Saturday, September 27, 2014

ஆவி டாக்கீஸ் - ஜீவா


இன்ட்ரோ 
 
                              'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் அத்தனை அம்சங்களுடன் கிட்டத்தட்ட இந்தியாவின் தேசிய விளையாட்டாக மாறியுள்ள கிரிக்கெட்டில் நடக்கும் உள்-அரசியலை எந்த வித பயமுமின்றி பதிவு செய்ய முன்வந்த இயக்குனரின் நேர்மைக்கு ஒரு சல்யுட்..!


                          


கதை
                             காதலா கிரிக்கெட்டா என்ற நிலையிலும் கிரிக்கெட்டையே காதலிக்கும் நாயகன் எப்படி கிரிக்கெட்டில் வெற்றி பெற்று தன் வேற்று மத காதலியையும் வென்றான் என்பதைச் சொல்வதே இந்த ஜீவா!  இடையில் வரும் பாடல்கள் கொஞ்சம் போர் என்றாலும் நன்கு வடிவமைக்கப்பட்ட திரைக்கதை நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது.
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           விஷ்ணு விஷாலுக்கு பொருத்தமான வேடம்.. நிஜத்திலும் நல்ல கிரிக்கெட்டர் என்பதால் கிரிக்கெட் வீரருக்கான வேடம் இயல்பாய் பொருந்தியிருக்கிறது. காதல் காட்சிகளிலும் ஒக்கே. நண்பன் காதலிக்கும் பெண் தன்னிடம் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கேட்கும் காட்சியில் முகபாவங்களால் அசத்துகிறார். நல்ல கதைகளை தேர்ந்து நடித்தால் முன்னணி நட்சத்திரங்கள் வரிசையில் வரலாம். நஸ்ரியா விட்டுச் சென்ற இடத்தை 'நச்சென்று' பிடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. பதின்வயது, கல்லூரிக்காலம் என அருமையாக வித்தியாசம் காட்டியிருக்கிறார். 'அண்ணா'  என்று அழைத்துக்கொண்டிருந்த விஷ்ணுவை காதல் பூத்ததும் ஒரு முழு பாட்டில் ஒயின் கொண்டு வந்து கொடுக்கும் காட்சி அழகு.

                             சார்லி குணசித்திர நடிப்பில் மனதில் நிற்கிறார். 'சீனியர்' ப்ளேயராக சூரி குரலை உயர்த்தாமல் காமெடி செய்வதால் நமக்கும் பிடித்துப் போகிறது. கடைசி ப்ளேயராக வந்து பந்துகளை இவர் சிதறடிக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து டிரெஸ்ஸிங் ரூமில் ஒவ்வொரு பிளேயராக  இவரை வேடிக்கை பார்ப்பதும் நல்ல நகைச்சுவைக் காட்சிகள். லக்ஷ்மன் நல்ல நடிப்பு. கதாநாயகனுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். ஆனால் இவர் இறக்கையில் தோன்ற வேண்டிய பரிதாபம் மட்டும் ஏனோ மிஸ்ஸிங்!

                               

இசை- இயக்கம்
                              இமானின் இசையில் பாடல்கள் பிரமாதமாக இல்லாவிட்டாலும் பின்னணி இசை சுமாராக உள்ளது. சுசீந்திரனின் இயக்கம் மீண்டும் ஒருமுறை பேசப்படும். மதியின் ஒளிப்பதிவும், சந்தோஷின் வசனங்களும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.


                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                விஷ்ணு- ஸ்ரீதிவ்யா காதல் காட்சிகள் மற்றும் கிரிக்கெட் காட்சிகள். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் விளையாட்டை மையப்படுத்தி வந்த திரைப்படங்களின் வரிசையில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கும். நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.

                      


Aavee's Comments -  Ninety Not Out !

ஆவி டாக்கீஸ் - மெட்ராஸ்


இன்ட்ரோ 
 
                              பொதுவாக இயக்குனர்கள் தங்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி விடுவார்கள். இரண்டாம் படத்தில் திணறுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் ரஞ்சித் தன் இரண்டாம் முயற்சியை பொறுத்தவரை வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு குறும்படம் எடுக்கத் தகுதியான மெல்லிய கதையை வைத்துக்கொண்டு திரைக்கதை உத்திகளின் பலத்திலேயே படத்தை கடைசி வரை தொய்வில்லாமல் இழுத்ததற்காக நிச்சயம் பாராட்டலாம்.


