.
தமிழ்நாட்டை (குறிப்பாக சென்னையைப்) பொறுத்தவரை எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இரவில் அமைதிப்பூங்காவாய் இருந்தது, விடியலில் சுனாமி விஸ்வரூபம் எடுத்தது. வெயில் என்பதே அடையாளமாக இருந்த ஊரில் மழை சலங்கை ஒலி ஆடியது. எங்கிருந்தோ வந்த 'வர்தா' நமக்கு வாழ்வே மாயம் என்று காட்டிச் சென்றது. அதனால், சினிமாதான் என் உயிர்மூச்சு, அரசியலை நான் வெளியே இருந்து பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த ஆண்டவர் களத்தில் குதித்து சுத்தப்படுத்த அதிக நேரம் ஆகாது. அதற்கான நேரத்தைதான் மற்றவர்கள் குறித்துக் கொண்டிருக்கிறார்கள்.
.
நடிகர் அரசியலுக்கு வருவது தவறல்ல. நம் தமிழ்நாடு அப்படி பல அரசியல் தலைவர்களைக் கண்டிருக்கிறது. அதிலும், கமல் ஒரு 'வேட்டி கட்டிய தமிழன்' என்பதால் வெளியே இருப்பவர்கள் 'தமிழன் அல்ல' என்ற துவேஷம் போட முடியாது. அதிகபட்சம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டு, பொய்க்கால் குதிரை ஆடுவார்கள்.ஆனால் நம்மவர், உயர்ந்த உள்ளம் படைத்தவர். சதி லீலாவதிகளையும், தெனாலிகளையும், தில்லுமுல்லு பார்ட்டிகள் பலரையும் பார்த்து வந்தவர். இந்தக் கலைஞனை அவ்வளவு சீக்கிரம் தன் கட்டுப்பாட்டை இழந்துவிட மாட்டார் என்றே நம்புகிறேன்.
.
இதுவரை அவர் ஒரு சினிமா பைத்தியமாக, என்னைப்போல், உன்னைப்போல் ஒருவனாக இருந்தவர், 'ஹே ராம்' என்று சொன்ன காந்தியின் வழியில் அன்பே சிவம் என்று போதித்தவர், சாதி வேண்டாம், 'புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா' என்று சொன்னவர், இந்த அரசியல்வாதிகளின் தூண்டுதலால் உத்தம வில்லனாய் மாறிவிடுவாரோ என்ற அச்சமே தலைதூக்குகிறது.
.
ஒரு பக்கம் அந்த மகராசன், அரசியலில் நாயகனாய் ஜொலிப்பதை பார்ப்பது மகிழ்ச்சிதான் என்றாலும், எனக்குள் ஒருவன், ஒரு ஆத்மார்த்த ரசிகனாய், கமல் என்ற அந்த நடிப்பின் மகாநதி, இன்னும் பல திரைப்படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். அதே நேரம், அரசியல் சாணக்யனாய், வெளியில் இருந்தே விமர்சனம் செய்வதையே ஒரு இந்தியனாய், தமிழனாய் நான் விரும்புகிறேன்.
.
என் குரு தலைமைப் பொறுப்புகளுக்கு வருவதைப் பற்றி நினைத்தாலே இனிக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த சிகப்பு ரோஜாவையும் அரசியல் என்னும் குருதிப் புனலில் மூழ்கடித்துவிடுவார்களே என்பதுதான் என் தயக்கம். திரை உலகில் பிரகாசிக்கும் முழு நிலவான அவரை, அரசியல் மூன்றாம் பிறை ஆக்கிவிடக்கூடாதே என்பதுதான் என் வருத்தம். ஆயினும் அந்த புன்னகை மன்னன், சட்டத்தை கையில் எடுத்து லஞ்ச லாவண்யத்தில் ஊறிய அசுரர்களை சூர சம்ஹாரம் செய்யத் துணிந்துவிட்டால் அந்தப் படையில் ஒருவனாய் சேர்ந்து தலைவனோடு வெற்றிவிழா கொண்டாடத் தயாராக இருக்கிறேன்.
.
போர் உன்னைத் தேடி வரும்வரை காத்திருக்க வேண்டாம் தலைவா, இப்போதே நீ போர் தொடு!
நான் மட்டுமல்ல என்னைப்போல் லட்சோபலட்சம் இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர் உன் பின்னால் வர. மகளிர் மட்டும் என்னகுறைச்சலா? அவர்களும் போர்க்கொடி ஏந்தத் தயாராக உள்ளனர். தூங்காவனத்தில் சிறைப்பட்டிருந்தது போதும். தசாவதாரம் எடு! உன் ரசிகர்களுக்கு நல்லதோர் செய்தியை காதல் பரிசாய் கொடு!
.
இவண்,
பல கோடி பக்தர்களில் ஒருவன்
ஆவி. என்ன ஆவி உங்களுக்கு கை தூக்கி ஒட்டு போடலாம்னு வந்தா. கடைசில இப்படிச் சொல்லிட்டீங்களே....சரி முடிவா என்ன சொல்லறீங்க தலைப்பா, இல்லை இறுதி பத்தியா..... கொஞ்சம் confusion தீர்க்கணுமே..எண்டே confusion தீர்க்கணுமே. ஹஹஹ
ReplyDeleteகீதா
அவர் வர வேண்டாம்னு சொல்லல. வந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொல்றேன்
Deleteஅவரது படங்களை வைத்தே எழுதியதை ரசித்தேன்....
ReplyDeleteகீதா
அந்தரங்கமாய் அவர்(கள்) கிட்ட போய் அரசியல் அரங்கேற்றம் வேண்டாம் என்று சொல்லி விடுங்களேன். உயர்ந்தவர்கள் என்றால் அரசியலுக்கு வர அச்சப்படுவார்கள். பஞ்சதந்திரங்களையும் அறிந்தவர் அரசியலுக்கு வரமாட்டார். சும்மா பூச்சாண்டி காட்டுகிறார்!
ReplyDelete//பக்தர்களில்
ReplyDeleteசரிதான்.
சொல்லத்தான் நினைக்கிறேன்! இன்னொரு ’பட்டாம்பூச்சி’ சிறகடிக்கிறது! அவர்கள் ’பகடை பனிரெண்டு’ ஆடுவதற்காக இவர் ’அரங்கேற்றம்’ செய்ய வேண்டுமா? எதற்கு இந்த ‘ஆடுபுலி ஆட்டம்’? ‘ஆனந்தம் பரமானந்தம்’ என்று ’நட்சத்திரம்’ ஆகவே இருப்பதை விட்டு ’ராஜபார்வை’க்கு ஆசைப்பட்டு ’தில்லுமுல்லு’வில் அகப்பட்டு, ’சவால்’ விட்டு ’வாழ்வே மாயம்’ ஆகி விட்டால், ’உருவங்கள் மாறலாம்’ ஆனால் ’பொய்க்கால் குதிரை’ ‘சகலகலா வல்லவன்’ ஆக முடியாது என்று ’மகராசனுக்கு’ ’ நம்மவர்’கள் புரிய வைத்து விடுவார்களோ! :-)
ReplyDelete