Thursday, March 17, 2016

கௌரவக் கொலை - சிறுகதை


வீட்டின் வெளியே ஜிம்மி நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. அங்கே என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ள எழுந்து சென்றவளை 'லக்ஸு, நீ இரு நான் பாக்குறேன்' என்றவாறு எழுந்து வந்தான், கதவின் தாழ்ப்பாள்களை நீக்கி சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் தென்படவே இல்லை.  கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தான் சுப்பிரமணி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தோன்றவில்லை. உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான். நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை கைகளால் ஒற்றியபடி உள்ளே வந்தான். 'யாருங்க?' அவள் கண்களில் இன்னும் பயம் இருந்தது. 'யாருமில்ல, வீணா மனச போட்டு அலட்டிக்காதே. நாய் சும்மா தான் குரைச்சிருக்கு. நாளைக்கு வரும்போது அதுக்கு ஃபெடிக்ரீ வாங்கிட்டு வரணும். அதுக்குதான் குரைச்சிருக்கும்' என்றவாறு மெத்தையில் அமர்ந்தான். அவனைத் தொடர்ந்து அவளும் மெத்தை மீது ஏறி அவன் மார்பில் அணைந்தபடி அமர்ந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவளை ஆதரவாய் அணைத்தபடி, 'கவலைப்படாத லக்ஸு, யாரும் வரமாட்டாங்க. நமக்கு காசியண்ணன், ரேவதியக்கா துணை இருக்கிற வரைக்கும் நம்மை யாரும் ஒண்ணும் பண்ணிட முடியாது.' என்று அவள் தலையை ஆதரவாய் வருடினான். அவள் சற்றே கண்ணயர்ந்தாள். அவளை அருகே கிடத்திவிட்டு, டார்ச்சை எடுத்துக்கொண்டு கொல்லைப் புறமாக சென்றான்.

அந்த சுற்று வட்டாரத்தில் அரைக் கிலோமீட்டர் தூரத்திற்கு வீடுகளோ
வேறு எதுவும் கடைகளோ கிடையாது. ஊரை விட்டு தப்பி ஓடி வரும்
போது கையில் எந்த வேலையும் இல்லை அவனுக்கு. நண்பர் ஒருவர்
இரக்கப்பட்டு இவர்கள் தங்க பொட்டல் காட்டுக்குள் இருக்கும் இந்த
வீட்டை கொடுத்தார். தான் வேலைபார்க்கும் மில்லில் அவனுக்கும் ஒரு
வேலை வாங்கிக் கொடுத்தார். அந்த வீட்டிலிருந்து காய்கறி, பால் என்று
எது வாங்க வேண்டுமென்றாலும் அவனிடம் இருந்த ஒரு ஓட்டை
சைக்கிளை வைத்து மேட்டில் மிதித்துச் சென்று தான் வாங்கி வர
வேண்டும்.அவன் வேலைக்குச் செல்லும் நாட்களில் லக்ஷ்மி கதவை
நன்றாகத் தாழிட்டுக் கொண்டு தனியாகத் தான் இருப்பாள். மூன்று முறை
தட்டிய பிறகே கதவைத் திறக்க வேண்டும் என்பது அவளுக்கு அவன்
இட்ட உத்தரவு. தனிமையில் இருக்கும் தன் மனைவியின்
பாதுகாப்பிற்காய் ஒரு வாரம் முன்பு தான் ஒரு நாயை எங்கிருந்தோ
பிடித்துக் கொண்டு வந்து கட்டியிருந்தான்.  எல்லாம் நன்றாகத் தான்
சென்று கொண்டிருந்தது நேற்று வரை. நேற்றிரவும் இதே போல குரைப்புச்
சத்தம் கேட்டு விழித்த விஷயம் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த
லக்ஷ்மிக்குத் தெரியாது. அவளுக்குத் தெரிந்தால் இன்னும் பயந்து
விடுவாள். கொல்லைக் கதவை சாத்திவிட்டு படுக்கையறை வந்து 
கட்டிலில் அவள் அருகே படுத்துக் கொண்டான். ஆனால் நடு இரவு  தாண்டியும் உறக்கம் வராமல் விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆறு மாதத்திற்கு முன்பு ஊர்த் திருவிழாவில் அவளைப் பார்த்தபோது
அவளுடைய சாதியோ, இத்தனை பிரச்சனைகள் வரும் என்றோ
அவன் கனவிலும் சிந்தித்திருக்கவில்லை. அவன் வாலிபத்திற்கே உரிய
தூண்டுதலால், திருவிழாவிற்குப் பிறகு அவளை அடிக்கடி பார்த்தவன்,
இவள்தான் தன் துணை, வாழ்ந்தால் இவளோடு தான் வாழ்வது என்ற
முடிவையும் எடுத்து விட்டான். அவளுக்கும் இவனைப் பிடித்தது தான்
விதி செய்த விளையாட்டு. இருவரும் யாரும் அறியாமல் ஊர்
எல்லையில் இருக்கும் அய்யனார் கோவிலின் பின்புறம் சந்தித்துக் காதல்
வளர்த்தார்கள். அவளுக்கு உள்ளூர சிறிது பயம் இருந்தாலும் அவன் அவளிடம் கூறிய, காசியண்ணன்-ரேவதியக்கா கதையை அவள் இதற்கு முன்னர் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஆனாலும் அதை அவன் வாயால் அடிக்கடி சொல்லச் சொல்லி கேட்டு தன் மனதை திடப்படுத்திக் கொள்வாள். அவர்கள் ஊரைவிட்டு ஓட முடிவெடுத்த நாளுக்கு முந்தைய நாளும் அவன் மடியில் சாய்ந்தவாறு 'சுப்பு, ஏதாவது பிரச்சனைனா, நிஜமாவே காசியண்ணனும், ரேவதியக்காவும் நம்மள காப்பாத்துவாங்களா?' அவன் அவளை நோக்கி புன்னகைத்துவிட்டு 'எத்தனை முறை சொல்லியிருக்கேன் லக்ஸு, இன்னும் சந்தேகமா? நல்லா கேட்டுக்கோ.'

தன் தொண்டையை செருமிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தான். 'இந்த
ஊர்லையே மொதோ மொதோ டவுனுக்கு காலேஜ் படிக்க  போனது,
ரெண்டே பேர், ஒருத்தர் நம்ம காசியண்ணன், இன்னொருத்தர் ரேவதியக்கா.
இவங்க ஒரே காலேஜ்ல தான் படிச்சாங்கன்னாலும் இவங்களுக்குள்ள
காதல் வந்தது என்னவோ காலேஜ் விட்டு ஊருக்கு ஒண்ணா திரும்ப
நடந்து வரும்போது தான். ஒருத்தர ஒருத்தர் மனசார விரும்பினாங்க.
காசியண்ணன் வேற ஜாதி, ரேவதியக்கா வேற ஜாதி. நம்ம ஊர்ப்
பயலுவலுக்கு தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா? அதனால அவங்க
யாருக்கும் தெரியாம இதே அய்யனார் கோவில் பின்னாடி தான்
சந்திச்சுப்பாங்க.' என்று அவன் கூறவும் 'நம்மள மாதிரி' என்று கூறி
குறும்பாகச் சிரித்தாள் லக்ஷ்மி.

'ஆமாம், நம்மள மாதிரியே. ஒரு நா ரேவதியக்காவுக்கு உன்ன மாதிரியே
திடீர்னு பயம் வந்திடுச்சு. 'காசி நம்மள ஊர்ல ஏத்துக்குவாங்களா?, எனக்கு
பயமா இருக்கு.' என்று அழ ஆரம்பித்திருக்கிறாள். ரேவதியக்காவை
சமாதானப் படுத்திய காசியண்ணன் ஒரு முடிவேடுத்தாரு. அதன்படி
அடுத்த நாள் காலையில ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டினாரு. 'நானும்
ரேவதியும் மனசாரக் காதலிக்கிறோம். ரெண்டு பேரும் கல்யாணம்
செய்துக்க ஆசைப்படுறோம். எங்களால ஓடிப் போயிருக்க முடியும். ஆனா
இந்த ஊரப் பத்தியும் சாதி வெறி பத்தியும் வெளிய தப்பா பேசிக்கிறாங்க.
அந்த களங்கத்தை எங்க கல்யாணம் துடைக்கட்டும். நம்ம கிராமம் சாதிய
ஒழிச்ச கிராமங்கள்ல முன்னோடியா இருக்கட்டும்' னு வீராப்பா பேசினார்.

அவர் காதல்ன்ற வார்த்தைய சொன்னதுமே கூட்டத்துல சலசலப்பு
ஆரம்பிச்சிடுச்சு. 'டவுனுக்கு படிக்க அனுப்பினது தப்பா போச்சு' என்று
சிலரும் 'சாதி கெட்டு பொண்ணத் தேடுறவன பேச விடாதீங்க,
வெட்டிப் போடுங்க' என்று காட்டமான குரல்களும் வந்தன. அத்தனை
சப்தங்களையும் ஒரே கையசைப்பில் நிசப்தமாக்கினார் ஊர் தலைவர்.
'அந்தப் பய சொல்றதுல என்னய்யா தப்பிருக்கு? இன்னும் எத்தன
நாளைக்கு தான் சாதிய புடிச்சு தொங்கிகிட்டு இருப்பீங்க, நாளைக்கு
அய்யனார் கோவில்ல வச்சு ரெண்டு பேருக்கும் கல்யாணம்' என்று
கூறிவிட்டு புறப்பட்டார். கூட்டத்தில் சலசலப்பு இருந்த போதும்
தலைவரே கூறிவிட்டபடியால் அமைதியாக கலைந்து போனார்கள்.
காசியண்ணனும் ரேவதியக்காவும் சந்தோஷத்தை கண்களாலேயே
பரிமாறிக் கொண்டனர், மறுநாள் நடக்க இருந்த விபரீதம் தெரியாம
ரெண்டு பேரும் ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தாங்க. மறுநாள் காலை
காசியண்ணன் குளிச்சு, ரேவதியக்காவுக்கு புடிச்ச அந்த
பச்சைக் கலர் கோடு போட்ட சட்டை போட்டுக்கிட்டு அய்யனார் கோவில்
நோக்கி கிளம்பினாரு. அவர் அங்கே போய் சேர்றதுக்கு முன்னேயே
அங்கே கூட்டம் நெறைஞ்சிருந்தது. காசியண்ணன் கூட்டத்தை
விலக்கிவிட்டு அய்யனார் சிலைகிட்ட போனாரு. அவருக்கு அப்படியே
தூக்கிவாரி போட்டுச்சு.

அங்கே ரேவதியக்காவ ஒரு மரக்கம்பு நட்டு வச்சு அதில் கட்டி
வச்சிருந்தாங்க. அவங்க கன்னத்துல, கழுத்துலன்னு நிறைய
இடத்துல இருந்து ரத்தம் வந்துட்டு இருந்துச்சு. காசியண்ணன பார்த்ததும்
அங்கிருந்த ஊர் தலைவர் 'இதோ தொரை வந்துட்டாரு, அவனையும்
புடிச்சு கட்டுங்கடா' ன்னு கத்தினாரு. அவரையும் ரெண்டு பேர் புடிச்சு அதே
மாதிரி கம்புல கட்டி வச்சாங்க. ஊர் தலைவர் ஒரு கழியால அவரை
சரமாரியா அடிச்சாரு. அவரை மோசமா திட்டுனாரு. இப்படி நம்பி
ஏமாந்துட்டமேன்னு வேதனை காசியண்ணன் கண்ணுல தெரிஞ்சது. 'உன்ன
மாதிரி நாய்க இனிமே காதல் கத்திரிக்கான்னு வார்த்தைய சொல்லவே
பயப்படணும்.' என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே வெட்டப்பட்ட
ஒரு மரத்தின் அடிப்பாகத்தை  ரேவதியக்கா முன்னாடி வச்சாங்க.
காசியண்ணன் கதற ஆரம்பிச்சாரு. வேண்டாம் வேண்டாம்னு சொல்லிப்
பார்த்தாரு. ஆனா அவர் சொல்லக் கேக்க அப்போ அங்க யாருமே இல்ல.

