Thursday, June 1, 2017

எழுதுகிறேன் ஒரு கடிதம் சீஸன்2.

.

ரே,

புதிதாக சேர்ந்திருந்த அலுவலகத்தில் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கும் சொந்த ஊர் கோவை என்று கூறினார். ‘அட நம்ம ஊர்க்காரர்’ என்ற உற்சாகம் மேலிட அவரைப் பற்றிய தகவல்களை விசாரிக்க, கடைசியில் அவர் படித்தது, நீ படித்த அதே கல்லூரியில்தான் என்று தெரிந்துகொண்டேன். ஓரிரு நிமிடங்கள் தயங்கி அவரிடம் ரேஷ்மா என்ற உன் பெயரைக் கூறி  ‘தெரியுமா?’ என்று கேட்டேன். அவர் சற்றும் தாமதிக்காமல் ‘அந்த வாயாடிப் பொண்ணா, சார்?’ என்றார். பின் சுதாரித்துக்கொண்டு ‘சாரி சார். ஏதோ ஞாபகத்துல அப்படி கேட்டுட்டேன். உங்களுக்கு வேண்டப்பட்ட பொண்ணா சார்?’ வேறு எதைச் சொல்லிக் கேட்டிருந்தாலும் இன்னும் நாலைந்து அடையாளங்களாவது தேவைப்பட்டிருக்கும் நீதான் அது என்று நான் உணர்ந்துகொள்ள. ‘இட்ஸ் ஓகே, யெஸ், அவ லொடலொடன்னு நிறைய பேசுவா. கன்னத்தில், உதட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மச்சம் இருக்குமே’ என்றேன். ‘ஆமா சார். அதே பொண்ணுதான். எனக்கு சீனியர்தான், ஆனா ஒண்ணா ட்யுஷன்ல படிச்சோம். உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணா சார்?’ என்று மீண்டும் கேட்க, ஒரு புன்னகையோடு தலையை மட்டும் அசைத்தேன். இன்னும் அவ்வளவாய் அறிமுகம் இல்லாத அவரிடம் எப்படிச் சொல்வது, நீ என் ‘சக பயணி’ ஆன கதையை?
.

எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது, அந்த டெலிபோன் உரையாடல். ‘இப்படி பல வாரமா பேசிக்கிட்டு இருக்கோமே?, நான் உங்களுக்கு என்ன ப்ரெண்டா?’
அவசரமாய் மறுத்தேன், ‘இல்லை’. ஒரு நக்கல் சிரிப்போடு ‘நான் உங்களுக்கு தங்கை முறையா?’ என்றதும் எனக்குக் கோபம் தலைக்கேறியது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்  ‘நீ என்ன அண்ணனா நெனச்சா, நானும் தங்கையா நினைக்கத் தயார். நீ அப்படி நெனைக்கிறயா?’ என்றேன். ‘சேச்சே.. இல்ல’ என்று நீ பதறியடித்துக்கொண்டு பதிலளித்தது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. அதே சமயம் மனதில் ஒரு ஆறுதல். ‘சரி, அப்ப, நம்ம ரிலேஷன்க்கு பேர் என்ன?’ என்று பந்தை என்னிடமே தூக்கிப்போட்டாய். ‘நீ எனக்கு....’ என்று சிறிது இடைவெளிவிட்டேன். ‘நான் உங்களுக்கு?’ ‘நீ எனக்கு கோ-பாசஞ்சர்’. இதை நான் சொன்னதும் நீ சிரிக்கத் துவங்கிவிட்டாய். ‘என்னது, கோ-பாசஞ்சரா? அப்படீன்னா?’ என்றாய். ‘என் வாழ்க்கைப் பயணத்தில் உடன் வரப் போறவள்னு அர்த்தம்’ என்றேன். சிறிது நேர மௌனம். பிறகு ‘அப்படீன்னா?’ என்றாய். ‘அப்படீன்னா, அப்படித்தான்’ என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.

