஸ் பாரு." என ஆன் செய்ததும் செய்தி வாசிப்பாளர் "பட்டப்பகலில் பயங்கரம்.." என ஆரம்பித்து ஆவி கொலை செய்யப்பட்ட தகவலை வாசித்தார். கழுத்து அறுபட்டு இறந்த ஆவியின் உடல் காட்டப்பட்ட போது நஸ்ரியா அலறியபடி கட்டிலில் மயங்கிச் சாய்ந்தது மங்கலாய் மனக்கண்ணில் தெரிந்தது.
தன்னுடைய கோட் பாக்கெட்டை தொட்ட போது அங்கே ஆவியின் டைரி தட்டுப்பட்டது. அதன் பக்கங்களை புரட்டிக் கொண்டே வந்தவள் கடைசியாக எழுதப்பட்ட ஆவிப்பாவை படித்தாள்.
இயேசு கிறிஸ்து மட்டுமல்ல பெண்ணே
நீ நேசிப்பதாய் சொல்- மறுநொடி
நானும் உயிர்த்தெழுவேன்..
6
ஆவியை அருகில் பார்த்த சந்தோஷத்தில் நஸ்ரியாவின் கண்கள் மழை பொழிந்தது. அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒரு சேர ஆவியை கட்டியணைத்துக் கொண்டாள். அவன் கன்னங்களை தொட்டுப் பார்த்து எல்லையில்லா ஆனந்தம் கண்களில் கொப்பளிக்க மகிழ்ச்சியில் பேச மறந்து சிலையாய் நின்றாள். "ஏன்டா, ஏன் இப்படி ஒரு நாடகம்" செல்லமாய் அவன் நெஞ்சிலே குத்தினாள். வாஞ்சையுடன் அவள் கேசத்தை வருடி, அவள் கன்னங்களில் வழிந்தோடிய நீரைத் துடைத்துவிட்டான். "எல்லாம் இந்த தேவதைக்காக தான்" என்றான். "இடியட்.. இப்படியா விளையாடுவே.. எவ்ளோ பீல் பண்ணினேன் தெரியுமா?" என்றவளை "நீ மட்டும்.. நான் காதல் சொல்லி, கவிதை எழுதி, உன்னை துரத்தி துரத்தி காதல் செய்த என்னை நீ கண்டுக்கவே இல்லையே"
"ஆமா, டீவில நியுஸ் வந்துதே, எல்லா பிளாக்கிலயும் உன்னை பற்றி எழுதியிருந்தாங்களே.." "நீ வெளிய வா, சொல்றேன்" என்று அந்த அறையின் கதவை திறந்து வெளியே வந்த போது அங்கே பெரிய பதிவர் கூட்டமே நின்றிருந்தது. "இதோ நாம சேர்ந்ததுக்கு இவங்க எல்லாருமே காரணம். இந்த நாடகத்துக்கு கதை என் குருநாதர் பாலகணேஷ் சாரோடது, வசனம் மஞ்சு அக்காவுது, இயக்கம் நம்ம உலக சினிமா ரசிகன் பாஸ்கர் சார். எல்லாத்துக்கும் மேல நீ விசாரிக்கும் போது விஷயம் தெரிந்திருந்தும் அதை கடைசி வரை காட்டிக் கொள்ளாமல் கொண்டு சென்ற ஜீவா மற்றும் மற்ற எல்லா பதிவர்கள். இவங்க மட்டுமல்ல இங்கே இல்லாத இன்னும் பல பதிவர்களும் நாம ஒண்ணு சேர்றதுக்காக கஷ்டப்பட்டாங்க.
பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு காதல் கவி பல எழுதிக் கொண்டிருக்கும் "இரவின் புன்னகை" வெற்றிவேல். பூண்டு ஊறுகாய் செய்து கிச்சனிலும் கலாய்க்கும் ராஜி அக்கா, ரங்கமணியை ஆல்வேஸ் காலை வாரிவிடும் (நகைச்சுவையாய்) அப்பாவி தங்கமணி, பலூன் வியாபாரியையும் படகோட்டியையும் நமக்கு அறிமுகம் செய்த வெங்கட் நாகராஜ், பாட்டி சொன்ன தங்கமே தங்கம் கதையை நமக்கு சொன்ன சிவகாமி (பூந்தளிர்3.), தன் கவிதையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அம்பாளடியாள்..குற்றாலக் காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய கோவை கமல், கரை சேரா அலை அருகில் நின்று கொண்டு விலகிய துப்பட்டாவிடம் வீழ்ந்து தொலைத்த அரசன் ஆகியோர் அங்கு வர அந்த இடமே திருவிழா கோலம் பூண்டது.