                          

கதை
                             நண்பர்களாய் இருந்த இருவர் பிரிந்து தனித்தனியே அரசியல் கட்சிகளில் சேர்ந்து வடசென்னையை கூறு போட்டுக் கொள்ள, மூன்று தெருக்கள் இணையும் ஒரு முச்சந்தியில் இருக்கும் ஒரு சுவர் இருவருக்கும் இடையில் பிரச்சனையாக வருகிறது. அந்த சுவற்றை ஆக்ரமிக்க இரண்டு குடும்பத்தின் வாரிசுகளும் உடன் இருபுறமும் நிற்கும் பொதுமக்களும் வெட்டிக் கொண்டு சாகிறார்கள். கடைசியில் அந்த சுவர் யாருக்கு சொந்தமாகிறது என்பதே கதை..!

                             இதற்கிடையில் கார்த்தி- கலையரசன் நட்பு,  வடசென்னை மக்களின் அன்றாட வழக்கங்கள், விளையாட்டுகள், கார்த்தி-கேத்ரீன் காதல் என பயணிக்கிறது இந்த மெட்ராஸ். கேரம் போர்டு, கால்பந்து, குழாயடி சண்டைகள், வடசென்னையின் எதார்த்தங்களை அழகாக பதிவு செய்ய நினைத்து அதில் ஜெயித்தும் இருக்கிறார்கள். (கார்த்தியின் உச்சரிப்பை தவிர)
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           கார்த்தி, இதற்கு முன் வந்த படங்களைக் காட்டிலும் சிரத்தையுடன் நடித்திருப்பது தெரிகிறது. இருப்பினும் காதல் காட்சிகளில் சொதப்பல் தொடர்கிறார். இவர் பேசும் வடசென்னை ஸ்லாங் ஒட்டாமல் இருப்பது அந்த ஸ்லாங் தெரியாதவர்களுக்கும் எளிதில் தெரிந்து விடுவது பரிதாபம். ஆக்க்ஷன் காட்சிகள் இயல்பாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. கார்த்தியை பொருத்தவரை இன்னும் சில வாய்ப்புகள் கொடுக்கலாம். அன்புவாக வரும் கலையரசன் படத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். கார்த்தி கேத்ரின் ரோமேன்ஸை விட கலையரசன்-ரித்விகா (பரதேசி) ஜோடியின் காட்சிகள் தத்ரூபமாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.

                             கேத்ரீன் தெரேசா ஆந்திர இறக்குமதி. வடசென்னை பெண்ணாக வரும் இவர் "உலகப் பேரழகி டயானாவுக்கு மோனலிசா கெட்டப்" போட்டது போல் இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் படத்திற்கு வேகத்தடை. கொஞ்சமும் ரசிக்க முடியாத காதல் காட்சிகள். கதாநாயகியின் குணாதிசயங்கள் படத்திற்கு தேவைப்படாத போது அதற்காக செலவிட்ட பத்து நிமிடங்கள் விரயமாய் போகிறது. என் உயிர்த் தோழன் ரமா கார்த்தியின் அம்மாவாக வருகிறார். மாரி, மற்ற நண்பர்கள்,  எல்லோரும் வடசென்னை ஸ்லாங்கில் பேசி நடித்த போதும் ஜானி கேரக்டரில் வருபவர் மனதில் நிற்கிறார்.


                               

இசை- இயக்கம்
                              சந்தோஷ் நாராயணன் அசத்தல் பின்னணி இசை. படம் முழுக்க வியாபித்திருப்பது சந்தோஷின் கைவண்ணமே! பாடல்கள் பெரிதாய் பேசப்படாவிட்டாலும் 'நான்-நீ' பாடல் நல்ல மெல்லிசை. 'கானா பாலா' வின் ஒப்பாரி பாடலும் அருமை. ரஞ்சித்தின் இயக்கத்தில் குறை இல்லையென்றாலும் ஒற்றை சுவர் மட்டுமே எல்லா கதாபாத்திரங்களும் பேசும் ஒரே பொருளாய் அமைந்து விடுவதால் ஒரு கட்டத்தில் சலிப்பை கொடுக்கிறது. 'புதுப்பேட்டை' போன்றதொரு படமாக வந்திருக்க வேண்டியது, இரண்டாம் பாதி கொஞ்சம் வலுவிழந்து போனதால் மெட்ராஸ் கரையேறுவது கொஞ்சம் சந்தேகமே..!



