Tuesday, May 9, 2017

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (Adieu) -33

அது அவளுடைய தந்தை வரும் நேரம் என்பதால், இருவரின் கண்களும் பத்து வினாடிகளுக்கு ஒருமுறை கதவை நோக்கியபடியே இருந்தன. அவள் கரங்களோ என் கரங்களை இறுகப் பற்றியிருந்தது. எப்போதும் மிருதுவாக இருக்கும் அந்தக் கைகளில் இன்று சற்றே அதிகமான வியர்வையின் ஈரம். அவள் கீழ் உதடுகள் வெடித்தும், கண்கள் சோர்ந்தும் இருந்தது. விழிகள் இரண்டும் எந்நேரமும் கண்ணீர் விடத் தயாராக இருந்தது. தலைமுடி கலைந்து அவள் முகத்தில் பாதியை மறைத்திருந்தது. அவள் கிடத்தப்பட்டிருந்த கட்டிலின் இடப்புற ஓரத்தில் சுவற்றோரமாய் நான் அமர்ந்திருக்க, அவள் என் மார்பில் தலை வைத்தபடி சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
.
நீண்ட நேரமாய் மௌனத்தை மட்டுமே பேசியபடி இருவரும் அமர்ந்திருந்தோம். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவள் என்னுடைய கைகளை மேலும் இறுகப் பிடித்தாள். இருவரும் திறக்கப் போகும் கதவின் பின்னால் அவள் தந்தையின் முகம் இருக்குமோ என்ற பதைபதைப்புடன் பார்த்தோம். கதவு திறந்தது. அங்கே அவள் அம்மா உள்ளே எட்டி நோக்கினார். 'அப்பா வர்ற நேரமாச்சு' என்று கூறிவிட்டு அவசரமாகக் கதவை மூடினார். அவள் தந்தை இல்லை என்றறிந்ததும் இருவருக்கும் ஒரு ஆசுவாசம். அவளுடைய வெப்பமான மூச்சுக்காற்று, என் வலக்கையில் அதை உணர்த்தியது. அவள் தலையை ஆதரவாக வருடியபடி அதை ஒழுங்குபடுத்தினேன். அருகே இருந்த ஒரு சீப்பை எடுத்து, அவள் எப்போதும் தலை சீவுவது போல நடு வகிடு எடுத்து சீவி, பின்னால் முடிகளைக் கற்றையாக்கி, அருகே இருந்த மேசை மீது மருந்து புட்டிகளுக்கு நடுவே வைத்திருந்த கிளிப்பை எடுத்து மாட்டிவிட்டேன்.
.
என் இடக்கையின் மீது ஒரு துளி சூடான கண்ணீர் விழுந்தது. அவள் முகத்தை என் பக்கமாகத் திருப்பினேன். முதலில் மறுத்து, பின் என் பக்கமாகத் திரும்பி என் கண்களை உற்று நோக்கினாள். அவள் விழி என்னும் அணையின் நீர்மட்டம் வழியும் தருவாயில் இருந்தது. 'என்னடா' என்றேன். அந்த ஒற்றைச் சொல்லைக் கேட்டதும், அவள் என் மார்பில் தலை புதைத்து தேம்பித் தேம்பி அழத் துவங்கிவிட்டாள். ஆறுதலாய் அவள் முதுகை தடவிக் கொடுப்பதைத் தவிர எனக்கு அச்சமயத்தில்  வேறொன்றும் தோன்றவில்லை. கதவு தடாலென்று திறந்தது. அதிர்ச்சியோடு அந்தப் பக்கம் பார்த்தோம்.
.
நர்ஸ் வேகமாக அவளை நோக்கி வருவதைப் பார்த்ததும் அவள் என்னிலிருந்து சற்று விலகி அமர்ந்துகொண்டாள். நான் அவளைச் சுற்றியிருந்த கையை அவசரமாக விடுவித்துக்கொண்டேன். நர்ஸ் கட்டிலில் மாட்டியிருந்த அட்டையில் இருந்த விவரங்களைப் படித்தபடியே 'இப்ப எப்படி இருக்கு, பரவாயில்லையா?' என்று கேள்வி கேட்டு அவள் பதிலுக்கு தலையசைத்ததும், காலியாக தொங்கிக் கொண்டிருந்த ட்ரிப்ஸ்' பாட்டிலை எடுத்து மேசைக்கு கீழே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வேறு ஒரு ட்ரிப்ஸ் பாட்டிலை மாட்டி, சரியாக இறங்குகிறதா என்று பார்த்துவிட்டு அகன்றார்.
.
அறையில் மீண்டும் மௌனம். கட்டிலின் மேல் வைத்திருந்த என் கைகளை மீண்டும் எடுத்து தன் உள்ளங்கைக்குள் பொதிந்து கொண்டாள். 'நான் அப்பாகிட்ட பலமுறை பேசிட்டேன். அவர் புரிஞ்சுக்கிற மாதிரி தெரியல.' 'அதனாலதான் முட்டாள்தனமா இப்படி ஒரு காரியம் செஞ்சியா?' கோபத்துடன் கேட்டேன். 'எனக்கு வேற வழி தெரியல. அப்பவாவது அவர் ஒத்துக்குவார்னு நெனச்சேன்.' என் விரல்களை உள்ளடக்கியிருந்த அந்த மென்மையான கையில் மணிக்கட்டுக்கு கீழ், சுமார் பதினைந்து செ.மீ தொலைவில் சமீபத்தில் தையல் போடப்பட்டு வெள்ளை பேண்டேஜ் துணியால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை பீறிட்டு வந்தது.
.
