மர(ற)ப்பேனா!
அவள் கடைசியாய் கையொப்பமிட்ட
பேனாவை எடுத்து வந்துவிட்டேன்
ஆடம்பரம் இல்லாமல் செய்யப்பட்ட மரப்பேனா! - ஆயினும்
அதை பாதுகாக்க என்றும் நான் மறப்பேனா?
மரத்தால் ஆன பொருட்களுக்கெல்லாம்
உணர்வில்லையென யார் கூறியது?
நான் கண்ணீர்விட நினைக்கையில் எல்லாம் -இந்த
மரப்பேனா மை சிந்துகிறதே!
என்னிடம் பேனா வாங்கி அன்று எனக்கே ஒரு
பிரேம லக்கினம் எழுதிக் கொடுத்தாள்.
இன்று அதே பேனாவின் துணை கொண்டு
விடுதலை சாசனத்தில் ஒப்பமிடுகிறாள்.
உனை எப்படியெல்லாம் நேசிக்கேறேன்
என பல கடிதம் எழுதிப் பின்
அவற்றை அஞ்சலில் சேர்த்துவிடத் திண்மையின்றி
குப்பைத் தொட்டியில் சேர்த்தேனே.
உனை நினைத்தெழுதிய கடிதத்திற்கு
கல்லூரி முதல் பரிசு கொடுத்த போது
என் காதல் அதனை உன்னிடம் சொல்லிவிட்ட
மகிழ்வில் துள்ளிக் குதித்தேனே.
மூன்றெழுத்து சொல் தான் என்ற போதும்
மூன்றாண்டுகள் ஆனதே உன்னிடம் சொல்ல
அதுவும் ஜடமாய் இருந்த என் மரப்பேனா -ஏளனமாய்
சிரித்ததனால் தானே அது நடந்தது.
இதயத்திலிருந்து புறப்பட்ட குருதி
தமனியை சென்று சேரும் முன்
நண்பனின் உந்துதலால் நறுக்கென்று
உரைத்தும் விட்டேன் உன்னிடம்.
என்றுமே பொலிவாய்த் தோன்றும்
உன் பூ முகத்தில் -ஒரு ஆயிரம் வாட்
அகல்விளக்கு பிரகாசித்ததாய் நண்பன் கூறியதை
நானும் கவனிக்கத் தவறவில்லை.
அப்படியாக அந்த மரப்பேனா
சாட்சியாக, நண்பர்களும் உடனிருக்க
சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்ட திருமணத்திற்கு
பூலோகத்தில் இருவரும் கையொப்பமிட்டோம்.
காதல், காமம், காப்பி, ஹனிமூன்
எல்லாமே இனிமையாகக் கடந்தது.
காமத்துப் பாலின் சுவை இரண்டு ந்யூ மூன் வரை
பொருட்பால் தேடச் செல்வது தானே அறம்?
காதல் கவிதைகள் பல எழுதிக் குவித்த
மரப்பேனா இன்று அலுவலக மேசையில்
கோப்புகளில் கையொப்பமிடவும் -தொழில்
ஒப்பந்தங்களை உறுதி செய்யவும் உதவியது.
அன்றிருந்த நேசம் எல்லாம் அடியோடு
தொலைந்து போய் விட்டதாய்
கண்ணீர் துளியுடன் கூட்டணி அமைத்த மையோடு
கடிதம் ஒன்றை எழுதித் தந்தாய்.
மன்னிக்க வேண்டுவதாய் உன்னிடம்
மன்றாடிக் கேட்டிருக்கலாம் - என் செய்ய
கறுப்பங்கிக்காரரைக் கொண்டு உனை மீட்க
வாதிடுவது தான் விதியென்று ஆன பிறகு.
என் முகம் பார்த்துத் துயிலெழுவது
சிறப்பென்று கூறிய இதழ்கொண்டு- இனி
எப்போதும் என் முகம் காண
வெறுப்பென்று கூறியதாய் கேள்விப்பட்டேன்.
இதோ..
அவள் கடைசியாய் கையொப்பமிட்ட
பேனாவை எடுத்து வந்துவிட்டேன்
ஆடம்பரம் இல்லாமல் செய்யப்பட்ட மரப்பேனா! - ஆயினும்
அதை பாதுகாக்க என்றும் நான் மறப்பேனா?
மரப் பேனா மறப்பேனா...வெளிப்படுத்தும் வலிகள்...மறக்க முடியாத, மரத்துப் போகாத, மரத்துப் போக மறுக்கின்ற நினைவுகளின் வெளிப்பாடுகள். வரிகள் அருமை என்றாலும் அதன் வேதனை மனதை வருத்துகின்றதுதான்.
ReplyDeleteகீதா: மேலே சொல்லப்பட்ட வரிகளுடன்...
உனை எப்படியெல்லாம் நேசிக்கேறேன்
என பல கடிதம் எழுதிப் பின்
அவற்றை அஞ்சலில் சேர்த்துவிடத் திண்மையின்றி
குப்பைத் தொட்டியில் சேர்த்தேனே.//
ஏதோ நினைவுகள். வரிகளை இருவருமே ரசித்தோம் ஆவி. ஆனால் முழுமையாக இல்லை. வரிகளை மிஞ்சியது அதன் உணர்வுகளின் வெளிப்பாடுகள். மரப் பேனா மறப்பேனா தலைப்பும் வசீகரம் ஆனால் அதன் தாக்கம் அதிகம். இணைத்ததும், பிரித்ததும் அதுவே ஆகிப்போனால், அந்த மரப் பேனா உடன் இருப்பதாலும்...இல்லை எனினும் வலிகள், நினைவுகள் மரத்துப் போவது இல்லையே...
வேதனையுடன் ஒரு ரசனை..
அருமை
ReplyDeleteமரப்பேனாவால் எழுதப்படும் மறப்பேனா அருமை தான்.
ReplyDeleteநன்று (நீளம் என்றாலும்)
ReplyDelete