Monday, January 14, 2013

ஆவி சந்தித்த ஆவி..!

                                               
                                             ஆவி, பேய், பூதம் எல்லாவற்றையும் வெறும் கற்பனை கதாபத்திரங்களாகவும், காமெடி பீஸுகளாகவும் தான்   எப்போதுமே நான் பார்த்திருக்கிறேன், இந்த சம்பவம் என் வாழ்வில் நடக்கும் வரை.. 


                                              அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம். ப்ராஜக்ட் ரிப்போர்ட் பிரிண்டிங்கிற்கு கொடுத்திருந்தோம். மற்ற நண்பர்கள் வேறு வேலைகளில் பிஸியாகிவிட எங்க டீமோட ரிப்போர்ட்டை பிரிண்ட் செய்து வாங்கி வரும் கடமை என் தலையில் விழுந்தது. இதற்காக நான்  எங்கள் கிராமத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த கோவைக்கு செல்ல வேண்டியிருந்தது.  அடுத்த நாள் விரிவுரையாளரின் ஒப்புதலுக்கு கொடுக்க வேண்டியிருந்ததால் இரவு நெடு நேரமாகிவிட்ட போதும் அங்கேயே இருந்து வாங்கி வர முடிவு செய்தேன்.

                                              
                                             இரவு பன்னிரெண்டரை ஆன போது ஒரு வழியாக பிரிண்டிங் முடித்து எல்லாவற்றையும் என் புத்தகப் பையில் திணித்துக்   கொண்டு மானசாவுடன் ( என்னுடைய ஸ்ப்ளெண்டர் ) கிளம்பத் தயாரானேன். வண்டியின் டிஸ்ப்ளே பேனலை பார்த்தேன். பெட்ரோல் E  க்கு மிக அருகில் இருந்தது. அப்போது தான் வரும்போதே பெட்ரோல் ரிசர்வ் விழுந்ததும், மீண்டும் பெட்ரோல் போட மறந்ததும் நினைவுக்கு வந்தது. இருந்த போதும் வீடு திரும்பும் வரை தாங்கும் என்ற நம்பிக்கையோடு வண்டியை கிளப்பினேன்.  

                                         
                                              புறப்பட எத்தனித்த போது மாலையில் என் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. " சீக்கிரம் திரும்பி வந்துடுடா.. ரொம்ப நேரம் பண்ணிடாதே. வண்டிய வேகமா ஒட்டாதே..பூலுவபட்டி  தாண்டி வரணும். லேட் பண்ணிடாதே" என்றார்.  பூலுவபட்டி   என்பது மயானங்கள் நிறைந்த ஒரு கிராமம். சுமார் அரைக் கிலோமீட்டருக்கு கல்லறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.  மேலும் அங்கே  ஒரு எட்டு மணி சுமாருக்கு மேல் ஆள் நடமாட்டமும் குறைவாக இருக்கும். பொதுவாக இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் கூட்டம் கூட்டமாகத்தான் செல்வார்கள். எனக்கு என் மேல் இருந்த மன தைரியத்தில் நான் கிளம்பினேன். 


                                             வழக்கமாக ஏதாவது ஒரு சினிமா பாடலை முணுமுணுத்துக் கொண்டே வண்டி ஓட்டுவது என் வழக்கம். அன்றும் அதே போல் பாடிக் கொண்டே வண்டியை செலுத்தினேன். என்னவோ தெரியவில்லை அன்று என் வாயில் வந்த பாடல்கள் எல்லாம் "வேதாளம் வந்து நிக்குது" "நானே வருவேன்" " வானுயர்ந்த சோலையிலே" போன்ற பாடல்கள். இப்படியே பாடிக் கொண்டு மாதம்பட்டி எனும் இடத்தை அடைந்தேன்.. இந்த இடத்திலிருந்து முன்பு கூறிய பூலுவபட்டி  முடியும் வரை தெருவிளக்கு கிடையாது.


                                            வண்டியின் ஹெட்லைட் மட்டும் உதவ ( அன்று அமாவாசை தினம் வேறு) என் பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று வண்டி இஞ்சின் அடைப்பது போன்ற ஒலியுடன் திக்கி திக்கி நின்று விட்டது. இருமுறை கிக்கரை உதைத்தும் பயனில்லை. வண்டி ஸ்டார்ட் ஆவது  போல் தெரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன், நான் பூலுவபட்டியை நெருங்க சிறிது  தொலைவே இருந்தது. என்னையும் அறியாமல் ஏதோ ஒரு பயம் மனதுக்குள் உரச, சில்லென்ற இரவு நேரத்திலும் என் நெற்றியில் வியர்வைப் பூக்கள். 


                                           வண்டியை விட்டிறங்கி வண்டியை மெல்ல சாய்த்தேன். இப்போது சோக்கை(Choke ) போட்டு வண்டியை உதைத்ததும் வண்டி ஸ்டார்ட் ஆனது.. சற்று தூரம் கடந்ததும் தொலைவில் யாரோ நிற்பது போலவும், லிப்ட் கேட்பது போலவும்  எனக்குத் தோன்றியது. மிகவும் இரவு வேளையாதலால் இதற்கு மேல் பேருந்து போக்குவரத்தும் கிடையாது.  நடந்து போவதும் இந்த இருட்டினில் இயலாத காரியம். ஆதலால் அங்கே நிற்கும் நபருக்கு உதவி செய்வது எனத் தீர்மானித்தேன், மேலும் என் வழித்துணைக்கு ஒருவர் கிடைத்த சந்தோசம் வேறு.


                                           அவர் அருகில் சென்று வண்டியை நிறுத்திய போதுதான் அவரை கவனித்தேன். ஆறடி ஐந்து அங்குலம் உயரம் இருக்கும். கருப்பான தேகம். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடனும் கையில் ஒரு மஞ்சள் பையுடனும் நின்றிருந்தார். அவரிடம் " எங்க போகனுண்ணா" என்று கேட்டேன்.. அதற்கு அவரோ "இருட்டுப் பள்ளம்" என்றார். அவரது குரல் கடுமையாகவும், அதே சமயம் இரண்டு பேர் பேசினால் வரக்கூடிய ஒருவித சப்தத்துடனும் ஒலித்தது. " நான் ஆலாந்துறை வரைக்கும் தான் போவேன். அங்கே நீங்க இறங்கிக்கோங்க" என்றபடி அவரை பின்னால் ஏற்றிக்கொண்டு வண்டியைக் கிளப்பினேன்.  அங்கிருந்து பல கேள்விக் கணைகளை  அவரிடம் தொடுத்தேன். நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. நான் திரும்பிப் பார்த்த போது அவர் கண்கள் மிகவும் சிவந்து இருந்தது போல் எனக்குத் தோன்றியது. சரி அவர் அதிகம் உரையாட விரும்பவில்லை போலும் என எண்ணிக் கொண்டு நான் பேசுவதை நிறுத்திவிட்டேன். வண்டி இப்போது பூலுவபட்டியை தாண்டிக் கொண்டிருந்தது. 


                                           நான் எப்போதும் என் பின்னால்  உட்காருபவர்களின் எடையை வண்டியின் இழுவையை  வைத்து தீர்மானித்துவிடுவேன். ஆனால் அன்றோ வழக்கத்துக்கு மாறாக பின்னால் ஒரு ஆள் உட்கார்ந்திருப்பதற்க்கான எந்த ஒரு அறிகுறியுமே எனக்கு தென்படவில்லை. அவ்வளவு உயரமான ஆள் நிச்சயமாக நல்ல எடையுடன் இருக்க வேண்டுமென்பது என் அனுமானம், இப்படி யோசித்துக் கொண்டே என் ஊரான ஆலந்துரையை அடைந்தேன்.  வண்டியை மெதுவாக நிறுத்திவிட்டு அவரிடம் "அண்ணே,  நீங்க இங்க இறங்கிக்கோங்க.. என் வீடு பக்கத்துலதான்" என்றபடி பின்னால் திரும்பிப் பார்க்க பின்னிருக்கை வெற்றிடமாய்க் காட்சியளித்தது. நெற்றியில் மீண்டும் வியர்வை அரும்பத் தொடங்க, வண்டியை வேகமாக வீட்டை நோக்கி செலுத்தினேன்.


                                              வண்டியை வாசலிலேயே நிறுத்திவிட்டு வீட்டின் கேட்டை எட்டிக் குதித்து உள்ளே சென்றேன். மனம் முழுவதும் இப்போது என் பின்னால் அமர்ந்திருந்தவரின் உருவமே வியாபித்திருந்தது.. அவருக்கு கால்கள் இருந்ததா இல்லையா என்று நான் சரியாக கவனிக்கவில்லை.  வேகமாக ஓடிப்போய் பூஜையறையில் இருந்து திருநீரை எடுத்து பூசிக் கொண்டேன். மனதிற்குள் கந்தர் சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தேன்.  இருந்த போதும் அவர் டிஜிட்டல் குரலில் "இருட்டுப் பள்ளம்" என்றது என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. எப்போது உறங்கிப் போனேன் என்றே நினைவில்லை.


                                               காலையில் அம்மா வழக்கம் போல் பெட் காப்பியுடன் வந்து எழுப்ப அவசர அவசரமாக எழுந்து கல்லூரிக்கு புறப்பட்டேன்.. முந்தைய நாள் நிகழ்ந்த சம்பவத்தை தாயிடம் சொல்ல பயந்தேன்.. அவர்களும் பயுந்துவிடுவார்கள், மேலும் அதற்கு மேல் இரவு நேரங்களில் வெளியே செல்ல அனுமதி கிடைக்காது என்பதால் அவரிடம் சொல்லாமலே என் புத்தக பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.. பஸ் ஸ்டாண்ட் கடந்ததும் சட்டென்று வண்டியின் பிரேக்கை அழுத்தி நிறுத்தினேன். என் கண்களையே நம்ப முடியவில்லை. நேற்றிரவு என் பின்னால் அமர்ந்திருந்த அதே நபர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார்.. தலையில் கட்டுடன்..!

                                                                                        

17 comments:

 1. தனக்கு வந்தால் தனே தெரியும் தலைவலியும் கால் வலியும். யாரு சொன்னாலும் நம்பாதமனம் நமக்கே நடக்கும் போது நம்பித்தானெ தொலைக்கிறது. நல்ல அனுபவம்தான்.

  ReplyDelete
 2. எனக்கு முதல்லேயே தெரிஞ்சிடிச்சி இருந்தாலும் கிளைமாக்ஸ் வரைக்கும் சஸ்பென்ஸ்...இந்த உண்மை சம்பவத்தை நடு நிசியில எழுதியிருப்பீங்களோ த்ரில் எபக்ட் குறையவே இல்ல!

  ReplyDelete
 3. பாவம் அப்பாவி ஒருத்தர கீழே தள்ளிவிட்டுட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேய் ,பூதம்னு அவரைச் சொல்லிட்டீங்களே நியாயமா ஆ.வி

  ReplyDelete
 4. kalaakumaran Sir.. you were right.. i was writing that at midnight. Thanks for the comments

  ReplyDelete
 5. ezhil madam, ippo sollum podhu comedy aa irukku.. but annaikku night naan patta avasthai irukkae, ayyyayyayyoo!!

  Thanks for your comments!

  ReplyDelete
 6. ha ha ha good one anand. You can very well write thrillers...:)

  Manasa?... ha ha... May we expect manathodu manasa post soon...:)

  ReplyDelete
 7. Thanks Bhuvana. எங்க ரொம்ப நாளா ஆள காணோம்னு பார்த்தேன்..

  ReplyDelete
 8. ஆன்ந்து... நம்ம மனசுதான் பேய், பிசாசு எல்லாம்ங்கறதுதான் என் கட்சி. நல்லா சுவாரஸ்யமா ஒரு சிறுகதை படிச்ச ஃபீலிங்கை உண்டாக்கிட்டீங்க. சூப்பருங்கோ!

  ReplyDelete
 9. பாலகணேஷ் சார், கதை உங்களுக்கு கதை பிடிச்சதுன்னு சொன்னது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

  ReplyDelete
 10. அன்பின் ஆவி - பதிவு நன்று - கற்பனையா அல்லது நடந்த நிகழ்வா- தெரியவில்லை- எழுதிய விதம் நடந்த நிகழ்வாகத்தான் காட்டுகிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. நிஜமாய் நடந்த நிகழ்வு தான் ஐயா..

   Delete
 11. திரில்லிங்கான அனுபவம் தான் ..!

  ReplyDelete
 12. ஹஹா அவர் பூதம் மாதிரி பின்னாடி உக்காந்துட்டு வந்தா இப்படி தான் நினைக்க தோணும்... அப்புறம் அவர் கிட்ட போய் பேசுனீங்களா?

  ReplyDelete
 13. ஆஹா.... பின்னால உட்கார்ந்திருந்தவர் கீழே விழ வைச்சிட்டீங்களா! ஆனாலும் நல்ல திகிலான அனுபவம் தான்! :)

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails