Sunday, December 4, 2016

இண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்!


.
சென்ற வாரம் அரசனின் இண்டமுள்ளு புத்தகத்திற்கு பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் அளித்த பாராட்டு மழையில் நனைய வேண்டி கோவை செல்ல ரயிலில் ஆயத்தமானோம். தாமதமாக வந்து சேர்ந்த கார்த்திக்கிடம் நான் முதல் முதலாக வைத்த கேள்வி, இன்றைய தினத்தில் எல்லோரும் அவரிடம் தெரிந்து கொள்ள நினைக்கும் ஒரு கேள்வி. “பாஸ் உங்களுக்கு எப்ப கல்யாணம்?” அதற்கு அவர் ரகசியமாக கூறிய பதில் சற்று முக்கியம், அதே நேரத்தில் காத்திருந்து படிக்கக் கூடிய ஒன்று என்பதால் நான் அதற்கு கடைசியாக வருகிறேன்.
.ரயிலில் அரசனுக்கும், ஆவிக்கும் இடையே வசமாய் மாட்டிக் கொண்ட கார்த்திக் இருவரின் கேள்விகளுக்கும் பதிலளித்தபடியே அரை மணி நேரத்தை கடத்தினார். ஒரு கட்டத்தில் நான் மேல ஏறி படுக்கப் போறேன் என்று சட்டென்று கூறிவிட்டு எஸ்கேப் ஆனார். அதன் பின்னே நானும் அரசனும் ரயில் கதவுகளுக்கு அருகே நின்று கொண்டு நீண்ட நேரம் ஒவ்வொரு சிறு கிராமத்தையும் கடந்து வந்த காற்றையும் சுவாசித்தபடியே எங்களின் வழக்கமான உரையாடல்களைத் துவங்கினோம். அவை பெரும்பாலும் இருபொருள் பன்மொழி கேட்டகரியில் அமைந்திருப்பதாக இலக்கிய ஆளுமை சீனு ஒருமுறை கூறியுள்ளார். நள்ளிரவு தாண்டி சில மணித்துளிகளுக்குப் பின் கண்ணுறங்கினோம்.
.
காலை நான்கரை மணிக்கே வடகோவைக்கு வந்துவிட்ட போதும், பெண்பார்க்க வந்திருக்கும் தற்கால இளைஞன் போலே தயங்கித் தயங்கி கோவை ரயில்நிலையம் வந்தடைந்தது. கார்த்திக் புகழேந்தி, அரசன் எனும் இரு இலக்கிய சகாக்களுடன் வந்திறங்கிய கணத்தை என் கைப்பேசியில் பொக்கிஷமாக்கிக் கொண்டு என் இல்லத்தை நோக்கி பிரயாணித்தோம். GD நாயுடு தொடங்கி கோவையைப் பற்றி நான் இதுவரை அறிந்திராத தகவல்களை கூறி என்னை அசத்தியபடி வந்தார் கரிசல்காட்டு நாயகன். அரியலூரின் மைந்தன் எப்போதும் போல அமைதியாய்.
.
வீட்டிற்கு சென்றும் தொடர்ந்த விவாதம் இப்போது ஐந்நூறு, ஆயிரத்தில் வந்து நின்றது. நான் இந்தத் திட்டம் சரிதான் என்றும், அதை செயல்படுத்திய விதம் தவறு என்றும் என் சிற்றறிவுக்கு எட்டியதைக் கூறினேன். அதை பலமாக மறுத்த புலவர்கள் இருவரும் ஒரு சேர தாக்குதல் நடத்த சற்றே மிரண்டு போனது உண்மைதான். இதில் என் தாயாரும் அவர் கூட்டணியில் சேர்ந்து கொண்டது எரிந்து கொண்டிருந்த ஃபயருக்கு பட்டரை ஊற்றியது போலிருந்தது. நிகழ்வுக்குத் தாமதமான காரணத்தால் விவாதத்தின் களம் வீட்டிலிருந்து காருக்கு ஷிப்ட் ஆனது.
.
எத்துணை அம்புகள், எத்துணை ஈட்டிகள் நெஞ்சில் பாய்ந்த போதும் நான் கொண்ட நிலையில் மாறாமல் நின்றிருந்தேன். கார்த்திக்கோ ஒரு படி மேலே போய் அமெரிக்க பொருளாதாரம், ருஷ்யாவின் வீழ்ச்சி, நமீதாவின் கவர்ச்சி (சாரி, ஒரு ப்ளோல வந்திடுச்சி) என்று எல்லாவிதமான விஷயங்களையும் கூறி இதனால் அந்த சட்டம் முறையானது அல்ல என்று டாட் வைத்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த என் ‘அனாமிகா’* என் அவல நிலையைக் காணச் சகிக்காமல் ஓடாமல் நின்றுவிட்டாள். புலவர்கள் இருவரும் தானியங்கி வாகனத்தில் இலக்கியக் கூட்டத்திற்கு செல்ல நானோ அனாமிகாவை பரிசோதிக்க கார் மருத்துவரை நாடினேன். நீண்ட போராட்டத்திற்கு பின் அவளும் புறப்பட, மகிழ்ச்சியோடு நான் வந்து சேர்ந்த போது கார்த்திக்கின் பேச்சைத் தவற விட்டிருந்தேன். அரசன் பேச்சை ஆவலுடன் கேட்டு, அவர் நாணப்பட்டு விரல் நகங்களைப் பார்த்தபடியே ஆற்றிய உரையை கேட்டு மகிழ்ந்தேன்.