                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                டெக்னிக்கல் மிரட்டல்களோ, காமெடியோ இல்லாத இந்தப் படத்தில் நாயகியும் கவர்ந்திழுக்காததால், இசைக்காகவும் இயக்கத்திற்காகவும் வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம்..!

                        


Aavee's Comments -  It's Just a Wall!

Thursday, September 18, 2014

ஆவி டாக்கீஸ் - கத்தி (Music Review)

                        'இளம் புயல்' அனிருத் இசையில், விஜய் சமந்தா நடிப்பில் முருகதாஸ்  இயக்கத்தில் வரவிருக்கும் படம் கத்தி. இதன் பாடல்கள் எப்படியிருக்குன்னு பார்ப்போமா?



1. பக்கம் வந்து - ஹிப்ஹாப் தமிழாவின் அதிரடி ராப் இசையில் நம்மை மூச்சு வாங்க வைக்கும் விறுவிறு பாடல். நிறைய வெஸ்டர்ன், கொஞ்சம் Folk  கலந்து இசைக்கும் பாடல். இளையதளபதியின் நடன அசைவுகளுக்கு அரங்கத்தில் விசில் பறக்கப் போவது உறுதி.

2. பாலம் - ஷங்கர் மகாதேவன், ஸ்வேதா மோகன் பாடியிருக்கும் டூயட் பாடல்.  மெல்லிய இசையாக ஆரம்பித்து வேகமான பீட்டில் முடிகிறது பாடல்.

3. கத்தி தீம் - டொட்டடொட்ட  டொட்டடோய்ங் டொட்டடொட்ட  டொட்டடோய்ங்

4. விஜய் சுனிதி சௌஹான், அனிருத் பாடியிருக்கும் பாடல் "செல்பி புள்ள" ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ஸ்டைலாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது.  கூகிள் கூகிள் போலல்லாமல் இது சி சென்டர் ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் அழகாய் வந்திருக்கிறது.  சாதாரண டீ கிளாசில் ஊற்றப்பட்ட ஹை-பை காக்டெயில்..!

5. நீ யாரோ - நீண்ட இடைவெளிக்கு பின் யேசுதாசின் மென் குரலில் ஒரு சோகப் பாடல். "விடுகதையா இந்த வாழ்க்கை' சாயலில் அமைந்திருக்கும் பாடல்.

6. "ஆத்தி" பாடல் இசை ஆதிக்கம் நிறைந்த பாடல். விஷால் தத்லானி, அனிருத் பாடியிருக்கும் பாடல். அழகாக ஆரம்பிக்கும் பாடல் கடைசியில் நேஷனல் ஏந்தம் மறந்த ஸ்கூல் பையன் வேகவேகமாக பாடி முடிப்பது போல பாடியிருப்பது "சிறப்பு".

                       மொத்தத்தில் கத்தி 'செல்பி' புள்ளையை நம்பி களமிறங்கியிருக்கும் ஆல்பம்! ஷார்ப் கம்மி!

Tuesday, September 16, 2014

கடோத்கஜா மெஸ் - பர்மா கார்னர்

மு.கு: பின் வரும் பதிவு பொது வெளியில் சுகாதாரமற்ற சூழலில் உருவாக்கப்படும் உணவு வகைகள். சுத்தம் சோறு போடும்,  சுகாதாரம் கொழம்பு ஊத்தும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இதை படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ஆதி மனிதன் ஹைஜீனிக் தெரிந்தா வாழ்ந்தான், எங்க கிடைச்சா என்ன, சுவையான உணவு தான் நமக்கு முக்கியம்ன்னு நினைக்கிறவங்க தொடரலாம்.



இடம்:  சென்னை, பர்மா பஜார், ஸ்டேட் பாங்க் பின்புறம்.


         "சாப்பாட்டு ராமன்" புகழ் ரூபக் போன் செய்து பர்மா உணவை சுவைக்கலாம் என்று அழைத்ததும் ஒரு நிமிடம் 'இஞ்சி' இடுப்பழகி இலியானா கண் முன் தோன்றி "அத்தோ, மொய்ஞோ, பேஜோ என்று "நண்பன்" திரைப்படத்தில் சொல்லும் டயலாக் தான் நினைவுக்கு வந்தது. படை திரட்டி சென்று தாக்குதல் நடத்தலாம் என்றெண்ணி நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தால் வாத்தியாரைத் தவிர எல்லோரும் "நான் ரொம்ப பிஸி" என ஓவர் சீனு போட, ஐ மீன் சீன் போட மூவர் குழு களத்தில் இறங்கியது. ஒரு தள்ளுவண்டியில் வைத்து சமைத்து தரப்படும் இந்த உணவுகளில் சுவை கேரண்டி.. சமையல் செய்ய ஒருவர், எடுத்துக் கொடுக்க இரண்டு பேர் என மூன்று பேர் வேலை செய்கிறார்கள். சரி உணவுக்கு வருவோம்.