'எருமை உனக்கு ஏதாவது ஆயிருந்தா?' 'உன் நெனப்போட சந்தோஷமா போயிருப்பேன்.' அவள் தலை உச்சியில் முத்தமிட்டேன். அவள், தான் பற்றியிருந்த கரத்தை மேலே எடுத்து அதை முத்தமிட்டாள். 'எனக்காக ஒண்ணு செய்வியாடா?' 'என்னடா, இப்படி கேக்குற, சொல்லுடா' என்றேன். ஓரிரு வினாடிகள் மௌனத்திற்குப் பிறகு, 'என்னை எப்படியாவது மறந்திடேன், ப்ளீஸ்' என்றாள். அவள் இப்படி ஒரு விஷயத்தைக் கேட்பாள் என்று சற்றும் எதிர்பார்க்காத நான் திகைப்பில் இருக்க, 'என் அப்பா பத்தி எனக்கு நல்லா தெரியும். அவருக்கு மகளை விட சாதிதான் முக்கியம். மகள் சந்தோஷமா இருப்பாளாங்கிறதவிட சொந்தக்காரங்க என்ன பேசுவாங்களோங்கிறதுதான் முக்கியம். அதனால..' 'அதனால?'.
.
'நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும். என்னை மறந்திடு. மேல படி. உனக்கு நல்ல ப்யுச்சர் இருக்கு. என்னால அது கெட்டுப்போகக் கூடாது.'
'லூஸு, நீ இல்லாம எனக்கு என்ன ப்யுச்சர்? நீ குணமாயிட்டு வா. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவோம்.' 'அது முடியாதுடா. அப்புறம் அவர் இங்கே அம்மாவ டார்ச்சர் பண்ணுவார். தங்கச்சிக்கும் கல்யாணத்துல சிக்கல் வரும்'. இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் அமைதியாக இருக்க, 'நான் நல்லா யோசனை பண்ணிட்டேன். இதுதான் ஒரே தீர்வு. தயவு செஞ்சு என்னை மறந்திடு, ப்ளீஸ்' அவள் இதுவரை கேட்ட எதையும் நான் தர மறுத்தது இல்லை. இப்போது மறுக்காமல் தர மனமும் இன்றி அசையாமல் நின்றிருந்தேன்.
.
அப்போது திடீரென்று உள்ளே நுழைந்த அவள் அப்பா, எங்களைப் பார்த்ததும், கண்களில் கோபம் கொப்பளிக்க என்னை நோக்கி வேகமாக வந்தார். அவரைத் தடுக்க குறுக்கே வந்த அவள் அம்மாவை சுவற்றோரமாக தள்ளிவிட்டு கைகளை ஓங்கியபடி என்னருகே வந்தார். அவரை இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்பேன் என்று நான் என்றுமே எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்லி அவரை சமாதானப்படுத்துவது, எங்கள் காதலை ஒப்புக்கொள்ள வைப்பது என்று எண்ணியபடி நான் எழுந்து நிற்க, வேகமாக வந்த அவர் என் கன்னத்தில் 'பளிச்' என்று ஒரு அறை வீச, நான் நிலை தடுமாறி அருகே இருந்த மேசைக்கு அருகே கீழே விழுந்தேன்.
.
அவள் வீறிட்டுக் கத்தியபடி, தந்தையின் கைகளைப் பிடித்திருந்தாள். 'நான் அவர்கிட்ட சொல்லிட்டேன். அவர் போயிடுவார். ப்ளீஸ் பா, அவரை விடுங்க.' தட்டுத் தடுமாறி எழுந்த என்னை நோக்கி இரு கைகளையும் கூப்பி 'ப்ளீஸ், போயிடு' என்றாள் நான் எழுந்து 'சார், நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க' என்று சொல்வதற்குள் அவர் மீண்டும் அடிக்க முயல, அதற்குள் அவள் அம்மா ஒரு பக்கம், அவள் ஒரு பக்கமுமாக அவரைத் தடுத்து நிறுத்தி. 'தயவு செய்து இங்கிருந்து போயிடு, இனிமே என்னை பார்க்க முயற்சி பண்ணாத, பேச ட்ரை பண்ணாத, என்னைப் பத்தி நெனைச்சுக்கூட பார்க்காதே. இது எம் மேல சத்தியம். போயிடு' என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுதாள்.
.
அவள் பேச்சை மறுக்க முடியாமல் அன்று அங்கிருந்து .வெளியேறினேன். அதற்குப் பிறகு அவளைப் பார்க்கவில்லை, பேசவில்லை. ஆனால் அவள் நினைவு மட்டும் நெஞ்சுக்குள் இன்றுவரை நீங்காமல் இருந்துகொண்டே இருக்கிறது,. திருமணத்திற்குப் பிறகு சென்னையில் செட்டிலாக வேண்டும் என்பது அவளுடைய ஆசை. இதை என்னிடம் பலமுறை கூறியிருக்கிறாள். ரமா, நிச்சயம் சென்னையில்தான் இருப்பாள்.  என்றேனும் ஒருமுறை, எங்காவது தெருவில் எதேச்சையாக அவளைப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் இன்றும் இருக்கிறது. தொலைந்து போன காதலை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள அல்ல. எனக்காகவும் தன்  உயிரைத்தர தயாராக இருந்த அந்த ஜீவனுக்கு மனதார ஒரு நன்றி சொல்ல!.
#அவளும்_நானும் #Adieu 

.

7 comments:

 1. என்ன இது... ஆரம்பமும் இல்லாமல் முடிவும் இல்லாமல்!

  ReplyDelete
  Replies
  1. சார், நீங்க முன்ன படிச்சுட்டு வந்த கதைதான். நடுவுல கொஞ்சம் பாகம் மிஸ் ஆயிடுச்சு.அதான் கன்ப்யுஷன்.

   Delete
  2. ஸ்ரீராம்ம்.......நடுல கொஞ்சம் பக்கத்தை காணோம்....ஹஹஹ

   கீதா

   Delete
 2. முந்தைய போஸ்ட்ஸ் 32 இல்லியே 15,16 தானே காட்டுது ..


  நல்லா எழுதியிருக்கீங்க ..இத்துடன் முடிந்ததா இல்லை தேடல் நன்றி சொல்ல தொடருமா ?

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க, நடுவுல கொஞ்சம் விட்டுப்போச்சு. இதுதான் கிளைமாக்ஸ். இந்தக் கதையை சற்று திருத்தம் செய்து புத்தகமாக வெளியிடலாம் என்ற யோசனை இருக்கிறது. :)

   Delete
  2. நல்லது சீக்கிரம் புக் எழுதுங்க ஒரு கதையை வாசிக்கும்போது மனசு வலிச்சா அது எழுத்தாளரின் வெற்றி :) நீங்க அதில் வென்றாச்
   அப்புறம் இங்கே ப்லாகில் அடிக்கடி எழுதவும் ..நான் இங்கே தான் இருப்பேன்..அப்படியே அந்த சீனுவையும் அப்பப்போ பதிவு எழுத சொல்லுங்க ..கார்த்திக்கை இங்கே சந்திக்கிறேன் .உங்க சீனுவின் எழுத்துக்களை மிஸ் செய்றேன் .கணேஷ் அண்ணாவையும் நான் கேட்டதா சொல்லுங்க

   Delete
 3. ஆவி இந்தக் கடைசி முடிவே பலதும் சொல்லிவிட்டது.இருந்தாலும் நீங்கள் முன்னரே சொன் நீங்க..என்கிட்ட வாசிக்க சொல்லி....மனதை என்னவோ செய்துவிட்டது....லயித்து வாசித்ததால்...நினைவுகள்.....இருந்தாலும்...முன்னாடி உள்ளத்தையும் வாசிக்கிறேன்...நான் சொல்ல வந்ததை..நீங்களே சொல்லிட்டீங்க...அதான் புக் போடுங்கன்னு...

  வெரி நைஸ்..ஆவி

  கீதா

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...