'வெட்கங்கெட்டு போன சிறுக்கி இவளுக்கு தான் மொதல்ல' என்று
 கூறியவாறு ஆட்டை வெட்டும் ஒரு கத்தியை ஓங்கினாரு. காசியண்ணன்
கண்களை இறுக மூடிக் கொண்டார், பின்பக்கமாக கட்டப்பட்ட அவர்
கைகள் அந்த மரத்தைப் பிடுங்க முயற்சித்து தோற்றது. ஒரு பெரிய
அலறலுக்குப் பின் அவர் முகத்தில் ஏதோ ஈரம் படிந்தது. கண்விழித்துப்
பார்த்த போது பிசுபிசுவென ரத்தம் எங்கும் சிதறிக் கிடந்தது. சடலமாய்க்
கிடக்கும் ரேவதியை பார்க்கப் பிடிக்காமல் மேல்நோக்கி கதறினார்.
'இதோ பாருங்கடா, இளவட்டங்களா, சாதிய மறந்த ஒவ்வொருத்தனுக்கும்
இதுதான் தண்டனை.' என்று கர்ஜித்தபடியே தன்னை நோக்கி வந்த
ஊர் தலைவரை பார்த்து காசியண்ணன் 'எங்களைக் கொன்னுட்டதால
நீங்க ஜெயிச்சுட்டதா அர்த்தம் கெடையாது. நான் ஆவியா வந்து சாதி
பேர சொல்லி உயிரை எடுக்கிற எல்லோரையும் பழி வாங்குவேன்.' ன்னு
சொல்லிட்டு இருக்கும்போதே அவர் கழுத்தில் கத்தி விழுந்தது.






முகத்தை துடைத்துவிட்டு கத்தியை அருகிலிருந்தவனிடம்
கொடுத்துவிட்டு கையை கழுவிக் கொண்டிருந்தார் ஊர்த் தலைவர்.
'இந்த பொணங்கள காட்டுக்குள்ள தூக்கி வீசிடுங்க. நாயோ நரியோ
சாப்பிடட்டும்' ன்னு சொல்லிட்டு கையை தன் மேல் துண்டால் துடைத்துக்
கொண்டிருந்தார். காசியண்ணன் மற்றும் ரேவதியக்காவின் கைக் கட்டுகள்
அவிழ்க்கப்பட்டன.  தலை துண்டாய் கிடக்கும் முண்டங்களை பார்க்கப்
பிடிக்காமல் கூட்டத்திலிருந்த பெண்கள் பாதிப் பேர் நகர்ந்து சென்றனர்.
கட்டவிழ்ந்ததும் இரு சடலங்களும் தரையில் விழுந்தன. அப்போது
அங்கிருந்த ஒருவன் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தான். அவன் எதற்காக
அப்படி ஓடுகிறான் என்று புரியாமல் எல்லோரும் அவன் காட்டிய
திசையில் பார்க்க அங்கே காசியண்ணனின் தலையில்லாத முண்டம்
எழுந்து நின்றது. வெட்டுக்கத்தி வைத்திருந்தவனை நோக்கி நடந்தது. அவன் அதைக் கீழே போட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான். கூட்டம் சிதறி ஓட ஆரம்பித்தது.அதிர்ச்சியில் உறைந்து நின்ற ஊர்த் தலைவரை நோக்கி நகர்ந்து வந்தது. காசியண்ணனின் முண்டம். கீழே கிடந்த வெட்டுக்கத்தியை எடுத்து ஒரே வெட்டு. பின்னர் ரேவதியக்காவின் உடலை தூக்கிகிட்டு  இந்தக் காட்டுக்குள்ள போயி மறைஞ்சுட்டாரு. இதான் லக்ஸு அந்தக் கத' என்று சொல்லிமுடித்த போது லக்ஷ்மிக்கு வியர்த்திருந்தது.

'சுப்பு, எனக்கென்னவோ இன்னும், கடைசில முண்டம் உயிரோட வந்து
ஊர்த்தலைவர வெட்டுச்சுன்னு சொல்றத நம்ப முடியல.' என்றவளை
கோபமாக முறைத்துவிட்டு 'இந்தக் கதைய நா மட்டுமா சொல்லுறேன்.
ஊரே சொல்லுது. அதெப்படி?' 'ஆனா பஞ்சாயத்து முடிஞ்சு எல்லோரும்
போயிட்டதாவும், இந்தப் பிணங்களை காட்டில் போட்டுட்டு போனதாகவும்
ரெண்டு நாள் கழிச்சு ஊர்த்தலைவர் இதே இடத்துல வெட்டுப்பட்டு
கிடந்ததாவும் ஒரு கதை சுத்துதே' என்றவளை செல்லமாக கன்னத்தைக்
கிள்ளிவிட்டு 'புருஷன் சொல்ற கதைய தான் பொண்டாட்டி நம்பணும்.'
'சரி புருஷா' என்றவளை முத்தமிட்டு, 'லக்ஸு, நாளைக்கு யாருக்கும்
தெரியாம காலையில நாலு மணிக்கு இங்கே வந்திடு' என்று கூறிவிட்டு
இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றார்கள்.

மறுநாள் காலை மூன்று  மணிக்கே வந்து காத்திருந்தான் சுப்பிரமணி.
கடிகாரத்தில் ஐந்து மணி ஆகியும் லக்ஷ்மியைக் காணவில்லை என்றதும்
அவனுக்கு பதட்டம் அதிகமானது. சற்று நேரத்தில் யாரோ ஓடி வரும்
சப்தம் கேட்டு அய்யனார் சிலைக்குப் பின்னால் நின்று கொண்டு எட்டிப்
பார்த்தான். யாரோ துரத்தி வருவது போல் வேகமாக ஓடி வந்து
கொண்டிருந்தாள் லக்ஷ்மி. லக்ஷ்மியின் முகம் பார்த்ததும் வெளியே
வந்தான் சுப்பிரமணி. அவள் பின்னால் இரண்டு பேர் துரத்திக் கொண்டு
வந்தனர். லக்ஷ்மி சுப்பிரமணியைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டு
அழுதாள். கையில் அரிவாளுடன் இருவரும் அவர்களை நெருங்கினர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் காற்றடித்தது. அய்யனாரின்
கையில் இருந்த நீளமான வெட்டுக்கத்தி காதல் ஜோடிகளை வெட்ட வந்த இருவரின் தலையையும் பதம் பார்த்தது. சற்றே அதிர்ந்த போதும் இருவரும் ஆசுவாசமடைந்தனர். லக்ஷ்மியின் முகத்தில் இப்போது காசியண்ணன் ரேவதியின் கதை உண்மைதான் என்ற நம்பிக்கையின் தெளிவு தெரிந்தது.