"டிவி மட்டுமல்ல, போலிஸ் ரெக்கார்டுகள், இன்னும் பல ஆவணங்கள் தயார் செய்ய உதவி செய்தது ஒருத்தர்.. அவங்க யார்னு
தெரிஞ்சா நீ ஆச்சர்யப்படுவே.. " ஆவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தாள் ஆண்ட்ரியா. "சாரிப்பா, ஆவி என்கிட்டே ரிக்வஸ்ட் பண்ணி கேட்டுகிட்டதால ஹெல்ப் பண்ண வேண்டியதா போச்சு.. நல்ல விஷயத்துக்கு தானேன்னு நானும் நடித்தேன்." எனவும் வெட்கமும் சந்தோஷமுமாக சிரித்தாள் நஸ்ரியா. அப்போது ஆவி ஆண்ட்ரியாவிடம் "ஆண்ட்ரியா நீ எங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணின ரொம்ப தேங்க்ஸ். ஆனா உன்னை ஒருத்தன் தீவிரமா லவ் பண்ணிக்கிட்டு இருக்கான். ஆனா உன்கிட்ட சொல்ல தயங்கறான்" எனவும் ஒரு சிறு ஆச்சர்யத்தோடு ஆவியை பார்த்தாள்.
அப்போது அறைக்கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு திறக்கவும், அங்கே டிடக்டிவ் நமிதா நின்றிருந்தார். "ஆண்ட்ரியா மேடம், சீனுங்கிற பதிவர் இன்னைக்கு காலையில இருந்து காணாமல் போயிட்டார். அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொலை செய்யப்பட்டிருக்கலாம். அந்த கேஸை நீங்கதான்.. " நடப்பதை உணர்ந்து கொண்ட ஆண்ட்ரியா கூட்டத்தில் ஒளிந்திருந்த சீனுவை கண்டுபிடித்து அடிக்க ஓட, சீனு ஆவியின் பின் சென்று மறைந்து கொள்ள, நஸ்ரியா சீனுவின் இருப்பிடத்தை காட்டிக் கொடுக்க சீனுவை செல்லமாய் அடித்த ஆண்ட்ரியா.."இதுக்காக நீ காணாம எல்லாம் போக வேணாம். காதல சொல்ல தயக்கமென்ன என் கண்ணாடி மச்சான்" என்று சீனுவின் சட்டையை பிடித்திழுத்து கட்டிக்கொள்ள எல்லோரும் சந்தோஷத்துடன் இரண்டு ஜோடிகளையும் வாழ்த்தினர்.
*************** சுபம் *****************
ஆஹா... ஒரு பதிவர் பட்டாளத்தையே வைத்து கலக்கலாய் ஒரு கதை.....
ReplyDeleteஅருமை.
அடுத்த இரு வாரமும் நீங்கள் தான் வலைச்சர ஆசிரியர்... சீனா ஐயாவிடம் பேசி விடுவோமா...?
ReplyDeleteஹா ஹா ஹா ! சிரித்து ரசித்து வியந்து போனேன் அண்ணா . சரி , இம்புட்டு விஷயமும் பகத்துக்குத்தெரியுமா ?
ReplyDeleteஅடேடே....
ReplyDeleteஇதைக் கூட இரண்டு பதிவுகளாகப் போட்டிருக்கலாமே...
ரசித்தேன்.
வலைச்சர ஆசிரியராக இருந்த போது எழுதியதை மீள்பதிவு பண்ணீட்டீங்களா? முழுவதும் படிக்க இண்ட்ரஸ்டிங்காத்தான் இருக்கு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமதுரை பதிவர் ஜ (ங்ஷனில்) ந்திப்பில் தங்களை ஜந்தித்தது முதல் நானும் நச் ரியா ரஜிகன் என்பதை பலரசத்தோடு ஜோல்லிக்கொள்ள கடமைபட்டவனாகிறேன்.
ReplyDeleteமதுரை பதிவர் ஜந்திப்பில் தங்களை ஜந்தித்தது முதல் நானும் நச் ரியா ரஜிகன் என்பதை பலரசத்தோடு ஜொள்ளிக் கொள்ள கடமைபட்டவனாகிறேன். அப்புறம் ஆவி ஒரு நச் ரியாவோட சொந்தக் கார பதிவர் ஒருத்தர் கேரளவிலிருந்து வந்திருந்தாரே அவர் பேர் என்ன.
ReplyDeleteமீண்டும் படித்து ரசித்தேன் ஆவி....
ReplyDelete