கடை ஓனர் ஸ்டைலாக போஸ் கொடுத்த போது ..!


அத்தோ ( A Thoke) 

                      ஆங்கிலத்தில் சாலட் (Salad ) என்று சொல்லப்படும் வகையை சேர்ந்தது இந்த அத்தோ.   பல விதமான அத்தோக்கள் உள்ள போதிலும் நம்ம ஊர் டேஸ்டுக்கு ஏற்ப இவர்கள் நமக்கு அத்தோ என்ற பெயரில் செய்து தருவது சமோசா அத்தோ. கொஞ்சம் ரைஸ் நூடில்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், புதினா, மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து தயார் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட பேல்பூரியில் நூடுல்ஸ் சேர்த்தது போல சுவைக்கிறது.


ரைஸ் நூடுல்ஸ் 



அத்தோ- சுவைக்க தயார்  நிலையில் 


அத்தோ பிரை 


                     முன்பே தயாரிக்கப்பட்ட அத்தோவுடன் முட்டையை உடைத்து ஊற்றி வறுப்பது அத்தோ ப்ரை என்று அழைக்கின்றனர். அத்தோவை ஒப்பிடும் பொழுது இதன் சுவை கொஞ்சம் குறைவுதான். 

அத்தோ பிரை 

மொய்ஞா (mohinga )

                     மொய்ஞா சூப் வகையை சேர்ந்தது. தாய்லாந்தின் டோபு (TOFU ) வகை உணவை ஒத்த சுவை இதற்கு. வழக்கமாக மீன் சூப்பில் ரைஸ் நூடுல்ஸை இட்டு கொதிக்க வைப்பது வழக்கம். நம்ம ஊருக்காக இதை மீன் சூப் அல்லாமல் வெஜிடபிள் சூப்பில் செய்கிறார்கள். ஒரு முழு Bowl மொய்ஞா குடித்து முடிக்கையில் நம் வயிறு நிறைந்திருக்கும்.


அடுப்பில் தயாராகும் மொய்ஞா


மொய்ஞாவை ஒரு கை பார்க்கும் கடோத்கஜனும், சாப்பாட்டு ராமனும் 

எக் ப்ரை 

                       கடைசி ஐட்டமாக நாங்கள் சுவைத்தது எக் பிரை..! வேகவைத்த முட்டைக்குள் மசாலாவை அடைத்துக் கொடுக்கின்றனர். அதை ஒரே வாயில் உள்ளே செலுத்தும் போது ஒரு பரவச நிலையை உணர முடிந்தது.



படமெடுக்க கேமிரா எடுப்பதற்குள் மூன்று காலி 




எக் ப்ரை  - முட்டை மசால் 




                    தெருவோரக் கடைகளின் பாசிடிவ் விஷயமே நியாயமான விலை தான். அத்தோ நாற்பது ரூபாயும், அத்தோ ப்ரை மற்றும் மொய்ஞா ஐம்பதும் விலை வைத்திருக்கிறார்கள். முட்டை மசால் ஒன்று பன்னிரண்டு ரூபாய்! அடிக்கடி சாப்பிட உகந்ததில்லை என்றாலும் பட்ஜெட்டில் நண்பர்களுடன் சாப்பிட ஏற்ற கடை..! மொத்தத்தில் கடோத்கஜன் ஹேப்பி..!


Friday, September 12, 2014

ஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன்


இன்ட்ரோ 
 
                              காதல், நட்புன்னு பொங்கிகிட்டு இருந்த நம்ம தமிழ் சினிமா பானையில ரொம்ப நாளைக்கு அப்புறமா பிரதர் சென்டிமென்ட்ங்கிற கிச்சடி கிண்டியிருக்காங்க. கொஞ்சம் ஏமாந்திருந்தாலும் உப்புமா ஆகியிருக்க வேண்டியது, பொறுப்பா கிண்டியதற்காகவே இயக்குனர் இராஜமோகனுக்கும் அவருக்கு பக்க பலமா இசைங்கிற வெஜிடபிள வெட்டிக் கொடுத்த யுவனுக்கும் ஒரு அப்ளாஸ்.


                          

கதை
                             ஒரு ஊர்ல ஒரு அண்ணன் தம்பி, அப்படியே அலப்பறை பண்ணிக்கிட்டு ஊர் சுத்திகிட்டு இருக்கிறாங்க. போற போக்குல ஒரு குத்துவிளக்கை பார்த்து அண்ணன் மனச பறிகொடுக்க தம்பியின் ஐடியாவால் காதலியின் மனசுல சீட் போடறார். ஆனா ஒரு கட்டத்துல அதே தம்பியால இவங்க காதல் பிரியவும் செய்யுது. வானவராயன் "வைத்தீஸ்வரி"ய கண்ணாலம் கட்டிகிட்டாரா இல்லையான்னு சொல்றது தான் கதைங்கோவ்..!

                              'என் தம்பிகள நான் அடிப்பேன், யாரும் கேக்கக் கூடாது. என் தம்பிகள யாராவது அடிச்சா நான் கேப்பேன்" ன்னு பசும்பொன் படத்துல பிரபு ஒரு டயலாக் பேசுவார். அதே போலத்தான் இந்த பிரதர்ஸும் அடிச்சுகிட்டே பாசத்தை பொழியறாங்க.. பட் ஒரு கட்டத்துல இவங்க சண்டையில வெறுப்படையறது ஊர் மக்களோட சேர்ந்து நம்ம ஆடியன்ஸும் தான்! ஆனா அந்த முதல் பாதி மொக்கைகள்  பின்பாதிக்கு வலுசேர்க்கும் போது அந்த வெறுப்பை மறந்து ரசிக்க ஆரம்பிச்சுடறாங்க. என்னமோ போங்க, இப்படி தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத ஒரு கதையை கொடுத்த ஆனந்தத்துல புரொட்யுசர் இனி நிம்மதியா தூங்குவார்..!
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           கிருஷ்ணா கழுகு, யாமிருக்க பயமேன்  படங்களில் நன்றாக நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இடம்பெறவில்லை. இந்தப் படம் அவருக்கு பி & சி சென்டர் ரசிகர்களை பெற்றுத் தரும். அண்ணன் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மெருகேறி விடுவார். மா பா க ஆனந்த்- சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு புரொமோஷன். முதல் படத்துக்கு ஒக்கே. ஆனா தொடர்ந்து நடிக்க நிறைய ஒர்க் அவுட் செய்ய வேண்டும். கிளைமாக்ஸ் காட்சி தவிர மீதி காட்சிகளில் எல்லாம் சுமார் ஆக்டிங் தான். ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, கோவை சரளா, மீரா கிருஷ்ணன், எஸ்.பி.பி சரண் வந்து போகிறார்கள்.

                             மோனல் கஜ்ஜர்- ஒரு அறிமுக நாயகிக்கு ஒரே நாளில் இரு படங்கள் வெளியாவது தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை என நினைக்கிறேன். அழகு, நடிப்பு, உடல்மொழி, உதட்டசைவு இப்படி எல்லாவற்றிலும் கோட்டை விட்ட போதும் எதோ ஒன்று நம்மை உத்துப் பார்க்க வைக்கிறது. அது அவருடைய பளீர் சிரிப்பு. அம்மணி கோடம்பாக்கத்தில் கரையேற பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பின் சௌகார் ஜானகி, பேரனிடம் அவன் காதலிக்கும் பெண்ணுக்கு லிப் டூ லிப் கொடுக்க சொல்லும் தமிழ் சினிமாவின் அபத்தங்களுக்கு பலியான அபலைப் பாட்டி.

                               

இசை- இயக்கம்
                              யுவன் இசை படத்திற்கு பக்க பலம். முதல் பாதியில் திகட்ட திகட்ட ஒலிக்கும் பாடல்களும் பின்னணி இசையிலும் படத்தை தாங்கிப் பிடிக்கிறார். இயக்குனர் இராஜமோகனின் திரைக்கதை பலம் கதையின் பலவீனத்தை மறைக்கிறது. ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் எண்பதுகளின் 'குடும்ப' மசாலா படத்தை இன்றைய டாஸ்மாக் இளைஞர்களோடு சேர்த்து படைத்திருக்கிறார்.