மீண்டும் நாய் குரைக்கும் சப்தம் கேட்டு கண்விழித்த சுப்பிரமணி விடிந்து
விட்டதை உணர்ந்தான். தன் மார்பை சுற்றியிருந்த லக்ஷ்மியின் கைகளை
விடுவித்துக் கொண்டு எழுந்தான். அப்போது லக்ஷ்மி திடீரென அழும்
சப்தம் கேட்டு திரும்பினான். 'என்ன லக்ஸு, என்ன ஆச்சு?'
என்றான் பதறியபடி. 'என்னய்யா பொழப்பு இது, தினமும் நாய்
குரைக்கரதுக்கு எல்லாம் பயந்து பயந்து வாழறோம். இதுக்கு இந்த கருமம்
காதலை பண்ணாமலே இருந்து தொலைச்சிருக்கலாம்.' 'என்ன லக்ஸு
இப்படி சொல்றே, நாம இப்போ சந்தோஷமா தானே இருக்கோம்'
என்றவனை நிமிர்ந்து பார்த்து. 'நெசமா சொல்லுய்யா, சந்தோஷமா தான்
இருக்கோமா, இப்படி சொந்தம் பந்தம் யாரும் இல்லாம இப்படி ஒரு
இடத்துல வந்து வாழ்றது சந்தோசமாவா இருக்கு?' 'லக்ஸு உன்
பிரச்சனை அதில்லை. வேற ஏதோ இருக்கு. என்னன்னு சொல்லு'
என்றவனை பார்த்த லக்ஷ்மி தன் மனதை அங்குலம் அங்குலமாக புரிந்து
கொண்ட கணவனை பெருமையோடு பார்த்தாள். பின் மீண்டும் அழத்
துவங்கினாள். 'என்னன்னு சொல்லிட்டாவது அழு லக்ஸு' என்றான்
பொறுமை இழந்தவனாய்.

'இல்ல சுப்பு, காசியண்ணன் ரேவதியக்கா கதை சொல்றவங்க இதையும்
சொல்றாங்களே' என்று நிறுத்தினாள். அவள் எதை சொல்லப் போகிறாள்
என்பதை முன்பே உணர்ந்திருந்தாலும் 'எதை?' என்று கேட்டான். 'இல்ல,
அவங்க ஊர் எல்லையில மட்டும் தான் காவல் காப்பாங்க, ஊரைத் தாண்டி
வரமாட்டாங்கன்னும் சொல்றாங்களே' அவனும் அந்தக் கதைகளை
கேட்டதால் தான் ஒவ்வொரு இரவும் உள்ளூர பயந்து நடுங்கினான்.
இருந்த போதும் அவளை ஆறுதல் படுத்த 'லூஸு, அவங்க கடவுள் மாதிரி
எல்லா எடத்திலயும் இருப்பாங்க.' என்று கூறிக் கொண்டிருக்கும் போதே
கதவு தட்டப் படும் சப்தம் கேட்டது. இருவருக்கும் பயம், கைகளில் ஒரு
தடியை பிடித்தபடியே கதவைத் திறந்தான். அங்கே ஒரு வயதான
பெண்மணி நின்றிருந்தார். தான் வழி தவறி வந்துவிட்டதாகவும்
உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், ஓரிரு நாட்கள் அங்கே
தங்கியிருந்துவிட்டு செல்லலாமா என்று அனுமதியும் கேட்டார்.
சுப்பிரமணி முதலில் யோசித்த போதும் தான் வெளியே சென்றிருக்கும்
போது லக்ஷ்மிக்கு ஆதரவாக இருக்க ஒருத்தர் இருந்தால் நல்லது என்று
எண்ணி அதற்கு சம்மதித்தான். பின்னர் லக்ஷ்மியிடம் கூறிவிட்டு பால்
மற்றும் காய்கறிகள் வாங்க சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

காலை வெயில் முகத்திற்கு நேராக அடிக்க மேட்டில் சைக்கிளை
சிரமப்பட்டு மிதித்துக் கொண்டிருந்தான். அவன் மனதுக்குள் திரும்பத்
திரும்ப லக்ஷ்மி கேட்ட கேள்வி தான் நினைவுக்கு வந்தது. 'யோவ்,
காசியண்ணன், ரேவதியக்காவ கொன்னது மாதிரி நம்மளையும்
கொன்னுடுவாங்களா? என்ற கேள்வி அவன் மனதில் மீண்டும் மீண்டும்
எதிரொலித்தது. அவன் லக்ஷ்மிக்கு சொன்ன பதிலையே தனக்கும்
சொல்லிக் கொண்டான். 'ஊர விட்டு ஓடி வந்து நாலு மாசம் ஆச்சு.
இனியுமா நம்மள நெனச்சுகிட்டு இருப்பாங்க' என்று ஆறுதல் சொல்லிக்
கொண்ட போதும் சாதியின் கொடூரத்தை அவன் உணர்ந்திருந்ததால்
அவன் மனம் ஆறுதலடைய மறுத்தது. சந்தையை அடைந்து அங்கே
காய்கறிகளை எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென மனதிற்குள் எதோ
மின்னல் வெட்டியது என்னவோ தவறு நிகழ்ந்துவிட்டதாய் உணர்ந்தான்.
காலையில் வந்த அந்த வயதான பெண்மணியை எங்கோ பார்த்தது
போலத் தோன்றியது.

காய்கறிப் பையை கீழே போட்டுவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு
வேகமாக அழுத்தினான். வரும்போது இறக்கம் என்பதால் சைக்கிள்
வேகமாகப் பறந்தது. செம்மண் சாலையில் புழுதி பறக்க ஒட்டி தன் வீடு
வந்து சேர்ந்தான். முன்பக்கக் கதவு திறந்திருந்தது. 'லக்ஸு லக்ஸு' என்று
குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே சென்றான். அந்த சிறிய ஹாலைக்
கடந்து அவன் படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தான். அங்கேயும் அவளைக்
காணவில்லை. அருகே இருந்த சமையலறையில் நுழைய, நொறுங்கிப்
போனான். அங்கே கழுத்தில் இரத்தம் வழிய லக்ஷ்மி கீழே கிடந்தாள்.
அவள் நாடித்துடிப்பை பார்த்தான். சப்தமின்றி அடங்கியிருந்தது.
சுப்பிரமணிக்கு தலை சுற்றியது. அந்தப் பெண்மணியை வீட்டில் சேர்த்தது
எவ்வளவு பெரிய தவறு என தன்னைத்தானே நொந்து கொண்டான்.
தலையில் இரு கைகளாலும் அடித்துக் கொண்டு புலம்பினான்.
கொல்லைப் புறத்தில் யாரோ முனகும் சப்தம் கேட்கவே கோபத்துடன்
கையில் கிடைத்த கத்தியை எடுத்துக் கொண்டு அங்கே சென்றான்.  
அங்கே அந்தப் பெண்மணி கழுத்தில் ரத்தம் வழிய விழுந்து துடித்துக்
கொண்டிருந்தார். சுப்பிரமணி தனக்கிருந்த கோபத்தையெல்லாம் அந்த
பெண்மணியின் உடலை பலமுறை குத்தி ஆற்றிக் கொண்டான், கத்தியை
தூர எறிந்தான். அந்தப் பெண்மணி உயிர் பிரியும் முன் 'பின்னாடி  
பின்னாடி' என்று கூறிக் கொண்டே தலை சாய்ந்தார். அவர் காட்டிய
திசையில் திரும்பிய சுப்பிரமணியை நோக்கி கண்களில் சாதி வெறியுடன்
பாய்ந்து வந்துகொண்டிருந்தது ஜிம்மி.  

                                               ****************

21 comments:

  1. ஜிம்மியின் கண்கள்ல சாதி வெறி தெரிஞ்சிடுச்சா..? அவ்வ்வ்வ். ஆனாலும் சுவாரஸ்யமான கதை சொல்லல், கரன்ட் டாபிக்கை அழகா ஹேண்டில் பண்ணது எல்லாம் ரசனை.

