Thursday, March 24, 2016

அஷ்மிகா -சிறுகதை        அதிகாலையில் கண்விழித்த போது மணி நான்கை காட்டியது செல்போன். அஷ்மிகா மெத்தையில் இருந்து எழுந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சோம்பல் முறித்தபடி அமர்ந்தாள். அவள் தலையைச் சுற்றி போர்த்தியிருந்த போர்வை, இருள் தோய்ந்த அந்த ஆளுயரக் கண்ணாடியில் அவளை மணப்பெண் போலக் காட்டியது. தனக்குத் தானே வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டாள். பின்னர் தன்னிலை உணர்ந்தவளாய் பரபரப்புடன் எழுந்தாள். யாரும் பார்ப்பதற்குள் புறப்பட வேண்டும். எல்லோரிடமும் சொல்லிவிட்டே செல்லலாம் தான், ஆனால் வீணான விவாதங்களையும் நியாய அநியாயங்களையும் பற்றி தர்கிக்க அவளுக்கு அப்போது மனமில்லை.

ஃபிரஷ்ஷில் பச்சை நிற பேஸ்ட்டை எடுத்துக் கொண்டே நேற்று ரவியுடனான சம்பாஷணையை எண்ணிப் பார்த்தாள். "காலைல நாலரை மணிக்கெல்லாம் என் வீட்டுக்கு முன்ன வந்து ஃபிக்கப் பண்ணிக்க. போனை ஃபுல்லா சார்ஜ் போட்டுக்க. கீழ வந்ததும் வாட்ஸப் பண்ணு நான் இறங்கி வர்றேன்." "அஷ்மிகா, அம்மாகிட்ட மட்டுமாவது சொல்லிடட்டுமா?." "ஆர் யூ அவுட் ஆப் மைண்ட், டோன்ட் பீ எ சென்டிமென்டல் ஃபூல், டோன்ட் டெல் எனிபடி. எல்லார்கிட்டயும் அப்புறமா சொல்லி சமாதானப் படுத்திக்கலாம். என்னதான் 2016இல் நாம் வாழ்ந்தாலும் அவங்க எல்லாம் இன்னும் அந்தக் காலத்து ஆளுங்க. தே டெபனட்லி கான்ட் அண்டர்ஸ்டென்ட் ஆல் தீஸ்."

எப்போதும் போல அஷ்மிகாவின் குரலுக்கு முன் ரவி அடங்கிப் போனான். சிறு வயது முதல் ஒன்றாகப் படித்து ஒரே காம்பவுண்ட்டில் ஒன்றாக விளையாடி, வளர்ந்த போதும் கல்லூரிக்கு செல்லும் போது, தன் பைக்கின் பின்புறத்தில் அவள் அமர்ந்து வந்த போது தான் தனக்கு அவள் மீது முதல் முதலாய் காதல் துளிர்த்ததை உணர்ந்தான். பெயரில் மட்டுமல்ல எண்ணத்திலும், செயலிலும் கூட படு மாடர்ன் பெண்ணான அஷ்மிகாவுக்கும் அவனை பிடித்துப் போன காரணம் அவனது கவிதைகள், பாடல்கள் எட்செட்ரா.. எட்செட்ரா.

"ஏய் ரவி, கிளம்புடா. கெட் சம் ஸ்லீப், அண்ட் டோன்ட் பர்கட் டு கம் இன் ட்ரெடிஷனல் டிரஸ் ஐ பாட் ஃபார் யூ" அஷ்மிகாவின் அதட்டல் குரலுக்கு அடிபணிந்து எந்திரன் 2.0  போல நடக்க ஆரம்பித்தான். பள்ளி செல்லும் நாள் தொட்டு மகனுக்கு இந்தப் பள்ளி நன்றாக இருக்கும், இந்த உடை நன்றாக இருக்கும், இந்த கராத்தே கிளாஸ் நன்றாக இருக்கும், இந்த பாட்டு கிளாஸ் நன்றாக இருக்கும் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்த பெற்றோரை புறக்கணித்து விட்டு செல்வதில் முழு உடன்பாடு இல்லாத போதும் அஷ்மிகாவுக்காக எல்லாம் செய்தான். அவனிடம் கேட்டால் சொல்வான். "அழகு தேவதை சார் அவ! அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்."

மூன்றரை மணிக்கே அலாரம் வைத்து எழுந்து புறப்பட ஆரம்பித்து விட்டான். நேரம் தவறினால் அஷ்மிகாவுக்கு கெட்ட கோபம் வரும். நேற்று போத்தீஸ் ஃபொட்டிக்கில் அவளுக்கு பட்டுப் புடவை வாங்கிய அதே பச்சை நிறத்தில் அவனுக்கு ஒரு பட்டுச் சட்டையும், பட்டு வேஷ்டியும் எடுத்துக் கொடுத்திருந்தாள். அதை அணிந்து கொண்டு அப்பா அம்மாவின் அறையைக் கடந்து வந்தான். மனதில் ஏதோ குற்ற உணர்வு அழுத்தவே அந்த அறைக்குள் சென்று அவர்கள் கால்களில் அவர்கள் உணரா வண்ணம் தொட்டு மானசீகமாய் ஆசிர்வாதம் பெற்று வெளியேறினான். யாருக்கும் தெரியாதபடி, நேற்றிரவே தெருமுனையில் நிறுத்தியிருந்த தன் காரில் ஏறி அஷ்மிகாவின் வீட்டு வாசலை அடைந்து வாட்ஸப் தகவல் அனுப்பினான்.


பச்சை நிற புடவையில் வானில் இருந்து இறங்கி வந்த அழகுச் சிலை போல வந்த அஷ்மிகா, தன் ஐந்தடி உருவத்தை காரின் முன்சீட்டில் அடக்கிக் கொண்டாள். "நல்லவேள, யாரும் எழுந்திருக்கல. இல்லேன்னா பெருசுக நீதி, நியாயம்னு பேசி போர் அடிப்பாங்க. ஓல்ட் பெல்லோஸ். சரி, அதிருக்கட்டும், நீ ப்ராக்டீஸ் பண்ணீட்ட தானே? கிளம்பு டைம் ஆச்சு." என்றதும் கார் நகர்ந்தது. தமிழகத்தின் முத்துக் குரல் தேடலுக்கான நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர், பிரபல பின்னணிப் பாடகி அஷ்மிகாவும் பாடகர் ரவியும்!  

                              ******************

9 comments:

 1. தமிழகத்தின் முத்துக் குரல் தேடலுக்கான நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர், பிரபல பின்னணிப் பாடகி
  அஷ்மிகாவும் பாடகர் ரவியும்! ////

  ஹா.ஹா.ஹா. கதை சூப்பர் சார்!
  கடைசில செமையா மொக்கை வாங்கிட்டேன் நான்:)

  ReplyDelete
 2. ஒரு சின்ன குறும்படமா எடுக்கலாமோ ?

  அந்த அம்மாவும் அப்பாவா நடிக்க நாங்க வரவா?

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா, நிச்சயமா தாத்தா..

   Delete
 3. எதையோ நினைக்க வச்சு இதெல்லாம் இல்ல என்று நினைக்க வைத்த முடிவு. வர்ணனைகள் நல்லா இருக்கு ஆவி ஆங்கிலத்தை மட்டும் கொஞ்சம் குறைச்சிருக்கலாம்

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. வழக்கம் போல ! பலூனை ஊதி ஊதி பெருசாக்கி கடைசில உடைச்சுட்டீங்களே :D

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails