எப்போதும் போலத்தான் இன்றைய காலைப் பொழுதும் துவங்கியது. ஐந்தரை மணி அலாரம். ஸ்னூஸ், மீண்டும் 5:40, 5:50, 6:00 என தள்ளிப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் (6:05 இருக்கலாம்) மூடிய விழிகளுக்குள் ஒரு 35mm திரை விரிந்து அங்கே ஓர் யுவதி கண்களில் கண்ணீரோடு வேகமாக ஓடுகிறாள்.
காரணம் என்னவென்று கேட்கத் தோன்றுகிறது மனதில். ஏதோ ஒன்று தடுத்து நிறுத்துகிறது என்னை. அவள் ஓடும் பாதை கறுப்பான மணல் நிறைந்த ஒரு பாதை. அவள் செல்லும் வேகத்திற்கு நானும் செல்கிறேன். நான் பின்னால் வருவதை அவள் கவனித்ததாய் தெரியவில்லை. எங்களை யாரும் கவனித்தார்களா என்பதை நானும் கவனிக்கவில்லை. ஓடிக் கொண்டிருந்த பாதையில் அவள் கடந்த சில நொடிகளுக்குள் வர்தா புயலால் வேரோடு விழுந்த ஒரு மரம் காற்றில் அடித்து வந்து எங்கள் இருவருக்கும் இடையே ஓர் இடைவெளியை உண்டாக்கியது. நான் தடுமாறி என் ஓட்டத்தை நிறுத்திய நேரம் அலாரம் அடித்து கண்விழித்து அமர்ந்தேன்.
வழக்கம்போல் அலுவலகத்திற்குப் புறப்பட்டு ஷிங்கோவுடன் (Shine) வடபழனி சிக்னலை அடைந்தேன். சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியபோதுதான் அதை நான் கவனித்தேன். எனக்கு வலப்புறம் இருந்த பல்சரில் ஒரு வெள்ளை ஹெல்மெட்டுக்கு பின்புறம் ஒரு வெள்ளை தேவதை அமர்ந்திருந்தது. எதேச்சையாய் பார்த்து முகம் திருப்பிய நான் மீண்டும் அவளைப் பார்த்தேன். அவள் கண்களில் கண்ணீர்!
காலை நேரக் கனவு மனதின் ஓரம் தோன்ற டிராபிக்கின் ஓட்டத்தில் அந்த வண்டியை பின்தொடர்ந்தபடி சென்றேன். அதிசயமாக ஆற்காட் ரோடு கூட்டம் குறைவாக இருந்ததால் அவர்கள் நில்லாமல் சென்று கொண்டிருந்தார்கள். நானும் அவர்களைப் (அவளைப்) பின்தொடர்ந்தபடி செல்ல இப்போது அவள் முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. விழியெனும் செம்பரம்பாக்கம் அணை உடைந்து, வழிந்து கொண்டிருந்த கண்ணீரை கைகளில் குட்டையாக இருந்த ஒரு துணி கொண்டு (அதன் பெயர்தான் கைக்குட்டையோ?) துடைத்தபடியே வந்தாள். வண்டியை சற்று வேகமாக ஓட்ட ஆரம்பித்தேன். லிபர்டி பாலம் கண் முன்னே தெரிந்தது. அதே சமயம் நான் அவர்கள் வண்டிக்கு மிக அருகே நெருங்கியிருந்தேன். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு ஆட்டோ இடம் வலமாக உள்ளே நுழைந்து பாலத்தின் மறுபக்கம் சென்றதால் சட்டென்று வண்டியை நிறுத்த வேண்டியதாயிற்று. அந்தக் களேபரத்திலிருந்து மீண்டு, மீண்டும் அவளைத் தேடிய போது அவள் காணாமல் போயிருந்தாள்!
.
ஆவி
வெள்ளி, 23.12.16
என்னங்க இது! கனவைக் கட்டாய நனவாக்கும் முயற்சியா!!
ReplyDeleteஅடடா... அந்த யுவதியின் கண்ணீருக்குக் காரணம் தெரியாமல் போச்சே....
ReplyDeleteமுகப்புத்தகத்திலும் வாசித்தேன்.
ஹும் ஆவி! அந்த ஆட்டோக்காரரை என்ன செய்யலாம்...ம்??!!! இப்படி இறுதியில் யுவதியின் கண்ணீரைத் துடைத்துவிட முடியாமல் ஆவியின் குறுக்கே வந்து...!!! அந்த ஆட்டோக்காரர் பல்லாண்டு வாழட்டும்!!!!
ReplyDeleteஇல்லை ஒரு வேளை நீங்கள் தொடர்ந்த யுவதி..."நான் அவளில்லை" என்று கடந்து போய்விட்டாள் போலும்!!
கீதா