.
அன்று துவங்கிய நம் நெருக்கம், ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா, கங்கா யமுனா திரையரங்கம், நீ படித்த கல்லூரியின் அருகே இருந்த டீக்கடை, உன் வீட்டிற்கு அருகே இருந்த பாலம், க்ராஸ்கட் ரோடு, என்று கோவையின் புகழ்பெற்ற இடங்கள் அனைத்திலும் மெல்ல மெல்ல வளர்ந்தது. இருந்தாலும் நம் உறவுக்கு உரைகல்லாய் இருந்த இடம், நீ வழக்கமாகச் செல்லும் அந்த துர்க்கை அம்மன் கோவில்தான். இன்றும் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் போட்டு குழப்பிக்கொள்பவர்கள் நிச்சயமாக இதை முகச்சுளிப்போடுதான் வாசித்துக் கடப்பார்கள். வயதுக்கு வந்த ஒரு பெண், பொதுமக்கள் கூடும் கோவிலில் வைத்து, அவள் வயதுடைய ஆணுக்கு ‘இதழ் முத்தம்’ கொடுப்பது என்பது இன்றைக்கும் குற்றமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் அன்றைக்கு எனக்கே அது ஆச்சரியமாகத்தான் இருந்தது; ஆனந்தமாகவும் தொடர்ந்தது.. அப்போது உன்னளவிற்கு தைரியம் என்னிடம் இல்லை எனக்கு. அதனால் உனக்கு பதில் முறை செய்யும் துணிவு வரவில்லை. காதலியின் முத்தமும் புனிதமானதுதான். அதிலும் கோவிலின் பின்புறம் வைத்து நீ கொடுத்ததால் அது இன்னும் பரிசுத்தமானது. அந்த ‘முதல் முத்தம்’ இன்னும் சில மில்லேனியங்களுக்கு நினைவில் இருக்கும். ஏனெனில் அந்த முத்தம் காமத்திற்கான அழைப்பு அல்ல. உண்மையான காதலின் சுவடு.

.
சரி, அதிருக்கட்டும். சென்னையில் நான் தங்கி பணிபுரிந்த போது ‘சென்னை பயங்கர சூடா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் கோயம்புத்தூர்லயே செட்டில் ஆயிடணும்’ என்று  கூறுவாயே. இப்போது சவூதி அரேபியாவிலும் வெப்பம் அதிகம்தானாமே? இந்நேரம் அந்த கிளைமேட் உனக்கு பழகியிருக்கும் என்று நம்புகிறேன். முகநூலில் உன்னைத் தேடிக் கண்டுபிடித்தவுடன் உனக்கு முதலில் ‘பிரண்ட்’ ரிக்வெஸ்ட் கொடுக்கத்தான் நினைத்தேன். ஆனால் நட்பு அழைப்பு கொடுக்க நீ ஒன்றும் என் தோழி அல்லவே! நீ அவ்வப்போது போடும் புகைப்படங்களை நான் பார்க்கத்தான் செய்கிறேன். அதிலும் இளஞ்சிவப்பு உடையில் உன் டிரேட் மார்க் புன்னகையோடு நீ நிற்கும் புகைப்படமும் இரண்டு அடியில் செய்து வைத்த வெண்கலச் சிலை போல் மின்னும் உன் பெண் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு நிற்கும் நீயும், அருகே அளவுக்கு அதிகமான ஆறரை அடி உயரத்தில் வளர்ந்திருந்த உன் கணவனும் நிற்கும் புகைப்படமும் கொள்ளை அழகு!

.
இதற்கு முன் நான் எழுதிய முந்நூற்றுச் சொச்ச கடிதங்களைப் போல இதுவும் என் குப்பைத் தொட்டிக்குள்தான் வாசம் செய்யப் போகிறது. ஆனாலும் அது என் மனம் முழுக்க நிறைந்திருக்கும் காதலை அலைவரிசைகளாய் மாற்றி உனக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். உன்னை நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றைப் பார்க்கும் வேளையில் அடுத்த கடிதத்தை எழுத என் பேனா ஆயத்தமாகிவிடும்! அதுவரையிலும் உன் நினைவுகளில் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்.

புன்னகைகளுடன்,
உன் சக பயணி.
.
.
#அவளும்நானும்
.

13 comments:

 1. ஒரு அழகிய சிறுகதை கடிதத்தை காலை முகநூலில் படித்தேன். இங்கும் படித்தேன். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. ஓ! இது முகநூலில் கடிதம் எழுதும் போட்டியா..கார்த்திக் சரவணன் தளத்தில் பார்க்க நேரிட்டது!!...

   ஸ்ரீராம் இது மாதிரி ரேஷ்மா கடித வடிவில் தொடர்ந்து கொண்டேதான் இருப்பாள் இல்லையா ஆவி??!!!

   கீதா

   Delete
 2. ரேஷ்மாவை இன்னும் விடவில்லையா நீங்கள் ஆவி?! கடிதம் ரெம்ப நன்றாக இருக்கிறது.

  கீதா: வாவ்! ஆவி செம!! நீங்கள் இப்படி எழுதுவது எப்போதுமே சுவாரஸ்யமாக, வருத்தம் அடைக்கப்பட்ட ஒரு கிஃப்ட் பாக்ஸ் போல இருக்கும் என்று நினைத்துக் கொண்டே அதை உன்னும் காணலையே என்று நினைத்துக் கொண்டே வாசித்து வருகையில்... அந்த வரிகள் வந்துவிட்டது...//சரி, அதிருக்கட்டும். சென்னையில் நான் தங்கி பணிபுரிந்த போது ‘சென்னை பயங்கர சூடா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் கோயம்புத்தூர்லயே செட்டில் ஆயிடணும்’ என்று கூறுவாயே. இப்போது சவூதி அரேபியாவிலும் வெப்பம் அதிகம்தானாமே?//

  பல வரிகள் ரசிக்கும்படி இருக்கிறது...

  ரேஷ்மாவின் காதலனின் காதல் தோல்வியடைந்துவிட்டது என்று உலகம் சொல்லலாம் ஆனால் என்னைப் பொருத்தவரை அவனின் காதல் வெற்றி பெற்றுவிட்டது என்பதே! ஏனென்றால் அது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறதே!

  மனதை என்னவோ செய்ததுதான் இறுதியில் வாசிக்கும் போது....என்றாலும் அது இன்னும் அழியாமல் இருப்பதும் மகிழ்ச்சியைத் தந்தது!

  அருமை ஆவி...

  ReplyDelete
 3. *சிறுகதை கடிதத்தை

  சிறுகதை வடிவக் கடிதத்தை

  ReplyDelete
 4. எங்கிருந்தாலும் வாழ்க
  உன் இதயம் அமைதியில் வாழ்க
  மஞ்சள் வளத்துடன் வாழ்க
  உன் மங்கலக் குங்குமம் வாழ்க
  வாழ்க...வாழ்க...

  (எங்கிருந்தாலும்)

  இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
  இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
  சென்ற நாளை நினத்திருந்தாலும்
  திருமகளே நீ வாழ்க
  வாழ்க...வாழ்க...

  (எங்கிருந்தாலும்)

  வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
  வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
  துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
  தூயவளே நீ வாழ்க
  வாழ்க...வாழ்க...

  (எங்கிருந்தாலும்)

  ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
  இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
  போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
  பொன்மகளே நீ வாழ்க
  வாழ்க...வாழ்க...

  ReplyDelete
 5. த.ம.- இணைத்து விட்டேன்... நம் நண்பர்கள் அப்போது தான் வருவார்கள் என்று நினைக்கிறேன்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. டிடி... முதலிலேயே இணைக்கப்பட்டிருந்தது. நான் முதல் வோட்டும் போட்டேன்.

   Delete
 6. TM 3
  ஹும்ம் இப்படி என் காதலிகள் யாரும் எனக்கு கடிதம் எழுத மாட்டேன்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. ம்க்கும் :) அந்த ஸ்ட்ரெச்சர் :) நினைவிருக்கட்டும்

   Delete
 7. கடிதம் நல்லா இருக்கு ஆனந்த் ..

  ReplyDelete
 8. கடிதம் சுவாரசியம் ஆவி.

  ReplyDelete
 9. ஹை! நல்லாயிருக்கே இது! :-) யூத்ஃபுல்!

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...