.
பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்கள் சிலருடன் அறிமுகம் செய்து கொண்டேன்.(அவர்களைப் பற்றி இன்னொரு பதிவில் தனியாகச் சொல்கிறேன்) அவர்களுடன் மதிய உணவை உண்டு திரும்பி வரும்வழியில் கார்த்திக்கின் நட்பு வட்டத்தில் இருந்த சிவகாமசுந்தரி மற்றும் அவர் குடும்பத்தினரை சந்தித்தோம். அவரும் தேர்ந்த எழுத்தாளர் என்பது பின்னாளில் அவருக்கு முகநூல் நட்பு கொடுத்தபோது தெரிந்து கொண்டேன். அங்கே சந்தித்த இரண்டு மறக்க முடியாத நபர்களை பற்றியும் சொல்ல வேண்டும்.
.
தேஜு - பெயர் எவ்வளவு சிறியதோ ஆளும் அவ்வளவே. ஆனால் நாங்கள் இருந்த அரை மணி நேரத்தில் அவ்வளவு சீக்கிரம் மனதில் இடம்பிடித்தாள். ஸ்மார்ட் கிட்டோ. அவளிடமிருந்து கண்ணாடிப் பாத்திரங்களைப் பாதுகாக்க அவள் தாய் பட்ட பாடு எங்களுக்கு செம்ம காமெடியாக இருந்தது. இன்னொரு நபர் சிவகாமி அவர்களின் தாய். “விகடன்” வாசகியான அவர் பொன்னியின் செல்வனில் துவங்கி தனக்கும் விகடனுக்குமான பந்தத்தை சுவைபட கூறினார். அதோடு அரசனின் புத்தகத் தலைப்பான இண்டமுள்ளை பற்றி அவர் தெரிந்து வைத்திருந்தது மேலும் ஆச்சரியத்தை அளித்தது. அங்கே விடைபெற்று வீடு வந்தோம்.
.
சிவகாமி அவர்கள் சிரமத்தினூடே செய்து கொடுத்த சிக்கனும், அம்மா வீட்டில் செய்திருந்த சிக்கனையும் சேர்த்து ஒரு பிடி பிடித்துவிட்டு நண்பர்கள் இருவரையும் முதலில் என் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி பின், அரசாங்கத்தின் ஆறு சக்கர வாகனத்தில் ஏற்றிவிட்டேன்.
.
சென்று சேர்ந்த புலவர்களில் ஒருவர் மறுநாள் செய்தி அனுப்பினார். மற்றொருவர் தகவல் ஏதுமில்லை. முகநூலைப் பார்த்துதான் அவர் “ஊருக்கு சென்ற வழி” அறிந்தேன்.
.
அரசனின் ஒவ்வொரு முன்னேற்றப் படிகளிலும் நானும் ஓரமாக அவருடன் லெமன் டீ குடிக்க ஆஜராகிவிடுவதில் ஒரு சிறு மகிழ்ச்சி! அவர் எவரெஸ்ட்டையும் தாண்டிய உயரத்தை எட்டுவார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் உயரத்தை எட்டும்போது நான் உடனிருப்பேனா என எனக்குத் தெரியாது. ஆனால் என் வாழ்த்துகள் எப்போதும் உடனிருக்கும்!
.
சரி அப்படி கார்த்திக் என்ன ரகசியம் சொன்னார் என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன். “கல்யாணம் எப்போ பாஸ்” என்ற என் கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? “engaged” என்று ஒரு ஸ்டேட்டஸ் வந்தது அல்லவா? அதுபோல் “married” என்றும் ஒரு ஸ்டேட்டஸ் வரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூலாக சொன்னாரே பார்க்கலாம்!
.
-புன்னகைகளுடன், ஆவி

2 comments:

  1. செம ரகளை போல!!! அரசனுக்கு வாழ்த்துக்கள்! கார்த்திக்கின் பதில் ரசனை!!

    கீதா

    ReplyDelete
  2. செம ரகளையோ...
    அரசனின் வெற்றி எத்துனை உயரம் தொட்டாலும் தாங்களும் இருப்பீர்கள்... நாங்களும் இருப்போம்..

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails