Wednesday, February 13, 2013

காதலில் சொதப்பியது எப்படி?? (கண்டதும் காதல்.. Love at First Sight - 18+)

கண்டதும் காதல்.. 

                     

                          "Love at First Sight" என்பதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவளைக் கண்ட மறுநிமிடமே என் மனதைப் பறிகொடுத்தேன். நான் என் வாழ்வில் சந்தித்த பெண்களிலேயே இரண்டாவது பேரழகி இவள்தான் என எண்ணினேன்.. அவள் எனைப்பார்த்து  மெல்லச் சிரித்தபோது இளமைததும்பும் அவள் கன்னத்தில் குழிகள் விழுவதைக் கண்டேன்.. (ஒ! அங்கேதான் நான் விழுந்து விட்டேனா?? )


                                   அவளை மீண்டும் மீண்டும் காண உள்ளம் துடித்தது.  அவள் ஓய்வு அறையில் தன் சக பணியாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவள் அமர்ந்திருந்த இருக்கை  சன்னல்களின் ஊடே வெளியே மரத்தின் அருகே இருந்த எனக்கு தெளிவாக தெரிந்தது. அவள் என்னைப் பார்த்திரா வண்ணம் மறைந்திருந்து அவளை ரசித்தேன்.. அவளுடன்  பரிச்சயப் படுத்திக் கொள்ள வேண்டி அவ்வப்போது எதையாவது கேட்டுக் கொண்டிருந்தேன்.. என் அதிர்ஷ்டம் அவளுக்கும் என் செய்கைகள் பிடித்திருந்தது.                                    இப்படியே சில நாட்கள் கடந்தது, அவள் இப்போது என் மிகவும் நெருங்கிய தோழியாகிவிட்டாள். உலகின் பேரழகி என் தோழி என்ற பெருமிதத்தில் என் சந்தோஷம் கரைபுரண்டோடியது. ஆனால் இந்த சமயத்தில் காதலுக்கும் தோழமைக்கும் உள்ள வேறுபாடறிய மனம் ஒப்பவில்லை. இருவரும் நிறைய பேசினோம். அவற்றில் பெரும்பாலும் சினிமாவைப் பற்றியதாய் இருந்தது. (ஆம், சினிமா எனும் புள்ளியில் இருவரும் ஒன்றாய் சங்கமித்தோம் என்றே சொல்லலாம் ) அவளுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ள தீரா ஆவல் கொண்டேன். அவளுக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு இஷ்டம். அப்புறம் மல்லிகைப்பூ, நீல நிற சுடிதார் இப்படி பலப்பல.. அவள் தந்தை பெரிய செல்வந்தாராயிருந்ததால் இந்த வயதிலயே பல நாடுகளை சுற்றி வந்திருக்கிறாள். ஆங்கிலம், தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் உருது பாஷைகள் அவளுக்கு தெரிந்திருந்தது எனக்கு ஆச்சர்யம்.                                   ஆரம்ப நாட்களில் அவளின் குழிவிழும் கன்னங்களும் அவள் புற அழகுகளும் என்னை ஈர்த்தது என்றாலும் இப்போது நான் அவளை பார்க்கும் பார்வையில் மாற்றம் இருந்தது. அவளின் தனித்திறன்களின் மேல் ஏற்பட்ட மரியாதை.. அவள் சுறுசுறுப்பை கண்டபோது ஏற்பட்ட வியப்பு, அவளால் நிச்சயம் எந்த ஒரு மனிதரையும் தன்வயப் படுத்த முடியும் என்றே நம்பினேன். இவை எல்லாவற்றையும் விட மற்றவர்களுக்கு உதவும் அவள் குணமும், தான் அழகு என்ற தலைச்செருக்கும் இல்லாதது எனக்குப்  பிடித்திருந்தது.                                    இவை எல்லாவற்றையும் விட அவள் மற்றவர்களை விட எனக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தது மிக மிகப் பிடித்தது. இவ்வளவு அடுத்திருந்தும் அவளிடம் என் காதலை சொல்ல முடியவில்லை. நான் அவளை எவ்வளவு நேசித்தேன் என்பதை சொல்ல மூன்று லட்சம் வார்த்தைகள் உள்ள தமிழில் ஒன்று கூட சிக்கவில்லை. இதற்கு  முன் காதலை கமலஹாசனின் திரைப்படங்களில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். எனக்கென்று வரும்போது என்னவொரு அவஸ்தை.  அது மட்டுமல்ல அவளும் என்னை நேசிக்கிறாளா என்பதும்  தெரியவில்லை.

                                    
                                       இப்படி மகிழ்ச்சியில் நான் திளைத்துக் கொண்டிருந்த போது  ஒரு இனிய மாலை நேரத்தில் அவள் எனக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டு ஒரு அமீர் கானின் படத்தின் கதையை கூறிக் கொண்டிருந்தாள். அவள் தோள்கள் என் மீது சாய்ந்திருந்தது. காதல் ரசம் சொட்டும் அந்த படத்தை அவள் சொன்னபோது  என் மனதுக்குள் மூடி போட்டு வைத்திருந்த காதலும் பீறிட்டு வெளியே வந்தது.  எப்படியும் என் காதலை சொல்லிவிடுவது என எண்ணியபடி நான் அமர்ந்திருந்த போது தான் அது நடந்தது.
             
                                          கதை சொல்லிக் கொண்டே அவள் என் கரங்களைப் பற்றி அவள் இதயத்திற்கு மிக அருகில் வைத்துக் கொண்டாள். கதையை முடித்து விட்டு என் கண்ணோடு கண் நோக்கினாள். அவளின் இரு கைகள் கொண்டு என் முகத்தை அவள் பக்கமாக திருப்பினாள். அவள் கண்களில் ஓரிரு துளி கண்ணீர் பனித்திருப்பதை கண்டேன். சட்டென்று என் நெற்றியில்  முத்தமிட்டு "I'll miss you a lot" என்றாள். ஒரு கணம் உலகம் சுற்றுவதை நிறுத்திவிட்டது போன்றதொரு பிரமை. அதிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் முத்தமிட்டாள். இந்தமுறை என் கன்னங்களில்.. இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்த மழை பொழிந்துவிட்டு வேகமாய் அந்த இடத்தை விட்டு ஓடிச் சென்றாள். செய்வதறியாது திகைத்தபடியே சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்தேன். 

                                       
                                     மறுநாள் காலை முழுதும் விலகாத தூக்கத்தினின்றும் என் அம்மா கூறியதைக் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன். "அவளுக்கு" திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதென்றும், மாப்பிள்ளை சவுதி அரேபியாவில் பெரிய செல்வந்தர் என்றும் கூறினார். இந்த செய்தி என் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அவள் இப்படி செய்வாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.  அவள் என்னை விட்டு பிரிய  காரணம்  என்னவாக இருக்கும் என எனக்கு முழுதாக விளங்கவில்லை.. மொழியா ?? (அவள் பல மொழிகள் பேசினாள், எனக்கோ தமிழும் ஆங்கிலமும் மட்டும் தான் தெரியும்.)   நிறமா??  (அவள் வெள்ளை, நான் மாநிறம்)  உயரமா??  (அவளை விட நான் சற்று உயரம் குறைவு)  வயதா ??  (அவளுக்கு  இருபத்தியைந்து, எனக்கு பத்து) எதுவென்று புரியவில்லை அப்போது எனக்கு..!                
21 comments:

 1. காதலுக்கு வயதில்லை என்றால் போதாத வயது !

  அருமை..அருமை !

  ReplyDelete
 2. கடைசி வரியில் ட்விஸ்ட்... அருமை....

  ReplyDelete
 3. என்னங்க... இப்படி ஆகிப் போச்சி...?

  ReplyDelete
 4. மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திரில்லர் காதல் கதை.
  கிளைமாக்ஸ் ‘சுஜாதா’டச் இருந்தது.

  ReplyDelete
 5. அடேய்...மச்சி...செம ட்விஸ்ட்....

  ReplyDelete
 6. ஆரம்பம் அமர்க்களம்

  முடிவு பெரும் ஆரவாரம் சுவாரசியமான கதையின் முடிவு பெரும் நகைப்பு என்றாலும் சொன்ன விதம் அருமை

  வாழ்த்துக்கள் உங்கள் காதல் கைகூட

  ReplyDelete
 7. ஒரு கொயந்த பையனின் காதல்...தண்ணீரில் எழுதிய எழுத்தில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

  ReplyDelete
 8. சுவாரஸ்யமா கொண்டு சென்று சொதப்பிட்டீங்களே! வித்தியாசமான முடிவு!

  ReplyDelete
 9. Aavee's twist at his very best..! Xpected a twist but certainly not like this..

  ReplyDelete
 10. ரமேஷ், காதலுக்கு ஏதுங்க வயசு!

  ReplyDelete
 11. ஸ்கூல் பையன் - நன்றி..

  ReplyDelete
 12. தனபாலன்- ஆமாங்க, பயங்கர பீலிங்க்ஸ் ஆயிடிச்சு..

  ReplyDelete
 13. பாஸ்கர் சார்- ஆஸ்கர் அவார்ட் வாங்கின மாதிரி பீல் பண்றேன் நீங்க சொன்னத கேட்டு...

  ReplyDelete
 14. ஜீவா-- மச்சி.. ட்விஸ்டுக்கு நடுவுல அவன் சோகத்தை எல்லோரும் மறந்துட்டாங்க..

  ReplyDelete
 15. சரளா- பெண்கள் சார்புல நீங்கதான் மொதல்ல பிடிச்சிருக்குன்னு சொல்லிருக்கீங்க.. சந்தோசம்..

  ReplyDelete
 16. கலாகுமாரன் சார்- நீங்க சரியா புரிஞ்சுகிட்டீங்க.. பசுமரத்தாணியாய் என் மனதில் பதிந்த என் முதல் காதல் அது.. :-)

  ReplyDelete
 17. சுரேஷ்- என்னங்க பண்றது, அதுதானே நடந்தது... :-(

  ReplyDelete
 18. Rahul, Glad you liked it.. But I have mentioned 18+ in the title.. how come you were there??? ;-)

  ReplyDelete
 19. மிகவும் ரசிக்க வைத்தது

  ReplyDelete
 20. கதைக்கு வித்தியாசமான முடிவு வேண்டும் என்றே இறுதியில் இப்படி எழுதினீர்களா...? உண்மையில் முடிவு எதார்த்தத்தை மீறியதாக இருந்தது.

  முடிவைத் தவிர்த்து அனைத்து வரிகள் ஒவ்வொன்றிலும் அனு அளவும் பிசகாத காதல் ரசத்தை பிழிந்து வைத்திருக்கிறீர்கள்.

  அருமை...

  ReplyDelete
 21. கடைசியில் நல்ல திருப்பம்! அதுசரி, பத்து வயதில் நான் சந்தித்த இரண்டாவது பேரழகி? அப்போ முதல்? அம்மா?

  பத்து வயது என்பது ஒரு ட்விஸ்ட்டுக்காக எழுதி இருந்தாலும் எல்லோருடைய முதல் காதலும் மனதில் நிற்கும்தான்.

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails