வானத்தில் எப்போதும் ஒன்றாகவே
ஊர் சுத்திக் கொண்டிருக்கும் அந்த
மூன்று நட்சத்திரங்களைக் காட்டி,
"அது யார் யார் தெரியுமா?" என்றேன்.
எப்போதும் போல அவள் தன்
கீழுதட்டை உயர்த்தி,
மேலுதட்டின் மேலே உரசவிட்டு,
யோசிப்பது போலொரு பாவனை செய்து,
"ம்ஹும்" என்ற தன்
வழக்கமான விடையை தந்துவிட்டு,
அடுத்த முதல்வர் யாரென்று தெரியாத
தமிழகம் போல் விழித்து நின்றாள்.
இதை முன்பே எதிர்பார்த்திருந்த நான்
அவள் தோளில் கைபோட்டு,
"அதோ முதல்ல இருக்குதே,
அது நான்" என்றேன்.
ஆர்வமாய் என் கன்னத்தோடு
அவள் கன்னம் வைத்து,
"அந்த ரெண்டாவது" என்றாள்.
இதற்கான பதிலை அவளுக்கு நான்
பலமுறை கூறியிருந்தாலும்
முதல்முறை கேட்கும் ஆவலோடு,
அந்த இரண்டாவது நட்சத்திரத்தை
மை எழுதிய அவள் விழி மூடாமல்
பார்த்தபடியே கேட்டாள்.
"அது நீதாண்டி என்
கண்மணி" என்றேன்.
பால் நிலவின் மங்கிய ஒளி வெளிச்சத்திலும்
அவள் கறுப்பான கன்னங்கள்
வாஷிங்டன் ரெட் ஆப்பிளாய் சிவந்திருந்தது.
மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
"அந்த மூணாவது?" என்றாள்.
இதைக் கேட்கையில் கொஞ்சம் கோபம்
கலந்துதான் கேட்டாள்.
அதற்கு காரணம் இல்லாமலில்லை.
அந்த மூன்றாவது நட்சத்திரத்திற்கு சில சமயம்
என் முன்னாள் காதலிகளில்
ஒருத்தியின் பெயரையோ,
அவள் நேசித்துப் பிரிந்துவிட்ட
காதலனின் பெயரையோ சொல்லி
அவளை வெறுப்பேற்றுவது என்
பிரியமான விளையாட்டில் ஒன்று.
எந்தப் பேரைச் சொன்னாலும்
கோபப்பட்டு நெஞ்சில் விழப்போகும்
குத்துகள், அதைத் தொடர்ந்து
என் சட்டைப் பாக்கெட்டில் கொஞ்சம்
கண்ணீர் சேமிப்பதோடு முடியும்
அந்த அத்தியாயம்.
இன்று அவள் கேள்விக்கு
பதில் சொல்லாது மௌனம் சாதித்தேன்.
அவளும் மீண்டும் என்னைக் கேட்கவோ,
திரும்பிப் பார்க்கவோ இல்லை.
"ஏய், அது யார் தெரியுமா?"
"யா....ரு" - இருவர் மட்டுமே
அமர்ந்திருந்த அந்த மொட்டை மாடியில்
அவள் ரகசியம் பேசினாள்.
"அது நம்ம குட்டிப்பாப்பா"
இதை நான் சொன்னதும்
ரெட் ஆப்பிள் நாணம் கொண்டு
என் மார்பிற்குள் ஒளிந்து கொண்டது.
"அது சரி, அது ஏன் நமக்கு
நடுவுல நிக்காம ஓரமா நிக்குது?"
குனிந்த தலை நிமிராமல் குரல்
மட்டும் ஒலித்தது.
வண்டி வண்டியாய் கொட்டிக்கிடந்த
அழகோடு நாணமும் சேர்ந்திருந்த
அவள் முகத்தை,
என் கைகளால் வாரியெடுத்து
"அந்தப் பாப்பா புத்திசாலிப் பாப்பா,
வழிதவறி எங்கயும் போயிடாது.
ஆனா இந்தப் பாப்பா கொஞ்சம்
மக்குப் பாப்பா, அதான் நடுவுல நிறுத்தி
கேட் போட்டிருக்கோம்." என்றதும்
எப்போதும் போலவே மார்பில்
குத்துக்கள் விழுந்தன. அதைத் தொடர்ந்து
அவள் முத்தங்களும்!
#அவளும்_நானும்
ஆஹாஹாஹா.... அருமை ஆவி. எங்கே நடுவுல கொஞ்ச நாளாய் ஆளையே காணோம்?
ReplyDeleteபுத்தக சந்தையில் வாங்கிய புத்தகஙகள் எல்லாம் ஒன்று சேர்ந்து என்னைக் கடத்திச் சென்றுவிட்டது. இப்ப கூட பெயிலில்தான் வந்திருக்கேன்.. :)
Deleteஎப்பவும் ஆவிப் பாப்பா புத்திசாலிப் பாப்பா...!
ReplyDeleteமீண்டும் வலைப்பூவில் தொடர வாழ்த்துகள்....
நன்றி DD
Deleteபுரிஞ்சமாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு...விகடனில் வேலை(?) அதிகமோ? இப்போதெல்லாம் எழுதுவதில்லை?
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
ஆம், ஐயா. ஆணிகள் சற்றே அதிகமாக இருப்பதால் இங்கே தலைகாட்ட முடிவதில்லை.
Deleteஎன் பிரிமான நியுஜெர்சியையும், குறிப்பாக நியு பிரான்ஸ்விக்கையும் கேட்டதாகக் கூறவும்..
ReplyDeleteகவிதை அருமை . ஆமாம் அந்த காதலியின் புகைப்படம் எங்கே?
கவிதையா, அது எங்கே. இதுவும் ஆவிப்பாவின் ஒரு வகைதான் ஐயா. புகைப்படம்தான் மேலே இருக்கே, பார்க்கலையா?
Delete//அது சரி, அது ஏன் நமக்கு
ReplyDeleteநடுவுல நிக்காம ஓரமா நிக்குது?"//
அதுவா அது புத்திசாலி பாப்பா அதுக்கு இன்னொரு தம்பி பாப்பா கூடிய சீக்கிரம் வருவான்னு தெரியும் அதனாலதான் அது வலது பக்கமாக நின்று இடது பக்கத்தை தம்பி பாப்பாவிற்காக ஒதுக்கியுள்ளது என்று சொல்லுவீர்கலோ என நினைத்தேன்
இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா இவங்க புதிதாய் மணம் புரிந்த காதல் சோடிகள். :)
Deleteசின்னம்மா உள்லே போனதும்தான் உங்களுக்கு இந்த பக்கம் வர டைம் கிடைச்சுதோ
ReplyDeleteநல்லவேளை உள்ளே அனுப்பிய பிறகு என்று சொல்லாமல் விட்டீர்களே.. ;)
Deleteநல்லாருக்கு ஆவி! இங்கும் கண்டு ரொம்ப நாளாகிவிட்டது இல்லையா?
ReplyDeleteகீதா: வாவ்!!! ஆவி!! ஆவிப்பா!!! மீண்டும் வருகை!! ரொம்பவே ரசித்தேன்...கவிதை என்பதை விட சொன்ன விதத்தையும், அதன் பொருளையும் ரொம்பவே ரசித்தேன்..மூன்றாவது குட்டிப்பாப்பா என்றுதான் வரப் போகிறது என்பதை அனுமானிக்க முடிந்தாலும், அது ஏன் தள்ளி நிற்கிறது என்பதற்கான குறும்பு பதிலில் உள்ள ரசனையான அன்பையும் ரசித்தேன்.
அருமை..
ReplyDeleteஅருமை
ReplyDelete