                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                பாடல்கள் பார்ப்பதை விட கேட்பதற்கு இனிமை. சில பாடல்களின் நடன அசைவுகள் ரசிக்கும்படி இருந்தன. இன்னொரு பிரபலத்தின் காமெடி செம்ம ரகளை. மொத்தத்தில் வானவராயன் வல்லவராயனை ஒருமுறை பார்க்கலாம்..!

                         


Aavee's Comments -  Brother-O-phobia!

Friday, September 5, 2014

ஆசிரியர் தின வாழ்த்துகள்!




புத்தகங்களை காதலிக்க 
கற்றுத் தந்த தேவதை-என் தாய் ,
அக்க்ஷரங்களை அச்சில் வடித்தது போல் எழுதி
எழுத்தின் பால் ஈர்ப்பை உண்டாக்கிய தந்தை,


ழகும் அறிவும் ஒரு சேர பிரம்மன் படைத்திட்ட
என் முதல் குரு ஆஷா (மிஸ்) 
உயரம் என்பது உடலில் இல்லை, மனதில் தான் என
விளங்கவைத்த ஆங்கில ஆசிரியர் டேவிட்


ணிதத்தை கசடற 
கற்றுக் கொடுத்த போதும் 
பத்து மதிப்பெண்ணை விழுங்கிய போது 
கண்டித்த மோகன் மாஸ்டர்


ரீட்சை தாளில் என் பெயர் கண்டதும்
நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது என்று 
மதிப்பெண் போட்டுவிட்டு உள்ளே திருத்த ஆரம்பித்து
என்னுள் தன்னம்பிக்கையை விதைத்த காஞ்சனா மேடம்,


க மாணவன் போல்,
தோளில் கைபோட்டு,
Friend, Philosopher, Guide என எல்லாமாய்
என்னை வழிநடத்திய பென்சன் சார்,


ந்நிய தேசத்தில் திக்கு
தெரியாமல் தவித்த எனக்கு 
வாழ்க்கையின் நெளிவு சுளுவுகளை எட்டநின்று 
கற்றுக் கொடுத்த என் சகோதரர் ரமேஷ்,


ஹாஸ்ய உணர்வை சுவாரஸ்யமாய் பகிர்தல் என்ற 
கலையினை ஐநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து
ஏகலைவன் போல் நான் கற்றுக் கொண்ட
பதிவுலக 'வாத்தியார்' பாலகணேஷ்


மேற்சொன்ன அனைவருக்கும் மட்டுமேயன்றி எனக்கு கல்வியையும், வாழும் முறைகளையும் தினமும் 
கற்றுத் தரும் ஆசான்கள் அனைவருக்கும் 
என் ஆசிரியர் தின வாழ்த்துகள்!


Thursday, September 4, 2014

சலவைக்காரரின் மனைவி..!


                       வழக்கமா நான் துணிகளை மொத்தமாக இஸ்திரி போடுபவர்களிடம் கொடுப்பது வழக்கம். சென்னையில் தங்கி பணிபுரிந்த போது தொடங்கிய பழக்கம் அது. ஆனால் அமெரிக்கா சென்ற பொழுது 'தன் கையே தனக்கு உதவி' என்ற நிலைக்கு தள்ளப்பட்டு என் உடைகளை நானே இஸ்திரி போட பழகிக் கொண்டேன். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய அன்றைய தினம் ஏர்போர்ட்டில் ஒரு டீ குடித்துவிட்டு அந்த யூஸ் அண்ட் த்ரோ க்ளாஸை தூக்கி எறிய ஒரு குப்பை தொட்டியை தேடிக் கொண்டிருந்தேன். நான் அங்குமிங்கும் அலைவதை பார்த்த என் நண்பன் வேகமாக வந்து என்னவென்று  வினவ நானும் குப்பைத் தொட்டியை வலை வீசாமல் தேடிய கதையை சொல்ல வேகமாக என் கையிலிருந்து பறித்து  அருகிலிருந்த ஒரு சுவற்றுக்கு அருகே வீசினான். மேலும் என்னைப் பார்த்து "இது அமெரிக்கா இல்ல தம்பி, இந்தியா" என்ற உபதேசம் வேறு.




                 வேறு சில அனுபவங்களும் கிட்டியபின் இந்தியாவில் 'வாழும்' முறையை கடைபிடிக்க தொடங்கினேன். இயன்றவரை எல்லாவற்றையும் சுயமாக செய்துகொள்ளும் பாடத்தினை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தேன். அப்படித்தான்  வெளியில்  இஸ்திரி போடக் கொடுக்கும் வழக்கம் மீண்டும் ஆரம்பித்தது. சுமார் ஒரு வருடங்களுக்கு மேல் எங்கள் வீட்டின் அருகே சலவைக்காரர் ஒருவர் வருவார். துணிகளை மட்டும் வாங்கிக் கொண்டு வேறு எதோ ஒரு தெருவில் நிறுத்தி வைத்திருக்கும் அவர் வண்டியில் இஸ்திரி போட்டுக் கொண்டு வருவார். பெரும்பாலும் ஞாயிற்றுகிழமை காலை வந்து துணிகளை வாங்கி செல்வார்.. ஞாயிறு மாலை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்து விட்டு பணத்தை பெற்று செல்வார்.
  
               ஆறேழு மாதங்களுக்கு முன்னர் எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை போடுகிறேன் பேர்வழி என்று மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பாதையை தோண்டிப் போட்டுவிட்டு மோடியா, ராகுலா என்ற சர்ச்சையில் எங்கள் தெருவை முற்றிலும் மறந்து விட, சாலையின் நடுவே தோண்டிய பகுதி போக ஓரத்தில் ஒரு டூவீலர் மட்டும் செல்லக் கூடிய அளவிற்கு பாதையை போனால் போகட்டும் என்று விட்டுப் போயிருந்தார்கள். அவ்வழியே டூ-வீலரில் வரும் போது எக்காரணம் கொண்டும் காலை ஊன்றி விடக் கூடாது.. மீறி ஊன்றினால் கார்பொரேஷன் தோண்டிய குழியின் ஆழத்தை அளந்துவிட்டு வரலாம். ஆறு மாதம் கழித்து தெருவோரம் இருந்த செடியில் இரு இலைகள் துளிர்த்து, இந்தியா ஒளிரத் தொடங்கிய போது மீண்டும் அந்த குழிகளை அடைக்க வந்தனர். அதற்குள்ளாக எங்கள் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் "ஜெமினி சர்க்கஸில்' சேரும் அளவிற்கு அபரிமிதமான தேர்ச்சி பெற்றிருந்தனர்.

                இந்த ஆறு மாதத்தில் தன் தள்ளுவண்டியை தெருக்களுக்குள் கொண்டு வர முடியாத காரணத்தால் தன் இஸ்திரி தொழிலை எங்கள் வீட்டிலிருந்து சுமார் அரைக் கிலோமீட்டர் தொலைவில் ஓரிடத்தில் வைத்து தேய்த்துக் கொண்டிருந்தார். நானும் கொஞ்சம் கொஞ்சமாக காந்திய வழிக்கு திரும்பிக் கொண்டிருந்த்தேன். சென்ற ஞாயிறன்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது எதேச்சையாக அந்த இஸ்திரி கடை கண்ணில் பட்டது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவரிடம் சென்று "எங்கண்ணே, முன்ன மாதிரி வீட்டுப் பக்கம் வர்றதில்ல?" என்றேன். அவர் என்னைக் கண்டதும் முகம் மலர்ந்து "எங்க தம்பி, குழிய வெட்டிப் போட்டுட்டு எங்கயும் போக முடியல" என்றார். நானோ "சரி, அயர்ன் பண்ண துணியிருக்கு, வாங்க" என்று சொல்லிட்டு வந்தேன். "சரிங்க, தம்பி" என்று அவர் கூறியபோது நான் காரை கிளப்பியிருந்தேன்.


                மறுநாள் காலை அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறக்க அங்கே ஒரு பெண்மணி நின்றிருந்தார். சுமார் முப்பத்தியைந்து நாற்பது வயதிருக்கலாம். எங்கேயோ பார்த்த ஒரு உணர்வு. "சொல்லுங்க' என்று சொல்ல வாயெடுத்து பின் அவர் அந்த சலவைக்காரரின் உடன் நின்றிருந்த பெண்மணி என தெரிந்து கொண்டேன். "துணி வாங்கிட்டு போக வந்தீங்களா?" என்றேன். ஆமாம் என்பது போல் அவர் தலையாட்ட, 'இருங்க' என்று சொல்லிவிட்டு உள்ளுக்குள் சென்று கைக்கெட்டிய நான்கைந்து துணிகளை எடுத்து அவரிடம் கொடுத்தேன். வழக்கமாக அவர் தான் வருவார். இந்தப் பெண்மணி இதற்கு முன் வந்து பார்த்ததேயில்லை. துணிகளை வாங்கிக் கொண்டு சாலையின் வளைவில் திரும்பினார். மீண்டும் உள்ளே வந்த நான் சில சட்டைகள் அடுத்து வரும் பயணத்துக்கு தேவையென்பதால் அதையும் அயர்ன் செய்யக் கொடுத்திருக்கலாமே என்று என்னை நானே திட்டிக் கொண்டு அந்த உடுப்புகளை எடுத்து அடுத்த முறை கொடுக்க வேண்டி எடுத்து வைத்தேன். அவற்றில் சில ஓரிரு முறை மட்டுமே பயன்படுத்திய புதிய உடுப்புகள்.

                 சரியாக அரை மணி நேரத்தில் திரும்பி வந்த அந்தப் பெண் துணியை கொடுத்துவிட்டு 'முப்பத்தியைந்து' என்றாள். 'கொஞ்சம் இருங்க', என்று கூறிவிட்டு எடுத்து வைத்திருந்த உடைகளை அவரிடம் கொடுத்து விட்டு கையில் சில்லறை இல்லாததால் ஐம்பது ரூபாயை கொடுத்தனுப்பினேன். அந்த புத்தம்புதிய நோட்டில் இருந்த காந்தி அந்தப் பெண்மணியின் இரவிக்கைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டார். அன்று மாலைக்குள் கொண்டு வந்தால் பேக்கிங் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று தயார் நிலையில் இருந்தென். மாலையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்த என்னை ஏக்கத்துடன் பார்த்த சூரியன், நான் தேநீர் தராததால் கோபித்துக் கொண்டு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்.  மீண்டும் காலையிலாவது ஏதாவது கொடுப்பேன் என்று நம்பிக்கையோடு என் ஜன்னல் வழி வர எத்தனித்த சூரியனை ஸ்க்ரீனை இழுத்து மறைத்து உதாசீனப் படுத்தி அனுப்பிவிட்டேன். 
.
               இரண்டு நாட்கள் போனது. இஸ்திரிக்கு கொடுத்த துணி இன்னும் வரவில்லை. நான் என் டூ-வீலரை  எடுத்துக் கொண்டு அவர் அயர்ன் செய்யும் எல்லா வீதிகளிலும் (தள்ளு வண்டியில் அவர்களை நான் பார்த்த எல்லா வீதிகளையும்) தேடினேன். எங்கேயும் தட்டுப்படவில்லை. என்னோடு ஏற்கனவே பகை கொண்டிருந்த சூரியன் தலைக்கு மேல் நின்று டார்ச்சர் கொடுக்க சோர்வோடு வீடு திரும்பினேன். உடம்பில் உஷ்ணக் காற்று வீச, மனசோர்வுடன் உடைகள் திரும்ப கிடைக்குமா, கிடைக்காதா என்று என் சோகத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு, உறங்கிப் போனேன். 


                 இன்று அதிகாலை மீண்டும் ஒருமுறை அவர் இஸ்திரி போடும் இடத்திற்கு சென்று பார்க்க அங்கே அவருடைய காலி வண்டி மட்டுமே நின்றிருந்தது. என்னுடைய விதியை நினைத்து நொந்து கொண்டே அந்த சலவைக்காரரின் மனைவியை முதல் முறையாய் சபிக்கத் துவங்கினேன். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இப்படி போனதே என்று வருத்தப் பட்டேன். மதியம் உணவருந்திக் கொண்டிருந்த போது அழைப்பு மணி அடித்தது. ஓடிச்சென்று பார்க்க அங்கே அந்தப் பெண்மணி என் துணிகளோடு நின்றிருந்தார். 'எங்கே ரெண்டு நாளா காணோம்?' என்றதற்கு 'அவருக்கு சொகமில்லீங்க' என்று கூறியபடி துணிகளை கொடுக்க நான் மீதி பணத்தை கொடுத்தேன். அவர் எனக்கு பத்து ருபாய் திரும்ப தர வேண்டும். 'வேணாம் வச்சுக்குங்க' என்றேன். 'உழைச்ச காசு தாங்க ஒடம்புல ஓட்டும்' என்று கூறியபடி பத்து ரூபாயை என்னிடம் கொடுக்க அதிலிருந்த காந்தி என்னை கைநீட்டி அறைந்தது போல் உணர்ந்தேன்.


                                             *************oo**********oo*************

               

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...