காலங்கள் கடந்தாலும்,
மாற்றங்கள் நிகழ்ந்தாலும்,
கிராமத்தின் பெயர்சொல்லும் இந்த,
ஆலமரத்தடி பஞ்சாயத்துக்கள் ஓய்ந்தபாடில்லை.
மரத்தைச் சுற்றி மாந்தர்களின் கூட்டம்,
‘மா’ மரத்தின் ஒருபுறத்தில் காகங்கள் கரைய,
கரை போட்ட வேட்டியுடன் நரைத்த தலைகள்
அமர்ந்திருக்க,
தழும்பிய நீருடன் செம்பொன்று காத்திருக்க,
காவலனாய் நின்றிருக்கும் அந்தத் தலைவன் வந்தமற,
அமைதி நாற்காலியிட்டு அமர்ந்திருந்தது.
சாதி சண்டையிலே காலுடைந்த கருப்பசாமி கைகட்டி
நின்றிருக்க,
அவன் காலுடைத்ததை பெரும் சாதனையாக எண்ணி,
இறுமாப்புடன் அந்த முனியாண்டி நின்றிருக்க,
அமைதியின் ஆணவத்தை முறியடிக்க வந்த மாவீரன்
போல்,
பற்களில் பலவற்றை இழந்துவிட்ட அந்த வாலிபக்
கிழவர்,
“கருப்பசாமி உன் புகாரை சொல்லு” என்று
தொடங்கினார்.
“சாமி, சாதிச்சண்டையில இவன் என் காலை
உடைச்சிட்டாங்க”
தீராத மௌனவிரதத்தை திடுக்கென உடைத்துக்கொண்ட
தலைவன்,
அவன் புகாருக்கு உன் பதில் என்ன?”
தலையில் முண்டாசு கட்டியிருந்த முனியாண்டி,
முழிகளை ஆட்டியவாறே தலைவனிடம்,
“சாமி, இவன் என் சாதியப் பத்திக் கேவலமாப்
பேசிட்டான்”
“அதான் சாமி ஒரு கால வாங்கிப்புட்டேன்.”
தலைவர் தீர்ப்பை சொல்ல தயாரானார்,
“எலே சாதி என்னலே சாதி,
பூமில ரெண்டே சாதிதான் ஒண்ணு ஆண்சாதி,
இன்னொன்னு பெண்சாதி,
இன்னும் எத்தன காலத்துக்கு
இந்த சாதி பேரச் சொல்லி அடிச்சுக்குவீங்க?
போங்கடா போங்க போயி,
வேலையப்பாருங்க” என்று கூறி துண்டை உதறி
தோளில் போட்டு வீடு நோக்கி நடந்தார்.
அரண்மனை போன்ற அந்த அழகான வீட்டின்முன்,
வாயிலில் ஓர் தோட்டத்துப் பணியாள்,
பசியாற கிண்ணத்திலிருந்த பாயசத்தை குடித்துக்
கொண்டிருக்க,
கண்கள் சிவக்க அந்த தங்கத்தலைவன்,
தன் மனையாளைப் பார்த்து,
“ஏண்டி உனக்கு எத்தன முறை சொல்றது
கீழ்சாதிக்காரப் பயலுக்கு அலுமினியத்தட்டுல
திங்கக் குடுக்காதேன்னு!”
கொடுமை.....
ReplyDeleteKastam thaan...
ReplyDelete