    ReplyDelete
    Replies
    1. அதை லக்ஷ்மி வீட்டு நாய் என்று தான் எழுதியிருந்தேன். அப்புறம் எனக்கே அது பிடிக்காம மாத்திட்டேன்,, :)

      Delete
  2. ஒரு குறும்படமே எடுக்கலாம் ஆவி... அவ்வளவு நல்லாயிருக்கு...

    ReplyDelete
  3. // கருமம் காதலை பண்ணாமலே இருந்து தொலைச்சிருக்கலாம்.... //

    காதல் கருமம் தான் - இக்காலத்தில் ...

    ReplyDelete
  4. அருமை. நாய்க்குக் கூட சாதி!

    ReplyDelete
    Replies
    1. எஸ்.. அதுதான் நான் சொல்ல நினைத்தது.. :)

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஆவி! கதை அருமை! சொன்ன விதம் அதுவும் சமீபத்திய நிகழ்வின் தாக்கம் எல்லாம் கதையில் அப்படியே தெரிந்தது. இது போன்ற மனிதர்களுடன் இருந்து இருந்து அப்பிராணிகளான நாலுகால் செல்லங்களுக்கும் கூட சாதி வெறி வந்துவிட்டது என்று, சாதி கெறி அந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதை ஜிம்மியின் மூலம் சொல்லியிருக்கீங்க இல்லையா....ம்ம்ம் நீங்கள் சொல்ல வருவது தெரிகிறது...இருந்தாலும் ...சரி ஒண்ணும் இல்ல நம்ம் வீட்டுச் செல்லங்கள் நினைவுக்கு வந்துட்டாங்க அதான் ...

    கீதா

    ReplyDelete
  7. தற்போதையக் கொடுமை நினைவில் இருக்க முதலில் இருந்தே பக்..பக்..என்று இருந்தது. கடைசியில் நாய்க்கும் ஏற்றிவிட்டு விட்டனரே..
    மனிதர் மாறுவது கடினம், விலங்கையும் மாற்றிவிடும் அளவுக்கு சாதி வெறி ஊன்றியுள்ளது என்று சொல்லும் கதை..மனதைப் பிசைகிறது.
    வாழ்த்துகள் ஆவி.

    ReplyDelete
  8. ஜாதி.எத்தனையோ கேள்விகள். மனுஷன் பழிவாங்கவில்லை. நாய் செய்துவிட்டது. வினோதம். நேரத்துக்கேற்றகதை. வெட்டியவர்கள் எல்லோரும்
    இறந்து,வெட்டப்பட்டவர்களால் பழிவாங்கப் பட நீளும் மனம் மாட்சிமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா!

      Delete
  9. ஆரம்பித்திலிருந்து இறுதி வரை ........செம...இந்தக் காலத்துக்கு ஏற்ற கதை..

    ReplyDelete
  10. நாயிலே சாதி நாய்ன்னு கேள்விபட்டிருக்கேன் ,சாதிவெறி பிடித்த நாயை இப்போதான் ....:)

    ReplyDelete
  11. ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு நிஜச்சம்பவமே என பதட்டத்தினை தந்து முடிவில் நாய்க்குள்ளும் ஜாதிவெறி என கற்பனைதான் என புரிய வைத்த கதை.

    கொலையை செய்தவர்கள் யார்? அந்த மூதாட்டி தான் கொலையாளி எனில் அவர் எப்படி தாக்கப்பட்டார்? என்பது போனற கேள்விகள் வருகின்றது?

    ஜாதி விட்டு ஜாதி காதலும், திருமணம்மும் சாதலில் தான் முடியுமோ? ஜாதி தாண்டி ஜெயித்த காதல்களும் உண்டல்லவா?

    கதையின் காதலர்களின் பயத்தினை பதட்டத்தினை இயல்பானதாய் காட்டி இருப்பது சிற்ப்பு,வீட்டை,சமூகத்தை எதிர்த்து ஒன்றிணைவோர் இறுதிவரை பயத்திலேயே மடிவதும் ஒதுக்கி வைக்கப்படுவதும் வருத்தத்துக்குரியதே!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails